வல்லவனுக்கு வல்லவன் இருப்பதைபோல ஒரு வல்லவனுக்கு வில்லி தண்ணீகாட்டும் கதை.
ரியல்எஸ்டேட் தொழிலில் பலரிடமும் பணத்தை ஏப்பம்விடும் ஏமாற்று பேர்வளிதான் சஞ்சய். வீடு வாங்குவதற்காக இவரை அனுகும் நாயகி டிம்பிளை மனமுருக காதலிக்க ஆரம்பிக்கிறார். தொழிலில் ஏற்படும் வில்லங்கம் காரணமாக காதலியுடன் வெளிநாடு செல்ல திட்டம்போடும் சஞ்சய் தான் சேர்த்துவைத்த 50கோடிரூபாய் பணத்தை டிம்பிள் வீட்டில் வைக்கிறார்.
வெளிநாடு செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு டிம்பிள் வீட்டிக்கு திரும்புகிறார். காதலியும், பணமும் இல்லாமல் அதிர்ச்சியடைகிறார். இதெல்லாம் தனது எதிரியின் வேலை என்று நினைப்பவருக்கு காத்திருக்கிறது இன்னொரு ஷாக். பணத்துடன் ஓடிப்போனது காதலிதான் என்பது தெரியவர, நொந்துபோகிறார். சேர்த்துவைத்த பணத்தையும், ஆசைப்பட்ட காதலியையும் தேடியலையும் நாயகனின் நிலை என்ன என்பது மீதி கதை.
நேற்று முளைத்த காலான்தானே என சாதாரணமாக சொல்லிவிட முடியாத நடிப்பு சஞ்சய்யிடம். என்னதான் தன்னை ஏமாற்றினாலும் காதலி ஸ்தானத்திலிருந்து டிம்பிளை இறக்கிவைக்கமுடியாமல் தவிப்பது அருமை.
சினிமா சூச்சமங்களை விரல்நுனியில் வைத்திருப்பார் போல டிம்பிள். நடிப்பு, கிளாமர், அழகு என எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் இவரிடம் இருப்பது அம்சம்.
மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்பதற்கு வெண்ணிறஆடை மூர்த்தி ஒரு உதாரணம். வயசு பையனைப்போல அவர் அடிக்கும் காமெடிக்கு தியேட்டரே கதிகலங்குகிறது.
என்கவுண்டர் நாகேந்திரனாக ராஜன் பி.தேவ் சில காட்சிகளே வந்தாலும் தியேட்டரிலிருந்து திரும்பிய பிறகும் நினைவுக்கு வருகிறார்.அமைச்சராக வரும் வினுசக்கரவர்த்தி, வட்டச் செயலளாராக வரும் மகாநதி ஷங்கர் அடிக்கும் லூட்டிகளும் ரசிக்கவைக்கிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு பரணி இசையில் 'மனசும் மனசும் கலந்ததென்ன...' பாடலில் உருகலாம்.
லாஜிக்கையெல்லாம் மறந்துவிட்டு பார்த்தால் 'தரகு' சுவாரஸ்யம்.