இடுப்பு வேட்டியை உருவி எதிராளியின் பெண்டை கழற்றுகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டரையே துரத்தி துரத்தி எலும்பை முறிக்கிறார். ரிலாக்ஸ் பண்ணும் மூடு வந்தால் விஸ்கி பாட்டிலுடன் வேசி வீட்டுக்கு போகிறார்.
இத்தனை அட்டகாசங்களையும் செய்யும் கேரக்டர் வில்லன் இல்லீங்க. கதாநாயகன் சுந்தர் சி தான். அட ங்கொப்புறானே அப்போ ஹீரோ நல்ல புள்ள இல்லையா என்று ஆதங்கப்படாதீர்கள். அவர் ஏன் அப்படி ஆனார் என்பதற்கு ப்ளாஷ்பேக் இருக்கு. கவனமா கேளுங்க!
கணக்கு வாத்தியாரின் மகனான சுந்தர் சி. பள்ளி பருவத்திலேயே சோப்பு டப்பாவில் ரேடியோ செய்வது, பள்ளிக்கூடத்தில் இயந்திர மணியை கண்டுபிடிப்பது, காந்தத்தின் தண்மைகளை செய்முறையில் உணர்த்துவது என குட்டி ஐன்ஸ்டீனாக இருக்கிறார். இது புரியாத அப்பா பிரகாஷ்ராஜ் 'கணக்கு போடுடான்னா கண்டதையெல்லாமா செய்யுற' என ஆர்வத்தின் துளிருக்கு கொள்ளி போடுகிறார்.
அப்பாவின் கட்டுக்கடங்காத கண்டிப்பும், தண்டிப்பும் சுந்தர் சியின் எதிர்காலத்தை திசைமாற்றுகிறது. அப்பா - மகன் உறவில் வளரும் விரிசலுக்கு விடிவுதான் என்ன? படத்தின் முடிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆக்ஷ்னில் டாப் கியர் போட ஆரம்பித்துள்ளார் சுந்தர் சி. புகையும் சிகரெட்டை நாக்கில் அணைத்து தெனாவட்டு செய்வது, சொய்ங் சொய்ங் என பாய்ந்து வரும் ஆயுதங்களை தடுத்து அடியாட்களை பொடிமாஸ் போடுவது என முரட்டுகாளையாக திமிரும் சுந்தர் சி., தோளுக்கு மேல் வளர்ந்த பிறகும் அப்பா கொடுக்கும் பிரம்படிக்கு முதுகுகாட்டி பணியும்போது உருகவைக்கிறார்.
படத்தில் பிரகாஷ்ராஜ் செய்யும் கொடுமைகளுக்கு அடப்பாவி... என தியேட்டரில் எதிர்ப்புக்குரல் எழும்புவது அவரது நடிப்புக்கு கிடைக்கும் விருது. இரண்டாம் மனைவிக்கு பிறந்த மகள் எதிரே வந்து நிற்கும்போது தொண்டைக்குள் எச்சில் விழுங்கி பயத்தை பிரதிபலிக்கும் இடத்தில் பிரகாச ராஜ்.
பள்ளிக்கூடத்துக்கு டீச்சராக வரும் கோபிகா, திடுதிப்பென்று சுந்தர் சியை காதலிக்கிறார். காரணமே இல்லாமல் இயக்குனர் லாஜிக்கை புதைக்கிறாரே என்று யோசிக்கும்போதே... சின்ன வயசு ப்ளாஷ்பேக்கை காட்டி நல்ல பெயர் வாங்கிக்கொள்கிறார். துணியைபோலவே தேஜாஸ்ரீக்கும் துக்கடா கேரக்டர்தான். அறிமுகவில்லன், அழுமூஞ்சி தங்கைகள் என மற்ற கதாபாத்திரங்களும் நினைவில் நிற்கிறார்கள்.
சின்னக்கலைவாணரின் காமெடியில் பழைய வாடை இருந்தாலும் நல்ல விஷயம் மறைந்திருப்பதால் பாராட்ட தோன்றுகிறது.
"வந்தா வருவீரோ..." பாடலை மட்டும் ரசிக்கலாம். பின்னணியில் டி. இமானுக்கு நிறைய சி.டிக்கள் உதவியிருப்பது புரிகிறது.
எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாய் கலந்து திருவிழா இனிப்பு கடைபோல வீராப்பை சுவைக்க வைத்திருக்கும் இயக்குனர் பத்ரி பாராட்டுக்குரியவர்.
'வீராப்பு' டாப்பு.