காதலிக்காக ஆள்மாறாட்ட கண்ணாமூச்சிக் காட்டும் காதலனின் கதைதான். அதை கமர்ஷியல் டிராக்கில் கனகச்சிதமாக ஓட்டியிருக்கும் இயக்குனர் ஆர்.என்.ஆர்.மனோகர் கெட்டிக்காரர்தான்.
டீக்கடை மாஸ்டருக்கு ஃபைவ்ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடும் ஆசை வந்தா எப்படியிருக்கும்? நகுலின் ஆசையும் இந்த ரகம்தான். டான்ஸ் டீச்சரான சுனேனா மீது ஹவுசிங் போர்டு குடிமகன் நகுலுக்கு காதல். துரத்தி துரத்தி வருகிறார் நகுல், விரட்டி விரட்டி அடிக்கிறார் சுனேனா. நகுல் சண்டைப்போடும் சமயங்கள் பார்த்தா சுனேனா வரவேண்டும்? நகுல் டிஷ்யூம் போடும்போதெல்லாம் சுனேனாவை பார்த்துவிடவைக்கிறது சந்தர்ப்பம். இதனால் நாயகன் மீது வெறுப்பை அள்ளிக் கொட்டுகிறார். இதனால் தான் நல்லவன் என காட்டுவதற்காக ஆள்மாறட்ட நாடகம் நடத்துகிறார் நகுல். நாடகத்தின் முடிவில் நகுல் பாஸ்மார்க் வாங்கும் ரிசல்ட்டே க்ளைமாக்ஸ்.
இயக்குனரின் கமர்ஷியல் டிராக்கில் கனகச்சிதமாக வண்டியோட்டியுள்ளார் நகுல். தன்னை மாசி என்றும் மணி என்றும் மாற்றி மாற்றி சுனேனாவிடம் தப்பிக்கும் எபிசோட்கள் சுவாரஸ்யம்.
இரண்டாவது முறையாக நகுலுடன் இணைந்திருக்கும் சுனேனா, கொப்பளிக்கும் கோபமாக இருந்தாலும் கொஞ்சுகிற காதலாக இருந்தாலும் அட்டகாசமாக பிரதிபலிப்பது அழகு. பாடல் காட்சிகளில்கூடுதல் அழகில் கொள்ளையடிக்கிறார் மனதை.
ஹீரோவின் சேட்டை போதாதென்று சந்தானம், கருணாஸ், எம்.எஸ்.பாஸ்கர் கோஷ்டிகளின் காமெடிகளும் பதம் பார்க்கிறது வயிற்றை. ரொம்ப நாளைக்கு பிறகு டி.இமான் சோபித்திருக்கிறார். "ஓ.திவ்யா ஓ திவ்யா...", "டோரா டோரா..." பாடல்கள் பரவசம். வெற்றியின் ஒளிப்பதிவிலும் நேர்த்தி.
லாஜிக்கெல்லாம் இல்லையென்றாலும் ஜாலியாக டைம் பாஸாகிறது 'மாசிலாமணி'