புலம் பெயரும் தமிழர்களின் நிலையை சொல்லவேன்டும் என்று முனைந்த இயக்குனர், தடம் மாறியும் தடுமாறியும் போயிருக்கும் இடமே இந்த 'ராமேஸ்வரம்'.
அடர்ந்த காட்டுக்குள் தப்பியோடும் நாயகனை (ஜீவா) மோப்ப நாய்களுடன் துரத்துகின்றனர் வனஅதிகாரிகள். நாயகனின் உயிருக்கு சேதம் விளைவிக்காமல் சர்வ ஜாக்கிரதையுடன் அவ்வப்போது துப்பாக்கி குண்டுகளும் பாய்கிறது.
ஒரு கட்டத்தில் குண்டடிபடும் நாயகன் குப்புற விழ, மணிரத்னம் பட பாணியில் மூன்று மாதங்களுக்கு முன் என்னும் டைட்டிலுடன் ப்ளாஷ்பேக் விரிகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரம் வரும் இலங்கை தமிழர்களில், பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட இளைஞராக நாயகன் ஜீவா அடையாளம் காட்டப்படுகிறார்.
பணக்கார லாலிற்கு சொந்தமான இடத்தில் தங்கவைக்கப்படுகின்றனர் அவர்கள். லாலின் மகளான பாவனா ஜீவாவை காதல் கொள்ள, ஏகப்பட்ட மறுதலிப்பிற்கு பிறகு ஏற்றுக்கொள்கிறார் நாயகன்.
கதையை நகர்த்த இது போதாதா? வெகுண்டெழும் லாலும், பாவனாவின் முறைமாப்பிள்ளையும் காதலுக்கு எதிராக வில்லங்கம் செய்கின்றனர். காதல் ஜெயிக்கிறதா என்பதை 'பொருத்திருந்துதான்' பார்க்கவேண்டும்.
கண்ணீரும், கவலை ரேகையுமாக அகதிகளாக இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரம் வந்திறங்கும் முதல் காட்சியிலேயே இயக்குனர் ஏதோ சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்தால் அடுத்தடுத்த காட்சிகளில் காகிதப்பூவாகியிருக்கிறார் நம் எதிர்பார்ப்பை.
இன்னலுறும் தமிழர்களின் நிலைகண்டு கொதிக்கும் ஜீவா திடீரென்று காதலில் விழுந்து கட்சிமாறுவது ஏன் என்றே தெரியவில்லை. பாவனாவிற்கும் வேறுவேலையே இல்லை. திடீர் திடீரென்று ஜீவாமுன் வந்து நின்று காதலை முன்வைக்கிறார்.
கட்டுமரம் ஏறிப் போய் இலங்கை ராணுவத்திறாகு எதிராக நெஞ்சு நிமிர்த்த வேண்டும் என்று நினைக்கும் ஜீவா திடீரென்று பாவனாவுடன் காதல் கப்பலில் ஏற அவரது கொள்கையெல்லாம் குடைசாய்கிறது.
ஏன் அகதி என்றால் காதலிக்கக்கூடாதா? ஒரு காட்சியில் நாயகியின் அப்பாவுக்கு நாயகன் வைக்கும் கேள்வி இது. வரலாம் சார் தவறில்லை, ஆனால் இந்தக் கேளிவிகேட்கும் நாயகன் சராசரி இளைஞராக தெரியவில்லையே அதான் படம் பார்ப்பவர்களுக்கு அவரின் காதலை ஒப்புக்கொள்ளமுடியவில்லை.
'முகம் தெரியாத ஆட்கள் கொடுப்பதை வாங்கும்போது பிச்சைனு எடுக்கும் உணர்வு வந்துவிடும்' என்று ஜீவா உணர்த்தும் இடத்தில் இயக்குனருக்கும் வசனகர்த்தாவிற்கும் சலாம் போடலாம்.
அகதிகளாக வந்தவர்கள் இலங்கைத்தமிழில் பேசும்போது நாயகனான ஜீவா மட்டும் அவ்வப்போது ஸ்லாங் மாறிக்கொள்வது கதையின் ஜீவனை குறைக்கும் நெருடல்.
ஜீவாவிற்கும், பாவனாவின் முறைமாப்பிள்ளையான போஸ்வெங்கட்டுக்கும் இடையே நடக்கும் மோதலில் அழுத்தம் காட்டியிருக்கும் இடத்தில் இயக்குனர் தென்படுகிறார்.
இசையமைப்பாளர் நிருவும் இலங்கைத்தமிழர் என்பதால் உணர்ந்து உருகியிருக்கிறார். 'எல்லோரையும் ஏத்திப்போக கப்பல் வருமா...' பாடலில் எட்டிப்பார்க்கிறது ஈரம். 'காதலின்...' பாடல் சுகம்.
குடையில் மழைநீர் பட்டுத்தெறிக்கும் இடத்தில் நுணுக்கமான பின்னணி இசையை வெளிப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் R.B.குருதேவ் மற்றும் வெற்றியின் பங்கும் சிறப்பு.
நல்ல நோக்கத்தில் கதை சொல்ல முற்பட்டிருக்கும் இயக்குனர் செல்லாவை பாராட்டலாம். ஆனால் பாதைமாறி போனதால் நமக்கும் மனசு மாறுகிறது.
ராமேஸ்வரம் - தொலைதூரம்தான்.