இதுவும் பாசமலர் கதைதான். எனினும் சத்யராஜ் - கவுண்டமணியின் காமெடி ரவுசில் தங்கத்தின் மதிப்பு கூடியுள்ளது.
தங்கைக்கு ஜலதோஷம் என்றால் தனக்கு தும்மல் போடுமளவிற்கு தங்கை மீது பாசத்தின் இமயத்தை காட்டும் அன்பு அண்ணன் சத்யராஜ். இந்த பாசத்திற்கு ஊறுவிளைவிக்க வரும் வில்லன்தான் சண்முகராஜன்.
சத்யராஜ் மீதான பழைய பகையில் அவரது தங்கையின் கற்பை சூறையாடுகிறார் சண்முகராஜன். கொதித்துப்போகும் சத்ய
ராஜ் சண்முகராஜனை உதைத்து தங்கையின் கழுத்தில் தாலிகட்ட வைக்கிறார். திருமண நாளன்று சண்முகராஜன் செய்யும் ஒரு கொலைப் பழி சத்யராஜ்மீது விழுகிறது.
சிறைதண்டனை முடிந்து வீட்டுக்கு வந்தால் அன்பு தங்கையை சடலமாக பார்க்க நேரிடுகிறது. இதற்கு காரணம் சண்முகராஜனின் குடும்பம்தான் என்பதையறியும் சத்யராஜ் அவர்களை பழிவாங்க புறப்படுவதே கதை.
'பெரியார்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' என அழுத்தமான வேடமேற்ற சத்யராஜால் மறுபடியும் ஒரு மசாலா திரைக்கதையில் எப்படித்தான் பொருத்திக்கொள்ள முடிகிறதோ? தங்கைமேல் காட்டும் பாசம், எதிரியின் குடும்பத்தை கூண்டிலேற்ற போடும் திட்டம் என பழைய சத்யராஜை நினைவூட்டுகிறார்.
யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பது கவுண்டமணி விஷயத்தில் பார்க்க முடிகிறது. ஓய்வு பெற்ற நிலையில் இருந்தும்கூட காமெடிரசம் குறையாமல் பளபளக்கிறார். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த காந்தியே பஞ்ச் டயலாக் பேசாதபோது ஆளாளுக்கு ஏம்ப்பா பஞ்ச் டயலாக் பேசுறீங்க? என்பதாகட்டும் அரிவாளும் கையுமாக வருபவர்களிடம் நீங்களெல்லாம் 'வேலு' சினிமா படத்துல வந்தவங்களா என நக்கலடிப்பதாகட்டும் சீன் பை சீன் சிரிக்கவைக்கிறார் கவுண்டர்.
தனது கற்பனை திருமணத்தில் ஹைலைட் பாத்திரமே கவுண்டமணிதான் என்று அடிக்கும் லூட்டியில் தியேட்டரே அதிர்கிறது.
தன்னை சீண்டவரும் ரவுடியின் சட்டையைப்பிடித்து இழுத்து சிகரெட்டை பற்றவைத்து புகைவிடும் அறிமுக காட்சியில் அட போட வைக்கிறார் நாயகி மேகாநாயர். அதன்பிறகு அவரது கேரக்டர் அச்சச்சோ... ரகம். தங்கை பாத்திரத்தில் ஜெயஸ்ரீ நிறைவு மகாதேவன், சண்முகராஜனின் கேரக்டர்கள் வழக்கம்போலவே.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் இரண்டு பாடல்கள் தேறுகிறது. கதையில் ஒன்றும் புதிய விஷயம் இல்லையென்றாலும் கவுண்டரின் காமெடி உபயத்தில் படத்தை போரடிக்காமல் கொண்டுபோன இயக்குனர் கிச்சாவுக்கு பாராட்டுக்கள்.
'தங்கம் வாங்கலாம் டிக்கெட்'.