மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் மருதநாயகம்
31.08.2005
By:JBR
கமலின் கனவு மருதநாயகம். ஒரு கட்டத்தில் கமலின் கனவு தமிழ் சினிமாவின் பெருங்கனவானது. இப்போது, கமலும் அவர் ரசிகர்களும் மட்டுமல்ல, இந்தியாவே எதிர்பார்க்கிறது மருதநாயகத்தை!
|
தமிழ் இந்தி மட்டுமின்றி ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் மருதநாயகத்தை எடுக்க கமல் விரும்புகிறார். இதனை செயல்படுத்த கமலின் பாஷையில் கூறினால் - டாலரில் பணம் தேவைப்படுகிறது. ஒன்றல்ல பத்தல்ல எழுபது கோடிக்கு மேல்!
இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்யும் வலிமையான தயாரிப்பாளர்கள் தமிழில் ஏன் இந்தியாவிலேயே இல்லை. வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனங்களுடன் கமல் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகள் எதுவும் கையெழுத்துவரை போகவில்லை. அதனால் புது ரூட்டில் மருதநாயகத்தை புதுப்பிக்க தீர்மானித்திருக்கிறார் கமல்.
இவரது 'மும்பை X பிரஸ்' பாக்ஸ் ஆபிஸின் கதவைகூட தட்டவில்லை. ஆனால், படத்தின் ஆடியோ, படம் தயாரிப்பில் இருக்கும்போதே இரண்டு லட்சங்கள் விற்றுத்தீர்ந்தன. இதில் ஒரு லட்சத்தை வாங்கியவர்கள் தீவிர கமல் ரசிகர்கள். இன்னொரு லட்சம் கேஸட்டுகளை வாங்கியது விகேன்!
விகேன்?
பிரபல மல்டிலெவல் மார்க்கெட்டிங் கம்பெனி. மல்டிலெவல் எனும் சங்கிலித்தொடர் வியாபாரத்தை தமிழ் சினிமாவில் கொண்டுவர விரும்புகிறார் கமல். விகேனின் விநியோகஸ்தர்கள் ஆளுக்கு சில ஆயிரம் கொடுத்தாலே நூற்றைம்பது கோடிகளுக்கு மேல் வரும். இந்த தொகையை மருதநாயகம் மூலம் திருப்பி வசூலித்தால்....? இதுதான் கமலின் திட்டம். இதற்கான பிள்ளையார் சுழி விகேனின் தேசிய மாநாட்டில் போடப்பட்டுள்ளது.
ஆக, கடைசியில் கமலின் கனவு நிறைவேறும் திசை பிரகாசமடைந்துள்ளது. வாழ்க, மல்டிலெவல் மார்க்கெட்டிங்!
|