கே.வி. ஆனந்த், சரவணன் என்று எல்லா ஒளிப்பதிவாளர்களும் இயக்குனர்களாகி வருகிறார்கள். ஆர்.டி. ராஜசேகரும் வெயிட்டான இரண்டு கதைகளுடன் காத்திருக்கிறார். ஒருகதை சூர்யாவுக்கு. இன்னொன்று ஆர்யாவுக்கு!
துரதிர்ஷ்டவசமாக இரண்டு 'யா'க்களும் பிஸி! "யார் முதலில் கால்ஷீட் தருகிறார்களோ அவர்களை வைத்து இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பை தொடங்கிடுவேன்" என்றார் ஆர்.டி.ராஜசேகர்.
ஒளிப்பதிவாளர் இயக்குனராகும் போது, ஒளிப்பதிவு வேலையை பிறரிடம் கொடுப்பதுதான் பெரும்பாலானவர்களின் வழக்கம். "ஆனால், முதலிரண்டு படங்களுக்கும் நான்தான் ஒளிப்பதிவு செய்வேன். பிறகு இயக்கும் படங்களுக்கு நண்பர்களுக்கு வாய்ப்பளிப்பேன்" என்றார் ஆர்.டி.
'சத்யம்', 'சிங்கக்குட்டி' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவரும் இவர், ஜான் வூ - வின் தீவிர ரசிகர். ஹாங்காங்கில் 'பெட்டர் டுமாரோ' படத்தில் பிரபலமாகி, 'புரோக்கன் ஆரோ', 'பேஸ் ஆஃப்' 'மிஷன் இம்பாஸிபிள்-2', 'வின்ட் வால்கர்' என ஏகப்பட்ட சூப்பர்ஹிட் ஹாலிவுட் படங்களை இயக்கியவர் ஜான் வூ. இவரது படத்தில் கேமரா எப்போதும் நிலையாக இல்லாமல் அலைந்து கொண்டே இருக்கும்.
இந்த ஜான் வூ வின் ரசிகராம் ஆர்.டி.ராஜசேகர். அவரைப் போல் படம் இயக்குவதுதான் ஆர்.டி.யின் விருப்பமாம்.
|