சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்த நரேன், ஒரு ஸாரியும் நிறைய நன்றிகளையும் சபையில் வைத்தார். திருமணத்திற்காக கேரளாவிற்கு அழைக்கமுடியாததற்கு ஸாரியும், சித்திரம் பேசுதடி முதல் தனக்கு கொடுத்துவரும் ஆதரவுக்காக நன்றியும் என அவரே விளக்கினார்.
அதெல்லாம் இருக்கட்டும் மஞ்சுவுடன் உங்களுக்கு காதல் பூத்த தருணம் பற்றி சொல்லுங்கள்? என கேள்விக்கு தாவினர் நிருபர்கள்
"ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கைரைலி டி.வி.யில் மஞ்சு தொகுப்பாளினியாக இருந்தபோதுதான் எனக்கு அறிமுகமானாங்க. முதல் பார்வையிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. ஆனா அது காதலா வேறெதுவுமா என்ற சந்தேகம் இருந்தது. இரண்டாவது முறையா மிஸ் கேரளா போட்டியில மஞ்சு கலந்துகொண்டபோது சந்தித்தேன். பொதுஅறிவு பிரிவுல விண் பண்ணினாங்க. அவங்களோட புத்திசாலித்தனம் என்னை கவர்ந்துவிட்டது. அப்போதுதான் நம்ம ஆளு இவங்கதான் முடிவு பண்ணினேன்."
பதிலுக்கு மஞ்சு என்ன சொன்னாங்க?
"முதல்ல எங்க வீட்டுக்கு அழைத்துச்சென்று அப்பா - அம்மாவிடம் அறிமுகப்படுத்தினேன். போகும்போது என் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கினாங்க. அதுதான் எனக்கான பதிலாக எடுத்துக்கொண்டேன்." நரேன் சொல்ல சொல்ல வெட்கமும் புன்னகையும் மாறிமாறி பிரதிபலித்தது மஞ்சுவின் முகம்.
'பள்ளிக்கூடம்' படம் பார்த்தீங்களா. 'இந்த நிமிடம்...' பாடலில் சினேகாவுடன் நெருக்கமா நடிச்சிருக்காரே நரேன்? மஞ்சு பக்கம் கேள்வி தாவியது.
"அதெல்லாம் தொழில். சினிமா வேற, வாழ்க்கைவேற. நரேனுக்கு நான் அன்பான மனைவியா நல்ல தோழியா இருப்பேன். அவருடைய முன்னேற்றத்திற்கும் சந்தோஷத்திற்கும் நானும் ஒரு காரணமா இருக்கப் போவதை நினைத்தால் பெருமையா இருக்கு." மலையாள தமிழில் உரையாடிய மஞ்சு, தேன் குரலுக்கு சொந்தக்காரர். 'சித்திரம் பேசுதடி' படத்தில் 'இது என்ன புது உலகம்...' பாடலை பாடியவர் இவர்தான்.
தேனிலவு எங்கே?
"ஹூம் இன்னும் போகல சார். ஷுட்டிங் இருந்ததால அவரசமா சென்னை வந்தோம். இனிமேதான் ப்ளான் பண்ணனும்" என மனைவி மீது ஓரப்பார்வை வீச, மஞ்சுவின் முகத்தில் மறுபடியும் வெட்கம்.
|