கதையே இல்லாத கதையை காசு கொடுத்து வாங்கி ரீ-மேக் பெயரில் கையை சுட்டுக்கொள்ளும் படங்களில் பரட்டையும் பத்தோடு பதினொன்று.
அம்மா அர்ச்சனாவுக்கு செல்ல மகனாக அழகுசுந்தரம் பெயரில் திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமத்தில் சூதுவாது தெரியாமல் சுற்றி திரிபவர் தனுஷ். நோய்வாய்ப்பட்டு கிடக்கும் அப்பா லிவிங்ஸ்டன் திடீரென்று செத்துபோக நிலைகுலைந்து போகின்றனர் அம்மாவும் மகனும்.
அர்ச்சனாவுக்கு பூவையும் பொட்டையும் அழித்து ஊர் பெரிசுகள் சடங்கு செய்யும்போது அம்மாவின் கண்ணாடி வளையல் உடைக்கப்பட அலறுகிறார் தனுஷ். அம்மாவுக்கு தங்க வளையல் வாங்கித்தரும் லட்சியத்தில் சென்னைக்கு வண்டி ஏறும் தனுஷ் வந்த இடத்தில் சந்திக்கும் பிரச்சனைகள்தான் கதை.
கிராமத்து அழகுசுந்தரம் தவிர ஏற்கனவே பார்த்து சலித்த தனுஷ்தான் பரட்டையாக இதிலும் பயமுறுத்துகிறார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது உண்மைதான். ஆனாலும் கேப் வெடிக்கும் தீபாவளி துப்பாக்கியால் மிலிட்டரியையே காலி பண்ணுவது எப்படி கற்பனையாக தெரியுமே அப்படிதான் இருக்கிறது தனுஷின் திடீர் வெறியும் வேகமும்.
ஒரு டஜன் ஆட்கள் வந்தாலும் தனுஷ் ஒற்றை ஆளாய் கொத்து புரோட்டா போடும் காமெடியெல்லாம் சூப்பர் சர்க்கஸ். அடிக்கடி அம்மாவுடன் கூத்தாடுவதும் கேலி கூத்தாகிவிடுகிறது. சில்லரை காசை சேட்டுகடையில் கொடுத்து அம்மாவுக்கு நகை வாங்கிவரும் புத்திசாலித்தனமும் சிறுபிள்ளைகளும் ரசித்து மகிழும் 'காமெடி.'
ஜெர்னலிசம் படிக்கும் மாணவியாக மீராஜாஸ்மின். தனுஷின் போட்டோ கைவசம் இருந்தும் பரட்டைதான் அழகுசுந்தரம் என்று கண்டுபிடிக்க முடியாத புத்திசாலித்தனமான கேரக்டர். இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் இடையே காதலே அரும்பாத நிலையில் இருவரையும் டூயட் ஆட விட்டிருக்கும் இயக்குனரின் 'புத்திசாலித்தனத்தை' என்னவென்று சொல்வது.
'குயிலை பிடிச்சு கூண்டிலடைச்சு கூவ சொல்கிற உலகம்...' என்றவரி மீரா ஜாஸ்மினுக்கு பொருத்தம் என்றால் அம்மாவாக வரும் அர்ச்சனா 'மயிலை பிடிச்சு காலை உடைச்சு ஆடசொல்கிற உலகம்' வரிக்கு பொருத்தமாகிறார். கிராமத்திலிருந்து நகரத்திற்கு டிரங்கு பெட்டிகளுடன் வரும் கேரக்டர்களை காமெடியாக பார்க்கும் இந்த காலத்தில் அர்ச்சனா துணிமணிகளை மூட்டை கட்டிக்கொண்டு வருவதுபோல் சித்தரிப்பதை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
ஸ்டார் ஹோட்டல் 'குக்'கை அழைத்து வெந்நீர் போட்டுதரச்சொன்னதுபோல் ஆகிவிட்டது இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் நிலைமை.
'பரட்டை என்கிற அழகுசுந்தரம்' குறட்டை.