தமிழ் சினிமாவில் பார்த்துசலித்த பழக்கப்படுத்திய கல்லூரி இல்லை இது. ஒப்பனையோ, கற்பனையோ கலக்காத நிஜம் இந்த 'கல்லூரி'.
தற்காலிக படிப்புக்காக லோக்கல் கல்லூரியில் சேர்ந்த கோடீஸ்வரர் வீட்டு தமன்னா, கல்லுடைக்கும் தொழிலாளியின் மகன் அகில், ஆட்டோடிரைவரின் ஐந்து மகள்களில் ஒருவரான ஹேமலதா, படிக்கும்போது கல்யாணம் செய்யும் பணக்காரவீட்டு அலெக்ஸ்.
வசதியும், வலியும் கலந்த குடும்பப்பின்னணி கொண்ட இவர்கள் அனைவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் நண்பர்கள். கடைசிவரையில் நாங்கள் நண்பர்களாகத்தான் இருப்போம் என்ற உறுதியுடன் இருக்கும் இவர்களின் கொள்கை ஒரு கட்டத்தில் உடைந்து அகில்-தமன்னாவின் மனசுக்குள் காதல் பூக்கிறது.
அப்படின்னா இது காதல் கதையா? என்று கேட்டால், அதுவுமில்லீங்க! அதையும் தாண்டி புனிதமானது என்றுதான் சொல்லவேண்டும்.
யார் ஹீரோ யார் ஹீரோயின்? ம் ஹூம். அப்படியெல்லாம் சுட்டிக்காட்டும் சராசரி சினிமா ரகம் அல்ல என்பது படம்பார்க்கும்போது மட்டுமே உணர்ந்துகொள்ளக்கூடிய எதார்த்தம்.
அழகு நிறைந்த தமன்னாவை பயன்படுத்தி கவர்ச்சியாக படம்பிடித்திருக்க இரண்டரைமணி நேர படத்தில் ஏகப்பட்ட இடங்கள் இருந்தும் அதனை தவிர்த்து இயக்கத்தில் நாகரீகம் காட்டியிருக்கும் பாலாஜிசக்திவேலை பாராட்டிக்கொண்டே போகலாம்.
"நீ செஞ்ச உதவிய என் உசுரு உள்ளவரை மறக்கமாட்டேன், அதான் நான் உனக்கு தர்ற மரியாதை" தமன்னாவிடம் அகில் சொல்லும் இந்த வார்த்தைகளே தமன்னா மனசுக்குள் காதலை விதைக்கும் காரணியாக இயக்குனர் காட்டும் இடம் நெகிழ்வு.
உடன் படிக்கும் நண்பனின் கல்யாணத்திற்கு போகும் இடத்தில் இசைக்குழுவினர் தமன்னாவை பாடச்சொல்கின்றனர். இந்த இடத்தில் நினைத்தால்கூட ஒரு கனவு பாடலோ அல்லது ரீ-மிக்ஸோ பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால், இங்கு நிகழ்வது அதுவல்ல. "உன் பார்வையில் ஓராயிரம்" என்னும் பழைய பாடல் மூலம் தமன்னா தன் காதலை அகிலுக்கு உணர்த்த நினைக்கிறார். அது பிடிக்காமல் வெளியேறும் நாயகனை ஊரெங்கும் கட்டப்பட்டிருக்கும் ஸ்பீக்கரில் அந்த குரல் துரத்தும்போது அழகாக பிரதிபலிக்கிறது திரைக்கதை.
தமன்னாவுடன் அவரது தோழியாக வரும் ஹேமா கோபித்துக்கொள்வதும் பிறகு ஒன்றாக சேர்ந்து உடைந்தழும்போதும் ஆஹா நட்பில் ஊடலும் கூடலும் எத்தனை அற்புதம்.
மதுரை ஸ்லாங்கில் வெளுத்துவாங்கும் பரணி, "ஏங்க நீங்க சொல்லுங்க, ஏன் நீங்க சொன்னா என்ன?" என பட்டிமன்றம் நடத்தும் இரட்டையர்கள் உள்ளிட்ட மற்ற கேரக்டர்களும் மனதில் பதிகிறார்கள்.
புத்திசாலித்தனம் துருத்தி நிற்காத வகையில் வசனத்தில்கூட நிஜத்தை பதிவு செய்திருப்பதால், படம் பார்க்கும் உணர்வே தென்படாமல் கல்லூரி நண்பர்களில் ஒருவராக நம்மையும் அந்த பாத்திரங்களுடன் பயணப்பட வைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். சினிமா சம்பிரதாயங்களை நிறையவே உடைத்திருப்பதற்காக தனி பூச்செண்டு.
ஜோஸ்வாவின் பின்னணி இசை, செயற்கைத்தனமில்லாத செழியனின் ஒளிப்பதிவு இரண்டும் இயக்குனரின் இட, வலகரங்களாகசெயல்பட்டுள்ளன.
ஆங்காங்கே பொத்துக்கொண்டு வரும் கண்ணீருக்கு பாலாஜி சக்திவேலையே பொறுப்பேற்க வைக்கிறது இந்த 'கல்லூரி'.