நாளொரு பொழுதும் கட்டிய மனைவியை விட்டுவிட்டு கள்ள உறவில் இன்புறும் கணவன் திருந்திவிடுவார் என்று நினைக்கும் ப்ரியங்காவின் பொறுமையை சோதிக்க ஆரம்பிக்கிறது விக்ரமாதித்யாவின் லீலைகள். ஒருநாள் பொங்கியெழும் ப்ரியங்கா விக்ரமாதித்யாவுடன் இனி சேர்ந்து வாழ்வதில்லை என்ற முடிவுக்கு வருகிறார்.
கள்ள உறவு வைத்திருந்த பெண்ணும் வெளிநாடு சென்றுவிட தனது அலுவலகத்திற்கு புதிய அதிகாரியாக வரும் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் விக்ரமாதித்யா. நாயகன்- நாயகியின் இல்லறம் நல்லறமாகிறதா இல்லையா என்பதற்கு இறுதியில் கிடைக்கிறது விடை.
கட்டிய மனைவிமீது அக்கறை இல்லாமல் கண்ட பெண்ணுடன் சகவாசம் வைக்கும் ப்ளேபாய் கேரக்டரில் அழகாக பொருந்தியிருக்கிறார் விக்ரமாதித்யா. மனைவியிடம் ஒவ்வொரு முறையும் பொய் சொல்லிவிட்டு வேதாளம் முருங்கைமரம் ஏறுவதுபோல் தனது கெட்ட குணத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் பாராட்டலாம்.
சந்தோஷம், எதிர்பார்ப்பு, காத்திருப்பு, ஏமாற்றம் உட்பட அத்தனை உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ப்ரியங்காவுக்கு சபாஷ். புதுமுகங்கள் ஆர்த்தியும், திவ்யாவும் கவர்ச்சி இளமை, கண்ணுக்கு குளுமை.
விலைமாதுவிடம் செல்போனில் கடலை போடும் கருணாஸ் கலகலப்பு. பாசம் மிகுந்த தந்தையாக நெஞ்சம் நிறைகிறார் நிழல்கள்ரவி.
S. ஷாந்தகுமார் இசையில் 'உன் மனதை உன் மனதை...' பாடல் பரவசம்.
எல்லா கலவையும் கலந்து தொல்லைபேசியை ரசிக்கவைக்கும் இயக்குனர் K. பன்னீர்செல்வத்தை பாராட்டலாம்.
'தொ(ல்)லைபேசி' லைன் க்ளீயர்.