பொட்டல் காட்டின் புழுதி ஒட்டாத, திருவிழா சோற்றை தின்று ருசிக்காத, வயல்வரப்புகளில் பாதம் பதிக்காத, மாமன் மச்சான்களுடன் மல்லுக்கு நிற்காத பட்டணத்து மனிதர்களுக்குள்ளும் கிராமத்து உணர்வுகளை உள்ளிறக்கும் அமீரின் இந்த படைப்பை நூற்றாண்டு முழுமைக்கும் மெச்சி பாராட்டலாம்.
இயக்குனருக்கு என்ன விருது கொடுத்தாலும் தகும் என்றாலும் உள்ளூர புறப்படும் ஆசை, கிடா வெட்டி விருந்து வைத்து கெளரவிக்கவேண்டும் என்பதே.
பிசுக்கு பிடித்த தலைமுடி, முரட்டுகொம்புகளாய் மீசை, வெட்கம் பற்றி கவலைப்படாமல் கால் சட்டை எட்டிப்பாரக்கும் கைலிகட்டு என பக்கா காட்டானாக வலம் வருபவர் கார்த்தி. இவருக்கு பக்கபலமாய் கெட்ட சகவாசத்தை நுகரும் சித்தப்பா சரவணன்.
விபரம் அறியாத வயதில் உயிரை காப்பாற்றினான் என்பதற்காக ருதுவான பிறகும் கார்த்தியை உசுருக்கு சமமாய் காதல் கொள்ளும் மாமன் (பொன்வண்ணன்) மகளாக ப்ரியாமணி.
கத்திக்குத்துக்கள், களவாணித்தனங்கள் என திமிரெடுத்து திரியும் கார்த்தியின் லட்சியம் மத்திய சிறையில் வாசம் செய்யுமளவிற்கு பெரிய குற்றம் செய்யவேண்டும் என்பதுதான். இப்படியான காட்டானுக்கு பொண்ணுதர யாருக்குதான் மனசு வரும். ப்ரியாமணியின் பெற்றோரும் அப்படியான முடிவைதான் எடுக்கிறார்கள்.
தன்னை கண்டாலே தூரவிலகும் கார்த்தியின் முரட்டு மனசை ஒரு கட்டத்தில் ப்ரியாமணி புரட்டிபோட, கார்த்தியின் மனசுக்குள்ளும் சுரக்கிறது காதலின் ஊற்று.
எட்டி விரட்டியவள் கிட்டே வரும் தருவாயில், வெட்ட வருகிறார் மாமன். என்னவானது இந்த ஜீவன்கள் என்பதற்கு பதில் சொல்கிறது பருத்திவீரன் க்ளைமாக்ஸ்.
சிவக்குமாரின் மகன், சூர்யாவின் தம்பி என்ற அடையாளங்களெல்லாம் இரண்டாமிடத்துக்கு நகர, நல்ல நடிகர் என்ற அடையாளம் கார்த்தியின் புகழை தமிழக மக்களின் மனசுக்குள் அடைகாக்க வைத்துள்ளது. முதல் படத்திலேயே அப்பாவுக்கும் அண்ணனுக்கும் கிடைக்காத ஓபனிங் கார்த்திக்கிற்கு கிடைத்துள்ளது பெருமை.
போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பத்திரிகைளுக்கு பெருமிதம் பொங்க போஸ் கொடுப்பது, கண்களில் எரிமலைவெடிக்க குஸ்தி வாத்தியாரின் ஆட்களை பொளந்து கட்டுவது, நாக்கை மடித்து, தொடை தெரிய டப்பாங்குத்து ஆடி மகிழ்வது, மெல்ல துளிர்க்கும் காதலை சொல்ல துடிக்கும் தருணம், காதலியின் பரிதாப முடிவை ஜீரணிக்கமுடியாமல் 'முத்தழகு.... முத்தழகு....' என்றவாறு தொண்டைக்கும் உதட்டுக்கும் இடையே குரல் சிக்க சப்தம் எழுப்புவது என கார்த்தி நடிப்பில் தவம் செய்திருப்பது புலப்படுகிறது.
அட.... ப்ரியாமணியா இது? " நீ ஜெயிலுக்கு போறதுக்காகவா உசுர கையில புடிச்சிகிட்டு இருக்கேன்... " என கார்த்தியிடம் காதலை புரியவைப்பதாகட்டும், "ஏதாவது பேசுன ஒரே போடா போட்டிருவேன்" என அம்மாவுக்கு எதிராக அரிவாளை தூக்கி ஆத்திரப்படுவதாகயிருக்கட்டும். அப்பா அடித்து உதைத்ததும் மூளையில் உட்கார்ந்து மூக்கை சிந்திகொண்டிருக்காமல் தட்டு நிறைய சோற்றை போட்டு தின்று, திமிரை வெளிக்காட்டுவதாகயிருக்கட்டும் பிரமாதமணியாக அசத்தியுள்ளார் ப்ரியாமணி.
கழுவத்தேவராக பொன்வண்ணன், சித்தப்பாவாக சரவணன், எடுத்துவைக்கும் அடியெல்லாம் சறுக்கிவிடும் பரிதாபத்தில் சிரிக்கவைக்கும் கஞ்சாகருப்பு, வீராப்பு பேசி தலைவீங்கும் அளவிற்கு வாங்கிக்கட்டிக்கொள்ளும் பொணந்திண்ணியாக வரும் பெரியவர், குட்டிசாத்தானாக வரும் சிறுவன், சிறுவயது நாயகன், நாயகியாக வரும் பொடிசுகள் உட்பட படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரத்துக்கும் கைதட்டி பாராட்டு தெரிவிக்கலாம்.
அமீர்போட்ட விதையில் ஒரு பருக்கைகூட சிந்தாமல் தனது ஒளியூட்டலில் இயக்குனரின் படைப்பை அழகாக சமைத்துகொடுத்திருக்கிறார் ராம்ஜி.
பின்னணி இசையில் யுவன் முன்னணிக்கு சென்று கொண்டிருப்பதற்கு இந்த படம் ஒரு சான்று. பாடல் அமைக்கும் விதத்திலும் அப்பாவின் தரத்திற்கு உயர்ந்துள்ளார். யுவனின் மெட்டும் சினேகனின் வரிகளும் பின்னி பிணைந்து நல்ல இசையை பெற்றெடுத்துள்ளது.
'அறியாத வயசு புரியாத மனசு'
'அடி சண்டாளி உன் பார்வையில்
என்னை சுண்டெலியா ஆக்கிப்புட்ட
நீ கொன்னாகூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்த புள்ள' என கவிதை முகம் காட்டுகிறது சினேகனின் பாடல்.
இத்தனை சிறப்புகளுக்கும் காரணமான அமீரின் திறமைக்கு திருஷ்டி பொட்டு வேண்டாமா... இருக்கிறது. க்ளைமாக்ஸின் கோரமும், நீளமும்.
'பருத்திவீரன்' தியேட்டரை கிராமமாக்கிய அற்புதம்.