பழைய சட்டைக்கு புதுச்சாயமிட்டிருக்கும் முயற்சியில் கமர்ஷியல் பளபளக்கிறது.
எதிலும் வல்லவன் ஆனால் எவருக்கும் நல்லவனில்லை. இதுதான் நாயகன் ஜீவன். சின்னவயசிலேயே கெட்ட சகவாசத்தால் ஏமாற்றுக்காரனாக வளர்கிறார் ஜீவன். நாற்றம்பிடித்த ஆடையில் வாசனை திரவியம் தெளித்தால் நுகரப்படுவது நாற்றமா? வாசமா?
அப்படிதான் வாய்நிறைய புழுகுகளையும், மூளை முழுவதும் நரித்தனமும் கொண்ட ஜீவனின் மயக்கும் பேச்சில் ஏமாந்துபோகின்றனர் ஐந்து பெண்கள். ஏமாந்துபோன பஞ்சவர்ண கிளிகளில் நான்கு கிளிகள் ஜீவனுக்கு எதிராய் கோர்ட் படியேற, குற்றவாளி கூண்டில் ஜீவன்.
நாயகனின் ஆசை வார்த்தைகளில் மோசம் போன பெண்களும், அரசுதரப்பு வக்கீலும் ஜீவனுக்கு எதிரான குற்றங்களை அடுக்க ஆரம்பிக்க, அதனை அழகாக கலைத்துப்போடுகிறது ஜீவனின் வாதம். நீதி தேவதையிடமிருந்து தப்பிக்கும் ஜீவன் திருந்துகிறாரா அல்லது பழைய செயலுக்கே திரும்புகிறாரா என்பது க்ளைமாக்ஸில் தெரிகிறது.
ஜெமினி கணேசன் நடித்த பாத்திரம் ஜீவனுக்கு. குருவி தலையில் பணங்காய் என்றாலும் சிரமமில்லாமல் சுமந்து தூக்கி நிறுத்தியிருக்கிறார் கேரக்டரை. ஒவ்வொரு பெண்ணையும் ஏமாற்றுவது தப்பான காரியம் என்றாலும் அவரது வசனங்களும், அதற்கிணையான செயல்களும் ரசிக்கவே வைக்கிறது.
தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை சாமர்த்தியமாக உடைத்தெடுக்கும் கோர்ட் காட்சிகளிலும் ஆஹா... வெரிகுட் ஜீவன்.
ஆசை வார்த்தையில் சிக்கி ஏமாறும் பெண்களாக சினேகா, நமிதா, மாளவிகா, ஜோதிர்மயி, கீர்த்திசாவ்லா கேரக்டர்களை 5 தட்டுக்கள் கொண்ட தராசில் எடைபோட்டால் கடைசி நால்வருக்கும் சமமான இடமே. சினேகாவுக்கு மட்டும் தனி டிராக்.
ஜீவனின் எல்லா பித்தலாட்டங்களும் நம்பும்படியாக இருந்தாலும் கிருஷ்ணனின் அவதாரமாக வந்து ஏமாற்றும் இடம் செயற்கை குவியல்.
யு.கே. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு, பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம் கவனிக்க வைக்கிறது. விஜய் ஆண்டனியின் இசையில் 'நீ கவிதை.....' 'ஏன் எனக்கு' பாடல்கள் வித்தியாச மெட்டுக்கள்.
பழைய கதைதான் என்றாலும் பொழுதுபோக்குக்கு பஞ்சமில்லாமல் போரடிக்காமல் இயக்கியிருக்கும் செல்வாவுக்கு பாராட்டுக்கள்.
'நான் அவனில்லை' படம் பார்ப்பவர்களை ஏமாற்றமாட்டான்.