இயக்குனர் நிஷிகாந்திற்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிவிட்டு விமர்சனத்திற்கு வருவோம்!
குளிர்பானத்தின் விலையைவிட இரண்டு ரூபாய் அதிகம்வைத்து விற்றால் நாம் என்ன செய்வோம்? கொடுத்துவிட்டு வருவோம். நடைமேடையின் (பிளாட்பாரம்) குறுக்கே பைக் நின்றிருந்தால் நாம் என்ன செய்வோம்? நமக்கென்ன நஷ்டம் என கீழிறங்கி செல்வோம். பின்னிரவு வரை சட்டத்திற்கு புறம்பாக வியாபாரம் நடத்தும் கையேந்திபவன்காரரிடம் காவல் அதிகாரி கைநீட்டி காசு வாங்கினால் நாம் என்ன செய்வோம்? வேடிக்கை பார்த்து நகைத்தபடி நகர்ந்து கொள்வோம்.
இப்படி நமக்கென்ன நமக்கென்ன என்று நழுவ நழுவ, நரகமாய் மாறிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை. இந்த உண்மையின் உறுத்தலால் உணர்ச்சி பிரவாகம் எடுக்கும் (எவனோ) நம்மில் ஒருவனின் நிலை என்னாவாகிறது என்பதே கதை.
அநீதிக்கு எதிராக கொதித்தெழும் நேர்மையான அதிகாரிகள், தனி மனிதர்கள் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. அவையெல்லாம் சினிமா ஹீரோவுக்கான ஆற்றலை முன்னிறுத்தும், புஜ பலத்தை நிருபிக்கும் போலித்தனத்தில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளது.
இந்தப் படம் அந்த வகையறாக்களை கடந்து நெஞ்சம் கனக்கும் நிஜம். சாதாரண அதேசமயம் நேர்மையான ஒரு தனிமனிதன் தன் சக்திக்கு உட்பட்டதை மட்டும் செய்யும் சினிமாத்தனம் துளிகூட கலக்காத யதார்த்தம்.
டொனேஷன் கொடுத்து மகளை பள்ளியில் சேர்க்க முடியாத, சேர்க்க மறுக்கும் நடுத்தர வர்க்கத்து வாழ்க்கையில் சிக்குண்டு தவிக்கும் வங்கி அதிகாரியாக மாதவன் பல பரிமாணங்கள் கடந்திருக்கிறார் நடிப்பில்.
வீட்டில் ஆரம்பித்து, வெளியில், வேலை செய்யும் இடத்தில் தான் பார்க்கும் யாவரும், யாவையும் தவறாக இருப்பதை கண்டு நொறுங்கும் காட்சிகளில் மாதவனின் பாத்திரத்துடன் கைகோர்க்க தூண்டுகிறது மனசு.
கார்ப்பரேஷன் தண்ணீருக்கு காசு வசூலிக்கும் கவுன்சிலரின் கழுத்தில் கத்தியை வைத்து 'வெட்கமா இல்ல...வெட்கமா இல்ல...' என ஆக்ரோஷத்தின் எல்லை தொடும்போது நமக்குள் தூங்கவைத்துக்கொண்டிருக்கும் நேர்மையான மனிதனை துடித்தெழவைக்கும் மாதவனை மனதார பாராட்டியே ஆக வேண்டும். ஆகாயம் பார்த்து கடவுளிடம் கர்ஜிக்கும் இடத்தில் கைதட்ட தோன்றுகிறது.
யாரோ ஒருவர் ஓடும் ரயிலில் அடிபட்டு இறக்கும் காட்சி. அந்த பெருஞ்சோகத்தின் அடையாளங்களை மறைப்பதுபோல எழுகிறது பயணிகளின் உரையாடலும், சிரிப்பொலியும். இதை நாயகன் உற்று நோக்கும் இடத்தில் உணர்ந்துகொள்ள ஆயிரம் அர்த்தங்களை பிரதிபலிக்கிறது இயக்குனரின் பார்வை.
"உங்கள கட்டிக்கிட்டு இந்த பத்துவருஷத்துல என்ன சுகத்தண்ணா கண்டேன்..." கணவனின் எண்ணத்தை புரிந்துகொள்ள முடியாத சராசரி மனைவியாக புலம்பும் சங்கீதா இயல்பை மாறாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
"வாங்குகிற சம்பளம் பத்தலைன்னு யார் யாரிடமோ கைநீட்டி காசு வாங்கிட்டு கடமையை செய்யாம, கடமையை செய்யவிடாம தடுக்கிறவங்களுக்கு பாதுகாப்பு தர்றோம்".
"சில கேள்விகளுக்கு விடை தெரிவதற்கு முன்பே அந்த கேள்வியை விட்டுவிட்டு அடுத்த கேள்விக்கு போறோம்".
"யாரோ ஒருத்தன் நல்லது செய்ய தலைதூக்கும்போது அவன் தலை நசுக்கப்படுகிறது" இப்படி பல இடங்களில் இன்ஸ்பெக்டர் வெற்றிமாறனாக வரும் சீமானின் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் நெஞ்சில் ஓங்கி அறைகிறது.
கதைக் கருவில் மட்டும் நேர்மையை சொல்லிவிட்டு நின்றுவிடவில்லை இயக்குனர். பாட்டு, சண்டை என சினிமாத்தனங்களை சேர்த்து கறைபட்டுக்கொள்ளாமல் இயக்கத்திலும் தனது நேர்மையை, திறமையை நிருபித்துள்ளார்.
பின்னணி இசையெழுப்பியுள்ள ஜி.வி.பிரகாசிடம் செயற்கைத்தனம் தென்படவில்லை.
ஒளிப்பதிவு, பாத்திரங்கள் பேசும் ஒலியளவு ஆகியவற்றில் இயக்குனரின் தொழில்நுட்ப அறிவும் வெளிப்படுகிறது.
'எவனோ ஒருவன்' எல்லோரும் பாருங்க ப்ளீஸ்!