மருத்துவ கல்லூரி மாணவியான பாவனாவின் அண்ணன் பிரகாஷ்ராஜ் அரசியல்வாதிகளும் சலாம் போடும் சிட்டி தாதா. அண்ணன் தாதாவாக இருந்தால் அதற்கு நேர் எதிராகதானே தமிழ் சினிமா தங்கைகள் நல்ல பெண்ணாக இருபார்கள்? இதில் அப்படியில்லை.
பாவனாவுடன் கூட பிறந்தது பிரகாஷ்ராஜ் மட்டுமல்ல, திமிரும் தலை கனமும்தான். தன்னை பெண் கேட்டவனையே கம்பி எண்ணவைத்த கல்நெஞ்சக்காரி.
அண்ணனின் செல்வாக்கை பயன்படுத்தி கல்லூரியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாவனாவை அதே கல்லூரியில் படித்துவரும் மாதவன் எதிர்க்கிறார்.
மாதவனின் நிலைமை என்னவாகுமோ என்று நினைத்தால் நடப்பது வேறு. தனக்கு தண்ணி காட்டிய மாதவனின் வீரம் பாவனாவை ஈர்க்க, தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்துகிறார். மாட்டேன் என்று மறுக்கும் மாதவனுக்கு தொல்லைமேல் தொல்லை தருகிறார்.
என்ன செய்தும் தன் வலையில் விழாத மாதவனை ரவுடியாக மாற்றிக் காட்டுகிறேன் என பாவனா சபதம் போட, விறுவிறுப்பான இடைவேளை முடிந்து சுறுசுறுப்பான இரண்டாம் பகுதி ஆரம்பமாகிறது.
பாவனாவின் திட்டத்திலிருந்து மாதவன் தப்புகிறாரா இல்லையா என்பதே படத்தின் முடிவு.
பணத்திமிர் பிடித்த கதாநாயகிகளை பார்த்து சலித்த ஒன்றுதான் என்றாலும் வழக்கத்தை மீறி வித்தியாசம் தெரிகிறது திரைக்கதையில்.
குட்மார்னிங் கேட்டு நிர்பந்திக்கும் பாவனாவின் படுக்கையறைக்குள்ளேயே புகுந்து தண்ணீர் ஊற்றி எழுப்பி குட்மார்னிங்சொல்வதிலிருந்து ஆரம்பிக்கும் மாதவனின் பதிலடி அதிரடி. சிக்கல்களிலிருந்து தப்பிக்க திட்டம்போடும் மாதவன், பிரகாஷ்ராஜை அலைகழிக்க செய்வது சூப்பர் சுவாரஸ்யம்.
கொள்ளை அழகு முகத்திலேயே ஆனாவத்தையும் அகம்பாவத்தையும் பிரதிபலிக்கும் பாவனா கோபத்தில்கூட அழகாகதான் இருக்கிறார். மாதவனின் தங்கையை கடத்தி அவர் வரும்வரை ஐஸ்கிரீம் திண்ணச்சொல்லி தண்டிக்கும் இடத்தில் வில்லத்தனத்தில் பிரகாஷ் ராஜுக்கும் அக்காவாக பிண்ணியெடுக்கிறார்.
வெத்துவேட்டு வீரம் காட்டி இதிலும் உடம்பை புண்ணாக்கும் கதாபாத்திரம்தான் வடிவேலுவுக்கு. ஆனால் அவர் வாங்கும் ஒவ்வொரு அடியுலும் தியேட்டரில் ஏற்படும் சிரிப்பொலி சும்மா அதிருதுல்ல....
மாதவனை பாக்கும்போதெல்லாம் இடிக்கும் கவர்ச்சி மின்னலாக தேஜஸ்ரீ. நாயகனை என்கவுண்டரில் போட்டுதள்ளுவதாக சவால்விட்டு முறுக்கு மீசையை இழக்கும் போலீஸ் அதிகாரியாக பொன்னம்பலம்.
நீண்ட கால இடைவேளைக்குப் பிறகு கிடைத்திருக்கும் வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு ஆடியன்ஸை திருப்திபடுத்தியிருக்கிறார் இயக்குனர் பாலசேகரன்.
'நான் வேனுனம்னு சொல்றேன் நீ வேணும்னே சொல்ற', 'இந்த ஸாரில நீ ரொம்ப அழகா இருக்க. கட்டியிருக்கிற Saree யில மட்டுமில்ல நீ கேட்ட Sorry யிலும்தான்' என்பதுபோன்ற வசனங்கள் ஆரியாவில் அழகூட்டும் அம்சங்கள்.
'ஆரியா' - சரியா.