பணக்கார வீட்டு பையன் ரமேஷ், பால் வியாபாரியின் மகள் சலோனி. ஒரே கல்லூரியில் படிக்கும் இருவரும் ஆரம்பத்தில் எதிரும் புதிருமாகதான் இருக்கின்றனர். இது தொடர்ந்தால் கதையை வளர்க்க முடியாதே! எனவே சில ரீல்களில் நாயகன் நாயகியை காதலர்களாக்குகிறார் இயக்குனர்.
எதிர்ப்பு வந்தால்தானே திரைக்கதை வேகம்பிடிக்கும்! எனவே அடுத்த சில நிமிடங்களில் இரு விட்டாரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்புகிறது. காதலர்களை பிரித்து ரசிகர்களின் லப்டப்பை ஏற்றினால்தானே சுவாரஸ்யம் கூடும். அதுவும் நடக்கிறது கதையில்.
எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து காதலர்களை ஒன்று சேர்க்காவிட்டால் க்ளைமாக்ஸ் கிடைக்காதே. அப்படியே ஆகக்கடவதாக என யாரும் சொல்லாவிட்டாலும் முடிவில் சுபமாகவே முடிகிறது படம்.
கோடிகோடியாய் பணமிருந்தும் குண்டுமணியளவும் பாசம் கிடைக்காத ஏக்கம், சலோனியிடம் காதல் ரசம் சொட்டுவது. அதிரடி சண்டை, அழகான நடன அசைவுகள் என 'ஜித்தன்' ரமேஷ் திருப்தியளிக்கிறார்.
முதல் படத்திலேயே திறமையை பளிச்சிட வைக்குமளவிற்கு சலோனிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நாயகியின் தந்தையாக வரும் லால், அவரது அக்காவாக வரும் 'தூள்' சகுந்தலா கதாபாத்திரங்கள் கத்தியே காதை செவிடாக்கி விடுகின்றனர்.
பாடம் நடத்த தெரியாத மாணவர்களை பெஞ்சின் மேல் ஏற்றும் பேராசிரியராக வரும் ஹனீபாவின் கதாபாத்திரம் மனசில் ஒட்டவில்லை. கஞ்சா கறுப்பு. வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடிகளில் கிச்சு கிச்சு மூட்டினால் சிரிப்பு வருவதாயில்லை.
க்ளைமாக்ஸில் மாணவர்களை ஒன்று திரட்டி ஹோமம் வளர்த்து சலோனியை ஜித்தன் கைப்படிக்கும் காட்சிகளில் பிரம்மாண்டம்.
காதலுக்கு தடையாக வரும் அந்தஸ்து, கொழுசு மாட்டிவிட்டதாலேயே நாயகன் மீது நாயகி காதல் ஏற்படுவது போன்ற காட்சிகளில் பழைய நெடி. புதிதாக யோசித்திருக்களாமே....
'மதுரை வீரன்' வீரியம் குறைவு