நாம் எதிர்பார்க்காத படங்கள் எதிர்பாராத வியப்பை கொடுப்பது உண்டு. அறிமுக இயக்குனர் யேசுதாஸின் 'பாலி' அந்த வகையை சார்ந்தது.
லண்டன் மியூசிக் காலேஜ் ஸ்டூடண்ட் ரிச்சர்ட. இந்தியாவில் இருக்கும் பாலி எனும் இசைக் கருவி பற்றி கேள்விப்பட்டு தாயகம் வருகிறார். பாலி குறித்த தேடல் அவரை ஊட்டி அருகில் உள்ள மலைக்கிராமத்துக்கு கொண்டு சேர்க்கிறது. அக்கிராமத்தின் தலையாரியின் மகளின் பெயரும் பாலி. இந்த பெயர் குழப்பம் காமெடியாகி பின் உரசலாகி இறுதியில் காதலாகிறது.
பாலி, ரிச்சர்ட் இருவரின் நெருக்கம் பாலியின் முறை பையன் காரைக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் ரிச்சர்ட் காணாமல் போகிறார். இறந்து விட்டதாக கருதப்படும் ரிச்சர்ட்டின் கொலைப் பழி காரை மீது விழுகிறது.
ரிச்சர்ட் என்ன ஆனார்? பாலி ரிச்சர்ட் காதல் என்ன ஆனது? எளிதாக யூகிக்கக் கூடிய க்ளைமாக்ஸுடன் படம் சுபமாக முடிகிறது.
தமிழ் சினிமாவில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், நெல்லை ஏன் ஈழத் தமிழர் பாஷைவரை கேட்டிருக்கிறோம், 'பாலி'யில் வரும் படுகாஸ் இன பாஷை தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிது. இதற்காகவும் வித்தியாசமான கதைக் களத்துக்காகவும் இயக்குனருக்கு ஒரு சபாஷ்.
இசைக் கல்லூரி மாணவர் ரிச்சர்ட்டாக வரும். ஸ்ரீக்கு இது முதல் படம். உறுத்தாத நடிப்பு. நடனம் நன்றாக வருகிறது. குரல் மாடுலேஷனில் கவனம் செலுத்தினால் கோடம்பாக்கத்தில் ஒரு இடம் நிச்சயம்.
படத்தின் முக்கிய அம்சம் பாலியாக வரும் ரிம்பி. அசாமை பூர்வீகமாகக் கொண்ட ரிம்பியின் முகம் பாலி கேரக்டருக்கு நூறுசதம் பாந்தமாக பொருந்துகிறது. காதல், கோபம், பரிவு என நவரசங்களை கண்களிலேயே வெளிப்படுத்தி நடிப்பில் முதலிடம் பெறுகிறார்.
காரையாக வரும் பகலா உள்ளிட்ட படத்தின் அனைத்து நட்சத்திரங்களும் புதுமுகங்கள். இடையிடையே திடீரென முளைக்கும் பாடல்கள் பாப்கார்ன் விற்பனைக்கே உதவுகிறது. பெரிய திருப்பங்கள் ஏதுமற்ற திரைக்கதை படத்தின் பிளஸ். அதுவே மைனஸாகவும் உள்ளது irony.
ஊட்டி மலைக்கிராமத்தின் அழகை அப்படியே அள்ளிக் கொண்டு வந்துள்ளது சஜ்ஜத் மேனனின் கேமரா. லைட்டை பயன்படுத்தாமல் இயற்கை ஒளியில் படம் பிடித்தார்களாம். அவையிலபிள் லைட்டிலேயே அசத்தியிருக்கிறார்கள்.
பாடலில் கோட்டை விட்டாலும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் பகவத்.
'பாலி' பொறுமைசாலிக்களுக்கானது!