திகட்ட திகட்ட தேனிலவு கொண்டாட நினைக்கும் காதல் ஜோடியை திகைக்க திகைக்க திகில் வலையில் சிக்க வைக்கும் சிலந்தி இது.
மனித வாடை இல்லாத ஆள் அரவமற்ற தனித்தீவு. வாட்ச்மேன், சமையல்காரனும் மட்டும் உள்ள பனிங்கு பங்களா. திருமண பந்தத்தில் முடிந்த காதலை கண்களில் தேக்கியபடி முதல் ஸ்பரிசத்திற்காக காத்திருக்கும் புதுமண தம்பதிகளாக முன்னா-மோனிகா.
ஒருவருடன் ஒருவர் மகரந்த சேர்க்கை நடத்தப்போகும் களிப்பில் அந்த பங்களாவிற்குள் காலடி எடுத்துவைக்கின்றனர். ரொமாண்டிக் மூடின் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் தட்...தட்...தட்... சத்தம். பள்ளியறையில் இருந்த ஜோடிகளுடன் படம் பார்ப்பவர்களும் எரிச்சலடைய, கதவு திறந்தால் யூனிபார்மைவிட அதிக விறைப்புடன் நிற்கும் வாட்ச்மேன். இசையமைப்பாளர் கொடுக்கும் பின்னணியில் அப்போதே புரிந்துவிடுகிறது இது பயமுறுத்தும் படம் என்று.
மோனிகாவின் பார்வைக்கு மட்டும் வந்துபோகும் அந்த மர்ம உருவம் ஒருமுறை முன்னாவையும் அலறவைக்க, தேனிலவு எண்ணத்தில் ஊற்றப்படுகிறது வேப்பஞ்சாறு. காதல் ஜோடியை மிரட்டுவது அவனா? அவளா? அதுவா? என்ற சஸ்பென்ஸ் லப்டப் எகிறவைக்கும் க்ளைமாக்ஸில் தெரிகிறது.
முன்னெப்போதும் இல்லாத கவர்ச்சியை பந்தி வைக்கும் மோனிகாமேல் தியேட்டரில் உள்ள இளசுகளின் கண்கள் மொய்க்க, கதாநாயகன் முன்னா மட்டும் சும்மா இருப்பாரா என்ன? கம்மங்கொல்லையில் காய்ந்த மாடுமாதிரி மனிதர் புகுந்து விளையாடுகிறார்.
மேனியில் கவர்ச்சியும் முகத்தில் அதிர்ச்சியுமாக பாவனைகளை மாற்றும் மோனிகாவை பாராட்டலாம்.
கதையின் ஆணிவேராக இருக்கும் கதாபாத்திரத்தில் புதுமுகம் சந்துருவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்பதை அவரது நடிப்பு திறமை வெளிக்காட்டுகிறது. கஷ்டப்படும் குடும்பத்தை கரை சேர்ப்பதற்காக எல்.ஐ.சி.பாலிசிக்காக அலையும் சந்துரு, சாப்ட்வேர் பெண்களின் முறைகேடான பழக்கத்திற்கு இரையாகும் இடங்களில் பரிதாபத்தை கட்டிக் கொள்கிறார்.
தனியாக சிக்கிய சிங்கத்தை புள்ளிமான்கள் வேட்டையாடுவது மாதிரியான ராகிங் காட்சிகள் முகம் சுழிக்க வைத்தாலும் க்ளைமாக்ஸில் இயக்குனர் காட்டும் பத்திரிகை ஆதாரங்களை பார்க்கும் போது, அந்த காட்சிகளை எச்சரிகை மணியாகவே எடுத்துக்கொள்ள தோன்றுகிறது. இயக்குனர் ஆதியும் ஒரு பத்திரிகையாளர் என்பதால் சமூக அக்கறையுள்ள கதைக்கருவை எடுத்துக்கொண்டது பாராட்டுக்குரியது. இருப்பினும் நீட்டி முழக்கும் 'நீல' காட்சிகளை குறைத்திருக்கலாம்.
பௌசியாவின் ஒளிப்பதிவு, கார்த்திக்கின் பின்னணி இசையில் பல இடங்களில் படம் பார்ப்பவர்களை துரத்துகிறது பயம்.
நிமிடத்திற்கொருமுறை எதை பார்த்தாலும் ப்யூட்டிபுல் ப்யூட்டிபுல் என்று காதல் ஜோடிகள் பேசும் வசனங்கள் அலுப்பு. 'பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்து ஒருவாளி தண்ணிய எடுத்து ஊத்திட்டாங்க' என்ற வசனத்திற்கு மட்டும் கைதட்டல் கிடைக்கிறது.
உயிரோடு வந்த சமையல்காரன் இறந்து விட்டதாக சொல்வது, எந்த தவறும் செய்யாத மோனிகாவை மர்ம உருவம் கொலை செய்ய முயற்சி செய்வது போன்ற காட்சிகளில் காற்றில் பறக்கிறது லாஜிக்.
பயத்தின் வலையில் சிக்கவைக்கிறது இந்த 'சிலந்தி'