குடும்ப உறவு, தனி மனித ஒழுக்கம், கடமையில் நேர்மை, காதல், பொறுமையின் விளிம்பிலிருந்து வெடிக்கும் கோபம், கலப்படம் இல்லாத கலகலப்பு உட்பட எல்லா உணர்வுகளையும் பதித்திருக்கும் 'கிரீடம்' இது.
சிறைக்குள்ளிருந்து தப்பிவரும் ரவுடிகளை அடித்து துவைத்து வலைத்துப் பிடிக்கும் போலீஸ் அதிகாரி அஜித்தை பொதுமக்கள் கரவொலி எழுப்பி பாராட்டுகின்றனர். தலைமை காவலரான ராஜ்கிரண் மேலதிகாரியான அஜித்துக்கு சல்யூட் அடிக்கிறார். இவர்கள் வேறுயாருமல்ல, அப்பா - மகன் உறவுதான்.
அட... மனசை தொடுவது மாதிரி இருக்கே... என ஆரம்பகாட்சிலேயே ஒன்றிப் போகும்போது ராஜ்கிரண் தூக்கத்திலிருந்து கண் விழிக்க, நாம் பார்த்த முந்தைய காட்சி, ராஜ்கிரணின் கனவு என்பது தெளிவாகுகிறது.
மகனை போலீஸ் அதிகாரியாக்கி பார்க்கவேண்டுமென்ற அப்பாவின் ஆசைக்காக அஜித்தும் கடுமையாக உழைக்கிறார். வெண்ணெய் திரண்டுவருகையில் தாழி உடைந்த கதையாய் அஜித்தின் விஷயத்திலும் விதி விளையாட, வழக்கமான சினிமாதனங்களிலிருந்து விடுப்பட்ட ஒரு க்ளைமாக்ஸுடன் படம் முடிகிறது.
த்ரிஷா வீட்டு பிள்ளையார் சிலையை திருடி அவருக்கு டிமிக்கி கொடுப்பதிலிருந்து தடதடவென வேகமெடுக்கிறது 'தல' யின் கலகலப்பு. "எஸ். ஜ. போஸ்டிங்குக்கு எக்ஸாம் எழுதியிருக்கேன். வேலை கிடைச்ச ஒரு வருஷத்துல கல்யாணம். கல்யாணம் முடிஞ்சகையுடனே முதல்ல பையன், அப்புறம் பொண்ணு. உனக்கு ஓ. கே. தானே..." இப்படி எவ்வித வழிசல்களும் இல்லாமல் தன் காதலை அஜித் நேரடியாக முன்வைக்கும்போது த்ரிஷா மட்டுமின்றி நம்மையும் காதல்கொள்ள செய்கிறது அஜித்தின் அப்ரோச்.
அஜித்துக்கு ஓட்டப்பயிற்சி அளிப்பது, எழுத்துத் தேர்வுக்கு குறிப்பெடுத்து கொடுப்பது, மகனுக்கு வேலை கிடைச்சதும் சொந்த வீடு வாங்கலாம் என குடும்பத்தினரின் ஆசைக்கு வாசல் திறந்து வைப்பது என கடமை தவறாத நல்ல தகப்பனாக ராஜ்கிரணின் சென்டிமெண்ட் ட்ராக் ஒருபக்கம் மனசை பிசைந்துகொண்டிருக்க, அஜித் திடீரென்று ஆக்ஷ்ன் அவதாரம் எடுக்க சூடிபிடிக்க ஆரம்பிக்கிறது கதை.
அப்பாவின் சட்டையை பிடித்த வில்லனை ஐ.சி.யூ. வுக்கு அனுப்பும் காட்சி அஜித்தை சூரப்புலியாக அடையாளம் காட்டுகிறது.
வில்லன் உயிர் பிழைத்தால் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பதை பதைப்பு ஈரல்குலையை நடுங்க வைக்கும் தருணம் பார்த்து மீண்டும் குடும்ப செண்டிமெண்டுக்குள் திரைக்கதை நகர்த்தி சோம்பல் முறிக்க வைப்பதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.
அஜித்தை கோணி திருடனாக்கி துரத்தும் த்ரிஷா, கடைசியில் உண்மை நிலைதெரிந்து திருதிருவென விழிப்பதும், அர்த்தராத்திரியில் மொட்டைமாடியிலுள்ள தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்து அஜித்தின் பெற்றோரை புறம்பேசி மாட்டிக்கொண்டு அசடு வழிவதுமாக வருகின்ற காட்சிகளிளெல்லாம் திறமையை நிரூபிக்க த்ரிஷாவுக்கு நல்ல வாய்ப்பு.
வீட்டோடு மாப்பிள்ளையாகி வெட்டிபொழுதுகழிக்கும் விவேக், ஆங்காங்கே நகைக்சுவையை கூறுகட்டியிருந்தாலும் திடீரென்று காணாமல் போவது... அவரது பாணியிலேயே சொல்வதென்றால் 'அடப்... பாவிங்களா...'
ஒரு பாடலின் இடையிலேயே அஜித் - த்ரிஷாவின் வீட்டில் சம்பந்தம் பேசி முடிக்கும் காட்சிகளில் இயக்குனரின் கீர்த்தியில் நேர்த்தி தெரிகிறது.
அஜித்தை போட்டுதள்ள கொலைவெறியோட காத்திருக்கும் வில்லன், நாயகனிடம் சோப்ளாங்கிதனமாக அடிபட்டு சாவது கேலி கூத்தாகிறது.
'அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்...' பாடலில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு 'ஓ' போடுகிறது ஒரு கூட்டம். பின்னணியிலும் பிரமாதப்படுத்துகிறார்.
பெயரில் மட்டுமின்றி ஒளிப்பதிவிலும் மரியாதையை சேர்த்துக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் திரு. அநேகமாக திருச்சி பாலக்கரையை இவ்வளவு அழகாக காட்டியவர் இவர் ஒருவராகதான் இருக்கும்.
இவ்வளவு பிரச்சனை நடக்கும்போது மகனின் மீது அக்கறைகாட்டும் ராஜ்கிரண் தான்மட்டும் கோடியக்கரையில் இருந்துகொண்டு குடும்பத்தை பழைய இடத்திற்கே மாற்றியிருக்க வேண்டியதுதானே?
வில்லத்தனத்தை விஸ்தரிக்கும் அஜய் குமார் மீது துணிச்சலாக எப்.ஐ.ஆர். போடும் இன்ஸ்பெக்டர் ரவிகாளேவுக்கு எண்கவுன்டரில் ரவுடிகளை போட்டுத்தள்ளுவதில் என்ன சிக்கல் இருக்கிறது? என்பது போன்ற கேள்விகள் எழுவது படத்திற்கு குறை.
எனினும் 'தல' சூடிய 'கிரீடம்' ஜொலிக்கவே செய்கிறது.