பள்ளி மணி அடித்ததும் ஹோ... வென கூவியபடி வீட்டுக்கு ஓடிவந்த நிமிடங்கள், 'நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாய்யக்கு...' வீட்டுபாடம் செய்ய மறந்த மாணவனை வாத்தியார் கடிந்துகொண்ட ஞாபகம், குறும்பு செய்த சக நண்பனுக்கு டீச்சர் காதை திருகி பஞ்சாராக்கும்போது வந்த அற்ப சந்தோஷம், இன்ஸ்பெக்ஷ்ன் வரும் கல்வி அதிகாரிக்கு மாணவர்களைவிட அதிகம் பயந்த ஆசிரியர்கள் என மனசுக்குள் புதைந்து கிடக்கும் பால்ய கால நினைவுகளை கிளறிவிடும் பொக்கிஷம் இந்த பள்ளிக்கூடம்.
அடிப்படை வசதிகளற்று இருக்கும் பள்ளிக்கூடத்தை தொடர்ந்து நடத்த தடைபோடுகிறார்கள் நில உரிமையாளர்கள். இதற்கெதிராக கிளர்ந்தெழும் ஆசிரியர்களும் உள்ளூர்வாசிகளும் இதே பள்ளியில் படித்து நல்ல நிலமையில் இருக்கும் பழைய மாணவர்களை ஒன்று திரட்டி மீண்டும் பள்ளியை நடத்த ஏற்பாடு செய்கின்றனர்.
கலெக்டராக இருக்கும் நரேன், இயக்குனராக இருக்கும் சீமான் போன்றவர்களின் உதவிக் கேட்டு புறப்படுகிறார் அவர்களுடன் ஒன்றாக படித்த தங்கர்பச்சான். விஷயத்தை கேள்விப்பட்டு பதறிப்போகும் நரேன், உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தாலும் ஊருக்குள் வரமாட்டேன் என அடம்பிடிக்கிறார். இதற்கு காரணம் ஏற்கனவே தனது மனசில் இடம்பிடித்த சினேகாதான். சினேகாவை காதலித்ததால் ஏற்பட்ட அவமானமும் இழப்புகளுமே நரேனை ஊருக்குள்ளே வர தடுக்கும் காரணிகள்.
என்னாச்சு பள்ளிக்கூடம்? என்னாச்சு காதல்? இரண்டுக்கும் கிடைக்கிறது விடை.
படத்தின் ஹீரோ யாரென்று இனம்பிரிக்கமுடியாதபடி கதையை கதாநாயகனாக்கியிருக்கும் இயக்குனர் தங்கர்பச்சான், தண்ணீர் நனைந்த சாக்பீஸால் கரும்பலகையில் எழுதியதைபோல மனச்சிலேட்டில் பதிந்து கொள்கிறார்.
'ஏலே இதையா பழைய சட்டைன்னு சொல்ற இது இருந்தா காலத்துக்கும் எனக்கு போதுமடா....' என சீமானின் உடைகளை கேட்டு வாங்குவது, நண்பர்களிடமுள்ள கோபத்தை மறந்து அவர்கள் தன் வீட்டுக்கு வந்தது தெரிந்ததும் ஓடியாடி உபசரிப்பது என ஆங்காங்கே கண்ணீரை மடை திறக்க வைக்கிறார் தங்கர்.
கலெக்டர் என்ற பவரையும் பவுசையும் மறந்து தேடிவரும் நண்பனை பார்க்க ஓடிவரும் இடத்தில் நரேனுடன் இணைந்து நாமும் கலங்க வேண்டியுள்ளது. சினேகாவின் பேச்சையெடுத்தாலே சுள்ளென்று கோபப்படுவது, காதலிக்கும் தருணங்களில் கள்ளம் கபடமற்ற கூடலுக்காக ப்ரியப்படுவது போன்ற காட்சிகளில் பிண்ணியெடுக்கிறார்.
கோபிகா டீச்சராக சினேகா கதாபாத்திரத்தில் வேறு எவரும் இத்தனை அழகாக பொருந்தமுடியாது. ஊருக்குள்ளே நரேன் வந்தது தெரிந்ததும் யாருக்கும் தெரியாமல் உடைந்தழும்போது நூற்றுக்கு நூறு போடலாம் இந்த டீச்சருக்கு.
உள்ளூர் நர்ஸாக வந்து காமப்பிசாசுகளின் தொந்தரவுகளுக்கு ஆளாகி, அதனை விவரம் அறியாத விடலைகளிடம் சொல்லி கதறும் காட்சியில் ஸ்ரேயாரெட்டி, நடிப்பில் கெட்டி.
பழைய மாணவர்களெல்லாம் ஒன்றுகூடி அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது நமக்குள்ளும் கருத்தரிக்க ஆரம்பிக்கிறது பள்ளிக்கூட நினைவுகள். க்ளைமாக்ஸில் இயக்குனர் நண்பனான சீமான், தங்கர்பச்சானுக்கு பணம் கொடுத்து உதவ முன் வருகிறார். பத்து ரூபாய் நோட்டே பெரிய விஷயமாக இருந்தாலும் கட்டுகட்டாக பணத்தை மறுக்கும் தங்கர்' டேய் இதெல்லாம் வேணாம்டா.... இந்த பாழாப்போன பணம்தான்டா எல்லாத்துக்கும் காரணம்...' என்னும்போது உருகாத உள்ளம் ஒன்றுகூட இருக்காது.
எல்லாம் சென்றபிறகு பள்ளிக்கூட பெஞ்சில் அமரும் தங்கர்பச்சான், வறண்ட நிலமாய் வாழ்க்கை மாறியதற்கு படிக்காமல் போனதே காரணம் என மனம்வெதும்பி அழும்போதே கறுந்திரையுடன் படத்தை முடிப்பது அவருக்கான தனி முத்திரை.
இப்படி நிறைய யதார்த்தங்களை விதைத்திருக்கும் தங்கர்பச்சான், சில இடங்களில் எல்லைமீறவும் செய்திருக்கிறார். ஸ்ரேயாவின் கையையும் காலையும் சுரண்ட மாணவர்கள் ஆசைப்படுவதுபோல காட்டுவது, இளம்பிராயத்து காதலில் கனவு பாட்டை திணித்திருப்பதும் பள்ளிக்கூடத்தின் ஓட்டைகள். முன்பாதி படத்தின் பல இடங்களில் செயற்கைத்தனமான உணர்வுகளே. செக்ஸ் காட்சிகள் இருக்கக்கூடாது என மேடைக்கு மேடை மைக்கில் குரல்கொடுக்கும் தங்கர்பச்சான் அவர்களே! நீங்கள் பேசுவதையும் செய்வதையும் வெவ்வேறாக கொண்ட குறைப்பாடுள்ள படைப்பாளி.
'பள்ளிக்கூடம்' பாருங்கள் ப்ளிஸ்!