முஸ்லீம் பெண்ணுடன் தமிழ் பையன் தாயகம் வந்தது, பாகிஸ்தான் சிறுமிக்கு இந்தியாவில் சிகிச்சையளித்தது போன்ற பேப்பர் செய்திகளை இயக்குனர் நினைத்து நினைத்து பார்த்ததன் விளைவோ என்னவோ இந்த கதை உருவாக காரணமாகயிருந்திருக்கிறது.
இயக்குனராகவேண்டும் என்ற கனவில் திரைப்படகல்லூரியில் படிக்கும் கெட்டிக்கார மாணவர் விக்ராந்த். தங்கையின் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் பாகிஸ்தான் பெண் ஆஷிதா. இருவருக்குமிடையே காதலாகிறது. சும்மா இருக்குமா மதவெறி? இந்தியாவை அடியோடு வெறுக்கும் ஆஷிதாவின் தந்தை மகளின் காதலை கூறுபோட நினைக்கிறார். இந்துத்துவா கொள்கையில் தீவிரமாக இருக்கும் ராஜ்கபூரும் இதற்கு துணை நிற்க, அவர்கள் எண்ணப்படியே விக்ராந்த் - ஆஷிதாவுக்குள் துளிர்த்த காதல் பொசுங்கி போகிறது. சுபமில்லாத க்ளைமாக்ஸ் படம் பார்ப்பவர்களிடம் சோகத்தை திணித்து வெளியேற வைக்கிறது.
தேசம், மதம், இனம் கடந்த ஒரு காதலை கையிலெடுத்துக் கொண்டதற்காக இயக்குனரை பாராட்ட தோன்றும் வேளையில் தொடரும் திரைக்கதை சறுக்கல்கள் எண்ணத்தை வாபஸ்பெற வைக்கிறது.
சோடாபுட்டி, சைக்கோத்தன பேச்சு என 'காதல்கொண்டேன்' தனுஷ் ஸ்டைலில் அறிமுக காட்சியிலேயே ஆர்ப்பரிக்க வைக்கிறார் விக்ராந்த். அட வித்தியாசம் காட்டுகிறாரே என்றெண்ணி வியந்தால் அடுதடுத்த காட்சிகளில் ஏமாற்றமே மிச்சம். க்ளைமாக்ஸில் பைத்தியமாக மனதை கணக்க வைக்கிறார்.
விக்ராந்தின் பெற்றோராக 'ஒருதலை ராகம்' ஷங்கரும் - ரோஜாவும் காணாமல் போகும் மகனை கடைசிவரை தேடியலைவது மட்டும் பரிதாபம் அல்ல. கேரக்டர்களும் பரிதாபமாக ஊசலாடுகிறது.
பிசு பிசுத்த தலைமுடி - தாடி, அழுக்குகள் ஆக்ரமித்த உடம்பு என விக்ராந்த் பைத்தியமாகும் காட்சி.ஆடியன்சுகளுக்கே அது விக்ராந்தான் என்று தெரியும்போது பெற்றவர்களுக்கு அடையாளம் தெரியாமல் இருப்பது நம்பும்படியாக இல்லை.
மார்ச்சுவரியில் மகனின் பிணத்தை அடையாளம் காட்டச் செல்லுமிடத்தில் பிணவறை ஊழியர் நடந்துகொள்ளும் விதம், போலீஸ் அதிகாரியின் மனிதாபிமானமற்ற குணம் ஆகியவைகள் செயற்கையின் உச்சமாக இருப்பதால் மனதுருக வேண்டிய காட்சிகளில் குறட்டைவிடவேண்டிய சூழ்நிலை.
கடற்கரையில் காதலிக்கு கொடுக்க கைநிறைய மல்லிகைப்பூ வாங்குகிறார் விக்ராந்த். என்ன ஆச்சர்யம்! அடுத்த காட்சியில் அது காணாமல் போவது காமெடி மேஜிக்.
நாயகன் - நாயகியிடையே காதல் தோன்றும் சூழ்நிலைகளிலும் டெஸ்ட் டியூப் பேபியை காட்டிலும் செயற்கைதனம்.
திரைக்கதை உதவியில் செல்வராகவன் பெயரை வேறு போட்டு குருவின் கோபத்திற்கு ஆளாகிறார் இயக்குனர் மணிகண்டன்.
'நினைத்து நினைத்து பார்த்தேன்' ஞாபகமில்லை.