இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியால் சோகத்தில் மிதப்பவரா நீங்கள்? அப்படியானால் அவசியம் சென்னை - 28 ஐ பார்த்து ஜாலி டிரீட்மெண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.
சென்னை அஞ்சல் குறியீட்டு எண் 600028 -ல் உள்ள மந்தவெளியில் எதிரும் புதிருமாக இருக்கும் இரண்டு லோக்கல் கிரிக்கெட் அணிக்கு இடையே நிகழும் போட்டா போட்டியை பொழுதுபோக்காக சொல்லியிருக்கிறார்கள்.
ஷார்க்ஸ் அணியினராக வரும் அத்தனைபேருமே எதார்த்தமான நடிப்பில் விளாசித் தள்ளியிருக்கின்றனர். குறிப்பாக ஷிவா, விஜய், நித்தின் சத்யா, அருண், ஜெய், பிரேம்ஜி அடிக்கும் ரகளைகள் கலகல சிக்ஸர்கள்.
அருணின் தங்கை விஜயலட்சுமியுடன் ஷிவா போடும் காதல் டிராக், சூப்பர் ரசகுலா. விஜயலட்சுமியை ஜெய்தான் காதலிப்பதாக நினைத்துக்கொண்டு அவரை பழிவாங்க ஷிவா ஸ்கெட்ச் போடும்போது ஜெய்யாகவே முன்வந்து ஷிவாவிடம் காதல் தூதனாக வரும் கட்டத்தில் திரைக்கதையில் முதல் பவுண்டரி அடிக்கும் இயக்குனர் வெங்கட்பிரபு, க்ளைமாக்ஸ் வரை தன் திறமையின் ஸ்கோரை மளமளவென ஏற்றிக்காட்டிருக்கிறார்.
கேட்ச் பிடிக்க தெரியாத பிரேம்ஜி அத்தி பூத்தாற்போல் ஒரு முறை கேட்ச் பிடிக்க, அதனை 'நோ பால்' என நடுவர் சொல்லிவிடுகிறார். அதற்கு முழியை சுழற்பந்தாய் உருட்டி பிரேம்ஜி காட்டும் ரியாக்ஷ்னில் தியேட்டரில் கரகோஷம் . அவரே அடிக்கடி 'என்ன கொடுமை சார்...' என தலையில் அடித்துக்கொள்ளும் காட்சிகளுக்கு தியேட்டரை விட்டு திரும்பிய பின்னும் கைதட்டத் தோன்றுகிறது.
ஷிவா தனது தங்கையை காதலிப்பது தெரிந்ததும் அருண் நட்பை முறித்துக்கொள்வதும் அவரை சமாதானப்படுத்த நண்பர்கள் எடுக்கும் முயற்சிகளும் அழகாக சென்டிமெண்ட் முடிச்சுகள்.
தண்ணியடிக்க காசில்லாமல் இருக்கும் சமயத்தில் பள்ளி சிறுவர்களுடன் பெட் மேச் விளையாடி அவர்களிடமும் தோற்று பேட்டுகளை இழக்கும் இடத்திலும் தியேட்டரில் ஹா..ஹா..ஹா..ஹா..சப்தம் அதிர்கிறது.
கிரிக்கெட் பந்தயத்தில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடுவதற்கு இணையான திக் திக்கை வரவழைப்பது மெச்சூரிட்டியான டைரக்ஷ்னுக்கு உதாரணம். இறுதிப்போட்டியில் ஏற்கனவே தோற்ற சிறுவர்களுடன் மோதுவதுபோல் க்ளைமாக்ஸை முடித்திருப்பது புத்திசாலித்தனம்.
யுவனின் இசையில் 'ஜல்சா', உன் பார்வை....', 'சரோஜா சாமான் நிகாலோ...' பாடல்கள் ரசனை.
இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் வெங்கட்பிரபு முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த திருப்தியை அடையலாம். பாராட்டுக்கள்.
'சென்னை 600028' ஒரு பிரிண்டை இந்திய அணிக்கும் அனுப்பலாம்.