கதை தேர்வு செய்யும் விஷயத்தில் அன்னப்பறவையாகிவிட்டார் கரண். கொக்கிக்கி பிறகு இந்த படத்திலும் வெற்றியை குத்தகைக்கு எடுத்துள்ளார்.
சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகைக்கு எடுத்து நடத்தும் கரண். சின்ன வயசிலேயே அம்மாவை இழந்து டாக்டருக்கு படிக்கும் மீனாட்சி. சாதாரண குத்தகைதாரர் டாக்டருக்கு கணவனாக முடியுமா? இந்த கதையில் முடிகிறது.
குட்டு வைப்பது, திருநீறு பூசுவது என கரணின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இறந்துபோன அம்மாவின் செயல்பாடுகளுடன் ஒத்துப்போக, கரணை நினைத்து காதல் கோபுரம் கட்டுகிறார் மீனாட்சி. "உன்ன நினைச்சி என்னால படிக்க முடியல... எங்க அம்மாவை ஞாபகப்படுத்தும் நீ என்னை கட்டிக்கிவியா ப்ளிஸ்..." மீனாட்சி கையெடுத்து கும்பிட்டு கண்ணீருடன் காதல் வரம் கேட்க, கலங்கிபோகிறார் கரண்.
மீனாட்சியின் கழுத்தில் எப்போதும் ஸ்டெதாஸ்கோப் இருக்கவேண்டும் என்பதற்காக தாலிதர சம்மதிக்கிறார் கரண். காதல் ஒரு பக்கம் படிப்பு மறுபக்கம் என இவர்களின் டிராக் அழகாக நகர்ந்துகொண்டிருக்க, திடீர் வில்லன்களாக வந்து நிற்கிறார்கள் மீனாட்சியின் உறவுகள். குத்தகைகாரனுக்கு மீனாட்சி சொந்தமாவாரா? வெள்ளித்திரையில் மிச்சமீதி.
உள்ளுக்குள் பயத்தை வைத்துக்கொண்டு வெளியே துணிச்சல்காரராக காட்டிக்கொண்டு உதார் விடும் தொடக்க காட்சிகளிலேயே ரசிக்கவைத்துவிடுகிறார் கரண். நடன குழுவில் ரஜினி வேஷம் போடுவது, காதலியின் படிப்புக்காக காதலை தியாகம் செய்துவிட்டு புலம்பவது என நடிப்பில் படம் பார்ப்பவர்களின் மனசையும் குத்தகைக்கு எடுக்கிறார் கரண். மதுரை ஸ்லாங்கும் அதற்கேற்ற உடல்மொழியும் கரணை கருப்பசாமியாகவே மாற்றியிருக்கிறது.
அறிமுகம் மீனாட்சிக்கு 'செர்ரி'முகம். உருட்டு விழிகளில் சுருட்டி கொள்கிறார் இதயத்தை. அம்மாவை ஞாபகப்படுத்தும் செயலுக்காக கரண்மேல் காதல் பிறப்பதுபோல் காட்டுவது புதுசு. கோலிவுட்டில் மீனாட்சியின் ஆட்சி நடக்க வாழ்த்துக்கள்.
அடுத்தவரின் பணத்தை ஏமாற்றி ஏப்பம்விடும் படித்துரை பாண்டியாக வடிவேலு மீண்டும் மீண்டும் சிரிக்க வைக்கிறார். கிங்காங்கின் கண்ணுக்கு வடிவேலுவின் மீசையும் கிருதாவும் வண்டாகவும் புழுவாகவும் தெரிந்து காயப்பட்டு கதறும் காட்சிகள் வெடிச்சிரிப்பை வரவழைக்கிறது.
தினாவின் இசையில் 'ஊரெல்லாம்...', 'உப்புகல்லு...' பாடல்கள் இனிமை. ஜே. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கதையுடன் கைகோர்த்திருக்கிறது.
நிறைய இடங்களில் புதுசாக யோசித்திருக்கும், நாயகியின் நடிப்பை மட்டுமே 'காட்டியிருக்கும்' இயக்குனர் மூர்த்தியிடம் நேர்த்தி நிறைந்திருக்கிறது.
'கருப்பசாமி குத்தகைதாரர்' கொக்கி போடுகிறார்.