ஒரே விளக்கில் எரியும் மூன்று திரிபோல ஒரே கதையை மூன்றாக பிரித்து தந்திருக்கும் '12 -B' ஸ்டைலிலான திரைக்கதை.
பொதுவாக இம்மாதிரியான முயற்சியை கையிலெடுப்பது என்பது காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடுவது மாதிரிதான். இயக்குனர் துரையும் இதில் எதிர் நீச்சல் போட்டிருக்கிறார். ஆனால் அவர் கரை சேருவது ரசிகர்களின் கையில்தான் உள்ளது.
சென்னையில் நிகழும் மர்மக்கொலைகள் காவல் துறையின் கண்களில் விரல்விட்டு ஆட்டுகிறது. கொலையாளிக்கு வலைவீச நினைக்கும் போலீஸூக்கு எந்த துப்பும் கிடைக்காததால் காக்கிசட்டையெல்லாம் வியர்வையில் நனைந்து கறுப்புச்சட்டையாகிறது.
இன்னொரு ட்ராக்கில் சாப்ட்வேர் இன்ஜினியரான பரத் - மீரா ஜாஸ்மினை லவ்வி கல்யாணம் செய்துகொள்கிறார். பரத் வேலைக்குப் போனபிறகு தனியாக இருக்கும் மீராஜாஸ்மினுக்கு தூண்டில் போடுகிறார் லோக்கல் இன்ஸ்பெக்டர். ஒரு கட்டத்தில் நிலைமை விபரீதமாகிறது. பரத்தை கடத்தி வைக்கும் இன்ஸ்பெக்டர் 'கணவனை உயிரோடு பார்க்க வேண்டுமென்றால் என் ஆசைக்கு இசைந்து கொடு' என மிரட்ட, பரத் - மீராஜாஸ்மின் நிலை....
மூன்றாம் கிளையாக சிறைக்கைதியான பரத் தற்கொலைக்கு முயல்வதும், அதற்கு ஜெயிலில் தரும் கொடுந்தண்டனைகளுமாக போகிறது இன்னொரு ட்ராக்.
இப்படி திடுக் திடுக், படக் படக், தடக் தடக்காக போகும் மூன்று கதைகளின் முடிச்சுகளை கிளைமாக்ஸில் அவிழப்பதற்குள் கட்டுண்ட உணர்வு நமக்கு.
பரத்திற்கு எத்தனை வேடம் என்ற ஒரு சஸ்பென்ஸை வைத்துக்கொண்டு கதையில் கண்கட்டி வித்தைக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
நேபாளி, ரொமான்ஸ் மன்னன், சிறைக்கைதி என தீபாவளி டிரிபிள் ஷாட்டாக பிண்ணியிருக்கிறார் பரத். ஒவ்வொரு கேரக்டருக்குமான பாடிலாங்வேஜில் காட்டியிருக்கும் வித்தியாசத்திற்கு தாராளமாக தட்டலாம் கைகளை.
விருந்துக்கு வந்த மருமகனை வெறும் வயிற்றுடன் திருப்பி வைத்த கதைதான் மீராஜாஸ்மினுக்கும். இன்ஸ்பெக்டரின் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் சூழ்நிலையில் மட்டும் லைட் தீனி கிடைத்திருக்கிறது நடிப்பிற்கு. மற்றபடி பச்.
இந்த இடத்தில் இத்தனை மணிக்கு இவரை கொலை செய்யப்போகிறேன் என சொல்லிவிட்டு கொலை செய்யும் 'கைதியின் டைரி' காலத்து யோசனைக்கான அவசியம் ஏனென்று தெரியவில்லை.
நேபாளி பாத்திரத்தில் வாதம் வந்தவர்போல பேசுவது எதற்காக? கொலை செய்யும் முறைகளை ஆய்வு ரீதியாக விளக்கும் அத்தியாவசியம் ஏன்? தனிமை சிறையில் கடும் பாதுகாப்பிலிருந்த பரத் ஜெயிலரை மிக எளிதாக கொல்வது எப்படி? என அடுத்தடுத்து எழும் கேள்விகளுக்கு பதில் தெரிவதற்கு முன்பே படம் முடிந்துவிடுகிறது.
தன்னை அடையாளம் கண்டுபிடிக்க வரும் போலீஸை பரத் ஒரே போனில் திசை திருப்புவது போன்ற ஐடியாக்கள் படத்தின் விறுவிறுப்புக்கு கைக்கொடுக்கிறது. மீராஜாஸ்மின் - பரத் சம்மந்தப்பட்ட காதல் காட்சிகளிளெல்லாம் நமத்துப்போன சிந்தனைகள்.
கேரக்டர்களுக்கு ஏற்றவாறு வெவ்வேறு வகையான பின்னணி இசையைக்கொடுத்து தன்னை நிருபித்திருக்கும் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு பாராட்டுக்கள். ஒளிப்பதிவில் நேர்த்தியை காட்டியிருக்கும் மதி, நேபாளியின் உழைப்பாளிகளில் முக்கியமானவர்.
தேவையற்ற இழுவைகள் படத்தில் பல இடங்களில் இருக்கிறது. இவற்றையெல்லாம் தவிர்ததிருந்தால் திடமானவனாக இருந்திருப்பான் இந்த 'நேபாளி'