'பெண் சிசு கொலை உள்ளிட்ட பிரச்சனைகளால் எதிர்காலத்தில் பெண்கள் குறைந்த அளவிலேயே இருப்பார்கள்' என்ற புள்ளி விபரங்களுடன் படம் ஆரம்பிக்கும்போதே ஒரு 'அட...' ஒரு 'ஆஹா...' வை உச்சிரித்தபடி சீட்டு நுனிக்கு நகர்ந்தால், அடுதடுத்து வரும் விஷயங்கள் அப்படியே சீட்டில் சாய்ந்து அரை படுக்கையாக்கிவிடுகிறது.
கல்யாணத்துக்கு காத்துக்கிடக்கும் 24 வாலிபர்கள். வயசுக்கு வராத 7 சிறுமிகள் உள்ள கிராமம். உள்ளூரில் பெண்களுக்கு வறட்சி, வெளியூரிலும் பெண் எடுக்கக்கூடாதென்ற பஞ்சாயத்து கண்டிஷன் என இருக்கும் அந்த கிராமத்தில் வெளியூரில் படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்புகிறார் நாயகி ப்ரியஸ்ரீ.
காஞ்ச மாடு கம்மங் கொல்லையை பார்த்ததுபோல ப்ரியஸ்ரீ வரவு கல்யாணமாகாத 24 இளைஞர்களை ஏங்கவைக்கிறது. ஊர் சட்டத்திட்டத்தின்படி இளைஞர்கள் 24 பேருக்குள்ளும் போட்டி வைத்து அதில் வெற்றி பெறும் ஒருவருக்குதான் பெண் கொடுக்கப்படும். அதன்படி போட்டிக்கான நாளை எதிர்பார்த்து இளைஞர்கள் கனவு கண்டுகொண்டிருக்க, ப்ரியஸ்ரீக்கோ வெளியூரிலிருந்து வரும் நகை கடைக்காரரின் மகன் ஸ்ரீஹரி மேல் காதலாகிறது.
வேட்கையோடு இருக்கும் இளைஞர்கள், பஞ்சாயத்து தீர்ப்பு போன்ற இடியாப்ப சிக்கலிலிருந்து மீண்டு நாயகனும் நாயகியும் எப்படி இணைகிறார்கள் என்பதே கதை.
இந்த காலத்தில் நம்பமுடியாத கதை என்றாலும் 24 புதுமுகங்களை கட்டிமேய்த்து கதை நகர்த்தும்விதம் காமெடியாக ரசிக்கவைக்கிறது.
நல்லவேளை! இடைவேளைக்கு முன்பே வந்து சோதிக்காமல் நாயகன் ஸ்ரீஹரி இரண்டாம் பாதியில் வருவது ஆறுதல். சிறுவர்கள் விளையாட்டில் உப்புக்கு சப்பாணியாய் இவரது கேரக்டர். க்ளைமாக்ஸிலே விஜயகாந்த் ரேஞ்சுக்கு டயலாக் பேசும்போது, படம்பார்ப்பவர்களிடமிருத்தும் ஏகப்பட்ட வசனங்கள் புறப்படுகிறது.
நாயகியை வயசுக்கு வரவைக்க இயக்குனர் யோசித்திருக்கும் விதம் தாங்கலடா சாமி....
பஞ்சாயத்து, அரசமரத்தடி, பஞ்சாயத்தார், தீர்ப்பு என இத்துப்போன விஷயங்களால் அலுத்துக்கொள்ள வைக்கிறது திரைக்கதை.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் 'பெண்கள் இல்லாத ஊரிலே...' பாடல் ரிதம்.
க்ளைமாக்ஸில் வரும் ஒரு வசனம் 'இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் பஞ்சாயத்து தீர்ப்புன்னு பின்தங்கி இருக்கீங்களே... வெட்கமா இல்லை?'. இந்த வசனத்தையே விமர்சனத்திற்கும் எடுத்துக்கொள்ளலாம்.
'அச்சச்சோ' டைட்டில் பொருத்தம்.