கன்னடத்தில் உபேந்திரா இயக்கத்தில் வெளிவந்து பரபரப்பாக ஒடிய 'A' படமே தமிழில் 'அடாவடி'யாக உருமாறியிருக்கிறது.
திரைப்பட இயக்குனரான சத்யராஜ், செய்யும் தொழிலில் கொஞ்சமும் கவனம் தவறாதவர். முன் கோபத்துக்கு சொந்தகாரரான இவரது நேசம், சுவாசம் எல்லாமே சினிமாதான். இப்படிப்பட்டவரை அறிமுக நடிகை (கதைப்படி) ராதா காதலிக்கிறார்.
தனது காதலை ஒருமுறை எல்லோரது முன்னிலையிலும் ராதா பகீரங்கப்படுத்த அடுத்த நிமிடமே ராதாவின் கன்னத்தில் 'பளார்' விடுகிறார் சத்யராஜ். சத்யராஜ் விலகி விலகிப்போனாலும் அவருக்கு காதலின் உன்னதத்தை உணரவைக்க முயற்சிக்கிறார் ராதா.
கல் நெஞ்சையும் கரைக்கும் சக்திகொண்ட காதல், ஒரு கட்டத்தில் சத்யராஜின் மனசிலும் ஊற்றெடுக்கிறது. இப்போது ராதா, சத்யராஜை ஏற்றுக்கொள்ளாமல் பைனான்சியர் ஒருவருடன் நெருக்கமாகிறார்.
சுமமா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாய் சத்யராஜின் நிலைமை மாற, ராதாவின் நினைவால் மதுவுக்கு அடிமையாகிறார். இதனால் சேர்த்து வைத்த சொத்து, மக்களிடம் கிடைத்த பெயர் - புகழ் எல்லாவற்றையும் இழக்கிறார். சத்யராஜின் மேல் உண்மையான காதல் கொண்டிருந்த ராதா ஏன் விலகிப்போனார்? அஸ்தமனமாகிப்போன சத்யராஜின் சினிமா வாழ்க்கையில் மீண்டும் சூர்யோதயம் கிடைக்கிறதா? என்பதற்கான விடைகள் மீதி கதையில் கிடைக்கிறது.
கோபக்கார இயக்குனர் வேடம் சத்யராஜிக்கு பொருத்தமாக இருக்கிறது. மலை உச்சியில் ஒரு வட்டத்துக்குள் ராதாவை நிறுத்திவைத்து காதலையும் வாழ்க்கையையும் உணர்த்தும் இடம் ரசனை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தலைக்காட்டும் ராதா, க்ளைமாக்ஸில் தனது காதல் நிஜம் என்பதை மெய்ப்பித்து தீக்கிரையாகும் காட்சியில் உருகவைக்கிறார்.
தேவாவின் இசையில் ஒரு பாடல் தவிர மற்றவைகளில் ஜீவன் இல்லை. பின்னணி இசையில் இரைச்சலே அதிகம்.
இரண்டு ரீலுக்கு ஒரு ப்ளாஷ்பேக் வரும்போது திரைக்கதையில் குழப்பம் கூடி கும்மியடிக்கிறது. அதை மட்டுமாவது சரி செய்திருந்தால் இயக்குனர் பரத்ஹன்னாவை பாராட்டியிருக்கலாம்.
'அடாவடி' அவசர கோளாறு.