விஜய் படம் விற்பனையில் சாதனை
- 31.08.2007
By JBR
ஒரே மாதிரியாக நடிக்கிறார், கெட்டப்பை மாற்றுவதில்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ரஜினி ரூட்டில் நூல் பிடித்த மாதிரி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார் விஜய். ரஜினிக்குப் பிறகு தயாரிப்பாளர் முதல் தியேட்டர் கேன்டீனில் பாப்கார்ன் விற்பவர் வரை அனைவருக்கும் இவரே அட்சய பாத்திரம்.
|
'ப்ரெண்டஸ்' படத்தின்போது விஜய்க்கு அடுத்தப் படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்தார் அப்பச்சன். இதோ அதோ என இழுத்தடித்து இப்போதுதான் விஜய் கால்ஷீட் கொடுத்து 'அழகிய தமிழ்மகன்' அப்பச்சன் தயாரிப்பில் உருவாகி வருகிறது. உறுமீனுக்காக காத்திருந்த அப்பச்சனின் தவம் வீண் போகவில்லை.
விஜய் பட வரலாற்றிலேயே அதிக அளவுக்கு, அதாவது இருபத்தைந்து கோடி ரூபாய்க்கு 'அழகிய தமிழ்மகன்' படம் விற்பனையாகியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை கொடுத்து படத்தை வாங்கியிருப்பது பிரமிட் சாய்மீரா நிறுவனம்.
விஜய்யின் 'போக்கிரி' கேரளாவில் கொடி கட்டிப் பறந்தது தெரியும். செகண்ட் ரிலீஸாக 'போக்கிரி' இப்போதும் திருவனந்தபுரத்தில் ஓடுகிறது. மலையாளிகளின் மனங்களில் இடம் பிடித்ததால் 'அழகிய தமிழ்மகன்' படத்தை கேரளா முழுவதும் வெளியிடுகின்றனர். ஆந்திராவிலுள்ள விஜய் ரசிகர்களும் கவலைப்பட தேவையில்லை. அங்கும் தமிழ்மகனின் தரிசனம் உண்டு.
தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளாவில் ஒரே நேரத்தில் வெளியாகயிருக்கும் 'அழகிய தமிழ்மகனு'க்கு மொத்தம் 250 பிரிண்டுகள் போட உள்ளனர். விஜய் படங்களை பொறுத்தவரை இதுவும் ஒரு சாதனை.
|