தனது முந்தைய படங்களில் வாழ்க்கையின் எதார்த்தத்தை பிரதிபலித்த சேரன், இம்முறை கொஞ்சம் உருமாறி மார்டன் பாதரசம் பொருத்தி மாயக்கண்ணாடியை காட்டியிருக்கிறார்.
நிறைய சம்பாதித்து வாழ்க்கையை சொர்க்கபுரியாக்கிவிட வேண்டுமென்ற ஆசை சாதாரண மனிதனுக்குள்ளும் கூடுகட்டியிருக்கும். இந்த ஆசையை அடைகாத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கையை 'பெற்று' விட நினைப்பவர்கள்தான் படத்தின் நாயகன், நாயகி.
பல வசதிகளையும் கொண்ட சலூன் கடையில் சிகையலங்காரம் செய்யும் வேலையில் இருப்பவர் சேரன். அழகுநிலையத்தில் வேலை செய்பவர் நவ்யா நாயர். அலங்காரம் செய்துகொள்ள வரும் விஜபிக்களின் பணக்கார வாழ்க்கையின் ஆசை இவர்களுக்கும் விதைபோட, சீக்கிரமாக சம்பாதிக்க அதற்கான வழிகளை தேடியலைகின்றனர். இதனால் இருக்கிற வேலையில் கவனத்தை சிதறடிக்கின்றனர்.
நாளடைவில் வாழ்க்கையின் நிஜம் இவர்களின் ஆசைகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றுகிறது சந்தோஷம், சம்பாத்தியம் என எல்லாவற்றையும் இழக்கின்றனர். அனுபவம் பாடம் கற்றுத்தர, பழையபடி சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதே கதை.
நவீன காலத்திற்கு ஏற்றவாறு படம் பண்ண வேண்டும், இன்றைய தலைமுறைக்கு இதன்மூலம் அறிவுரை சொல்ல வேண்டும் என்ற இரண்டு விஷயங்களையும் சேரன் குழப்பிக் கொண்டதால் திரைக்கதையில் தெளிவை பூதக்கண்ணாடி போட்டு தேட வேண்டிதாகிவிட்டது.
சேரன் படத்தில் பாரீன் டூயட் இல்லை என்ற குறையை இப்படம் மூலம் தீர்த்துக் கொண்டதை தவிர வேறெந்த புதுமையையும் செய்யவில்லை.
சலூன் கடைக்கு வரும் பெரிய மனிதர்களிடம் அவர்கள் உபயோகிக்கும் பொருட்களின் விலை கேட்டு வியப்படையும் காட்சிகளில் செயற்கைத்தனமும் மிகைப்படுத்தலுமே மிச்சம்.
சினிமாவுக்குள் சினிமா காட்டிய இடங்களும் பழைய பயாஸ்கோப் க்ளைமாக்ஸில் நடிகனாக ஆசைப்படும் நாயகனின் கனவு பலிக்காமல் பழைய வேலைக்கே திரும்புவதுபோல் காட்டுவதில் மட்டும் சினிமாத்தனம் இல்லாத இயக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
அதையே வேறொரு கோணத்தில் பார்க்கும்போது குலத்தொழிலுக்கு கொடிப்பிடிக்கிறாரோ என்ற பயமும் 'ப்ளார்' விடுகிறது.
அம்மாவின் சிகிச்சைக்காக தவறான தொழிலில் ஈடுபட்டு அதனால் ஜெயிலுக்கு போகும் சூழலில் வாழ்க்கையின் கசப்புகளை சுவைக்கும் இடங்களில் சேரன் சிறப்பு. 'தப்போ சரியோ அவன நான் காதலிச்சிட்டேன்பா....' என அப்பாவிடம் கதறும் காட்சிகளில் நவ்யா சபாஷ்.
சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாக சொல்லி சேரனை 'ஜிம்மில்' வதைக்கும் வாலிபர், தெருத்தெருவாக டீ விற்க ஆரம்பித்து பாஸ்ட்புட் கடை நடத்தும் அளவுக்கு மெல்ல உயரம் சேரனின் அறை நண்பன் போன்ற கேரக்டர்களில் சுடச்சுட சுவராஸ்யம்.
மூன்றுமணி நேர படத்தில் கடைசி முப்பது நிமிடங்களில் மட்டுமே இயக்குனர் சேரன் இருக்குமிடம் தெரிகிறது. அதற்கு முன்வரை மாயம்தான்.
'மாயக்கண்ணாடி' மங்கல்