'பிரச்சனைக்கு வன்முறை தீர்வாகாது' காந்தியடிகளின் இந்த சத்திய வார்த்தையை கொண்டு கதை பண்ணியிருக்கிறார் இயக்குனர் உதயன். எனினும் மாளவிகாவின் குத்தாட்டம் மூலம் சத்திய சோதனை புத்தகத்தை விற்கும் மட்டமான சிந்தனையையெல்லாம் நியாயப்படுத்துவதெல்லாம் மகாத்மாவின் ஆத்மா மன்னிக்காது.
கதாநாயகனான சுந்தர் சி. அவ்வப்போது அடிதடியில் இறங்கும் ஒரு மெக்கானிக். டிராபிக்கிற்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக 15 நாட்கள் மதுரை காந்தியகத்தில் இருக்கவேண்டுமென தண்டனை விதிக்கிறது கோர்ட். காமெடி டிராக்கையும் நுழைக்கவேண்டும் என்பதால் கூடவே ஒட்டிக் கொள்கிறார் விவேக்.
தண்டனை அனுபவிக்க போன இடத்தில் மாமியார் வீட்டுக்கு விருந்துண்ணபோன மாப்பிள்ளைகள்போல இருவரும் அடிக்கும் லூட்டிகள் சிரிப்பை வரவழைத்தாலும் லாஜிக்குகளை தலைகீழாக கட்டி தொங்கவிடுகிறார் இயக்குனர்.
இப்போது கதாநாயகி அஞ்சலி அறிமுகம். உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் பார்த்த காரணத்திற்காக சுந்த்ர சி.மேல் காதல் கொள்ளும் கன்றாவி கதாபாத்திரம். இயக்குனரின் புதுமை சிந்தனைக்காவது 'பொன்னாடை' போர்த்தலாம்.
தண்டனை முடிந்து சென்னை திரும்பும் நாயகன், மீண்டும் தனது ரவுடி வேலைகளில் இறங்குகிறார். முன்னாள் அமைச்சருக்கு (வில்லன்) மணிவண்ணனுக்கு எதிராக இருக்கும் நேர்மையான வக்கீல் விஜயகுமாரிடமிருந்து முக்கியமான ஆதாரம் ஒன்றை பறித்து தரும் வேலை இப்போது. கைகலப்பில் கம்பி குத்தி இறந்து போகிறார் விஜயகுமார். அந்த குற்றவுணர்வு துரத்தும் சுந்தர் சிக்கு அறிவுக் கண் திறக்கிறது. வில்லனை மாட்டிவிட கிடைக்கும் ஆதாரங்களை கைக்கூலிகள் அழித்துவிட, அஹிம்சை வழியில் போராடி விஜயகுமாரின் லட்சியத்தை நிறைவேற்றுவதுடன் நமக்கு கிடைக்கிறது ரிலாக்ஸ்.
ஆக்ஷ்ன் குதிரையில் சவாரி செய்ய ஆசைபடுகிறார் சுந்தர் சி. ஆனால், குதிரைமீது குழ்தை அமர்ந்தால் என்னாகும் அந்த நிலையே அவருக்கும். மீசைவைத்த குழந்தை முகம் அடிதடி கேரக்டருக்கு ஒத்துப்போக மறுக்கிறது. டமடம பின்னணி மழை, இடி மி்ன்னல் கிராபிக்ஸின் உதவி என ஆக்ஷ்ன் முகத்தை காட்ட நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.
மாளவிகாவின் தீவிர ரசிகரையே காந்தியின் கொள்கைகளை படிக்கவைக்கும் நாயகன், தான்மட்டும் திருந்தாமல் காந்திக்கும் எனக்கும் ரொம்பதூரம் என தனது காட்டான்தனத்தை வெளிப்படுத்துவது முரண்பாட்டின் குவியல்.
போலீஸ் அதிகாரிகளை காமெடியனாக்கி பார்க்கும் இடங்கள் படத்தில் நிறைய உண்டு. அவற்றில் குறிப்பிடும் இடங்கள் இரண்டு. ஒன்று அஸிஸ்டெண்ட் கமிஷனராக வரும் நெப்போலியன். இரண்டு டெபுடி கமிஷனராக வரும் நாயகியின் தந்தை.
நாயகியின் வீட்டில் சர்வ சாதராணமாக நுழைந்து டெபுடி கமிஷனருக்கே மயக்கமருந்து தெளித்து நடத்தும் கூத்துக்களையாவது சரி காமெடிதானே என நினைத்துக் கொள்ளலாம். ஆனால், நெப்போலியன் கேரக்டர்தான் எரிச்சல்.
வக்கீல் விஜயகுமாரின் தம்பியான இவர், அண்ணனை கொன்ற பாவியை என் கையாலேயே சுட்டுத்தள்ளுவேன் என அறிமுக காட்சியில் வீர வசனம் பேசுகிறார். அதன்பிறகுதான் வீரியம் குறைந்துபோகிறது இவருக்கு. வேஷம் போட்டுவரும் சிரிப்பு போலீஸையே கண்டுபிடிக்கமுடியாமல் தனது அடையாள அட்டையை காட்டி நானும் போலீஸ்தான் என சொல்லும்போது கெக்கேபிக்கே என சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.
மாஜி அமைச்சரையே கூண்டில் ஏற்றக்கூடிய ஆதாரம் அடங்கிய சி.டியை காப்பி எடுத்துவைக்காமலேயே அடியாட்களின் தீக்குச்சிக்கு பறிகொடுத்து கையை கசக்குகிறார் நெப்போலியன். அட ராமா ராமா.... இன்னும் எத்தனை சினிமாவில் இதுமாதிரி சீன் வருமோ என முட்டிக்கொள்ள தோன்றுகிறது.
தியாகியாக வரும் நாசர் மாளவிகாவை அழைத்து குத்தாட்டம் போட்டதற்கான நியாயத்தை சொல்லும் சுந்தர் சிக்கு பாராட்டு தெரிவிப்பதுதான் நிஜமான சத்திய சோதனை.
விவேக்கின் காமெடி ஆங்காங்கே சிரிக்கவைப்பது ஆறுதல்.
தனிமனித போராட்டத்திற்கு பொதுமக்கள் குரல் கொடுக்கும் காட்சியெல்லாம் நிஜத்தில் நடந்தால் சந்தோஷம்தான். ஆனால், சாதாரண கவுன்சிலரின் அநியாயங்களுக்கே குரல்கொடுக்க திராணி இல்லாமல் போன இச்சமூகத்தில் இப்படியெல்லாம் நடந்தால்...
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் 'இன்னும் ஒரு வானம்...', 'மூணு காசு முட்டாயி...', 'கண்டோம் கண்டோம்...' பாடல்கள் தேறுகிறது.
'ஆயுதம் செய்வோம்' காந்தி உயிரோடு வந்து பார்த்தால் கைத்தடியையே ஆயுதமாக்கிவிடுவார்.