சூப்பரா டான்ஸ் பண்றாருங்க,பிரமாதமா சண்டை போடுறாருங்க.... புதுமுகம் வாசன் கார்த்திகை இபபடியெல்லாம் புகழலாம்.ஆனா ஒரு விஷயம்தான் உதைக்குது. அது நடிப்பு!? அதற்கான வாய்ப்பே இல்லாத கதைப்போக்கு, வயிற்றுப்போக்கு மாதிரி கண்ட்ரோல் இல்லாமல் போகுதுங்க.
இருந்தாலும், என்ன கதைன்னு நீங்க ரொம்ப ஆர்வமா கேட்பீங்களே....அதுக்காக கொஞ்சம்.
டெல்லி கணேசனின் வளர்ப்பு பிள்ளையான ஹீரோ, மதுரை ரெயில்நிலையத்தில் கூலியாக வேலை செய்கிறார். அரசியல்வாதி (கெட்ட என்று பிராகெட்டில் போடதேவையில்லை. எல்லா படத்திலும் அரசியல்வாதி கெட்டவங்களாதானே வர்றாங்க)
கோட்டைகுமாரின் ஒரே தங்கைதான் நாயகி மிதுனா.
இருவருக்குள்ளும் காதல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காரணம் என்னன்னு கேட்டா டைரக்டருக்கே அது தெரியாது. சரி அதுகிடக்கட்டும் இப்போ கதைக்கு வருவோம். வழக்கம்போலவே நாயகன் நாயகியின் காதலில் அந்தஸ்து வித்தியாசம் இருக்க, வில்லனாக நிற்கிறார் மிதுனாவின் அண்ணன்.
இந்த டிராக் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் காணாமல் போன அம்மாவை தேடி ஹீரோ அலையும் டிராக் தனி. உருப்படியாக ஒரு விஷயத்தை மட்டும் டைரக்டர் செய்திருக்கிறார். அது உருக்கமான, மெல்லிய உணர்வுகள் கொண்ட க்ளைமாக்ஸ்.
சிங்கக்குட்டிக்கு ஸாரி சிங்கமுத்துவுக்கு அதாங்க வடிவேலுவுடன் பல படங்களில் லூட்டி அடிப்பாரே காமெடியன், அவரோட வாரிசுதான் ஹீரோ வாசன்கார்த்திக். சும்மா சொல்லக்கூடாது சுறுசுறுப்பான பையன்தான். கதைதான் செட்டாகவில்லை. அடுத்தடுத்த படங்களில் மைனஸ்களை ப்ளஸ் ஆக்கி காட்டுவார் என நம்பலாம்.
கதாநாயகி மிதுனா. கோடீஸ்வர வீட்டில் பிறந்துவிட்டு தொலைந்துபோன சாதாரண செல்போன் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பது செயற்கையாக இருக்கிறது.
அவ்வப்போது வடிவேலு வந்து கலகலப்பூட்டுவது ஆறுதல். கருணாஸ், மயில்சாமி, மதன்பாப், சிசர் மனோகர், கிரேன் மனோகர் என தன் இனபந்துக்களையெல்லாம் (காமெடியன்கள்) படத்தில் இடம்பெற செய்திருக்கும் சிங்கமுத்து நல்லமுத்துன்னு கூட பெயர் மாற்றிக் கொள்ளலாம்.
இசை கார்த்திக் ராஜா. என்னமோ போங்க. தம்பி யுவனோட ரூட்டுக்கு எதிர் ரூட்டுதான் நீங்க. 'சொர்க்கம் மதுவிலே' ரீமிக்ஸ் பாட்டுக்கு மட்டும் விழுகிறது ஓட்டு.
"டிரைனில் குழந்தை தொலைவது, பாதி படத்தில் ஹீரோ அனாதை இல்லை என்று தெரியவருவது, கீழே விழுந்த பொருளை எடுப்பதுபோல் அம்மாவின் காலை தொடுவது, யாருக்காவது ஆபத்துன்னா ஊரில் உள்ளவர்களெல்லாம் சும்மா இருக்க, ஹீரோ மட்டும் எங்கிருந்தோ ஓடிவந்து காப்பாற்றுவது" டைரக்டர் சார் நீங்களே சொல்லுங்க. இதெல்லாம் எத்தனை படத்தில் பார்த்து சலிச்சிருப்பீங்க. அப்புறம் ஏன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்னு உங்கபேரை போட்டீங்க?
'மாமதுரை' சண்டிக்குதிரை.