அப்பாவை கொன்றவனை மகன் பழிவாங்கும் கதை. மகன் சொந்த மகனல்ல. எதிர்பாராத விதமாக கிடைத்த மகன். இந்த சின்ன சுவாரஸியத்தை வைத்து, தனது கமர்ஷியல் பட்டறையில் ஹரி தயாரித்த ஆயுதம் 'வேல்!'
அண்ணன், தம்பி என இரண்டு வேடத்தில் சூர்யா. இருவரும் ரயிலில் வைத்து பிரிந்து விடுகிறார்கள். (அண்ணன் தண்ணீர் பிடிக்க இறங்கும் போது ரயில் கிளம்ப, தம்பியும் அண்ணனும் பிரிந்து விடுவதே தமிழ் சினிமாவின் வழமை. நல்லவேளையாக, இதில் அண்ணனும் தம்பியும் கைக்குழந்தையாக இருப்பதால் பிரிவு வேறுமாதிரி நிகழ்கிறது) தம்பி சூர்யா அப்பா அம்மாவுடன் வளர, அண்ணன் சூர்யா, குழந்தைகள் இல்லாத நாசர், அம்பிகா தம்பதியின் தத்துப் பிள்ளையாகிறார்.
நகரத்தில் வளரும் தம்பியைவிட கிராமத்து அண்ணன் பிரமாதப்படுத்துகிறார். முறுக்கிய மீசை, இறுக்கிய தசையென அவர் அடிக்குரலில் கர்ஜிக்கும் போது, திரையரங்கு திமிறுகிறது. அம்மா பாசம் ஒரு பக்கம், எடுத்து வளர்த்த அப்பத்தா பாசம் மறுபக்கம் என உணர்ச்சியில் கண்ணில் தண்ணீர் காட்டும் போது சபாஷ் சூர்யா!
பிபிசி யில் நிருபராவதை லட்சியமாகக் கொண்ட கதாபாத்திரத்தில் அசின். இவ்வளவு பெரிய லட்சியம் வைத்திருப்பவர், கல்யாணமானால் கணவனை பார்த்துக்கணும், குழந்தையை கவனிக்கணும், முழுநேர குடும்பத்தலைவியாக இருக்கணும் என கொள்கை பேசுவது நெருடல். முழுமை பெறாத கதாபாத்திரம்.
குழந்தைசாமியாக வரும் வடிவேலு, வருகிற காட்சிகளிலெல்லாம் யாரிடமாவது அடிவாங்குகிறார். தமிழ் மக்களுக்கு முந்தைய படஙகள் உடனே மறந்து விடுவதாலும், காட்சியிலுள்ள அபத்தங்களை கண்டு கொள்ளாமலிருப்பதாலும் அவ்வப்போது திரையரங்கில் சிரிப்பொலி கேட்கிறது. மனதில் நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் இரு பெண்கள். ஒருவர் சூர்யாவின் அம்மாவாக வரும் சரண்யா. இன்னொருவர் அப்பத்தாவாக வரும் லட்சுமி.தளர்ந்த உடலும், தேய்ந்த குரலுமாக அப்பத்தா கேரக்டரில் அப்ளாஸ் பெறுகிறார் லட்சுமி. சரண்ராஜூக்கு தொப்பை என்ற பெயரில் தலையணையை வயிற்றில் கட்டி அவருடன் நம்மையும் இம்சிக்கிறார்கள்.
இசை, யுவன் ஷஙகர் ராஜா. அறிமுகக் காட்சியில் அடியாட்களை அடித்ததும் ஒரு பாடல். அசினைப் பார்த்து நாலு வார்த்தை பேசியதும் வெளிநாட்டில் ஒரு டூயட். காதல் என தெரிந்ததும் மேலுமொரு டூயட். குடும்பப் பாசத்துக்கு ஒரு பாடல் என வகைக்கு ஒரு பாடல். பாடலுக்கு ஒன்று என படத்தில் ஆறு இடைவேளைகள்.
கிராபிக்ஸ் குறித்து சொல்லியே ஆக வேண்டும். கடவுளுக்கு தலையைச் சுற்றி ஒளி வட்டம் இருப்பதுபோல், சூர்யா சண்டையிடும் போது திடீர் திடீரென்று அவரது முழு உடம்பைச் சுற்றியும் ஒளி கிளம்புகிறது. பாடல் காட்சியில் ஒரு சூர்யா, பத்து சூர்யாவாக மாறி (இராவணன்?) அடுத்த வினாடியே மீண்டும் ஒற்றை சூர்யாவாகிறார். பார்வை குறைபாடு உடையவர்கள் ஜாக்கிரதை.
ப்ரியனின் ஒளிப்பதிவில் ஹரியின் முந்தையப் படங்களைப் பார்த்தவர்கள், ஒவ்வொரு காட்சியிலும் கேமரா எப்படி பாயும், எப்படி அதிரும் என்பதை முன்கூட்டியே கூறிவிட முடியும்.
வில்லனாக வரும் கலாபவன் மணி, சிரிக்க வைப்பதில் வடிவேலை மிஞ்சுகிறார். அந்த 'சந்திரமுகி' ரா...ரா... ஜாலியோ ஜிம்கானா!
கல்லூரியில் கஞ்சா வைப்பது, கொலையும், தீ வைப்புமாக இருக்கும் பகுதியில் போலீஸ் தலைகளே தென்படாதது என காதுல பூ படம் நிறைய. மணியின் ரைஸ் மில்லை எரித்துவிட்டு, போலீஸ் ஸ்டேசனில் வந்து, காக்கா ஒக்காந்து கரண்ட் கம்பி ஷாட் ஆகி தீ பிடித்தது என சூர்யா பேசும் அந்த காக்கா டயலாக் செம தெனாவெட்டு. அதே சூர்யா, விளக்கெண்ணெய் எப்படி எரியும், பெட்ரோல் எப்பிடி புகையும் என்று கிளாஸ் எடுக்கும் போது, வசனமே மைனஸாகிறது.
இரண்டு தனித்தனி புகைப்படங்களின் வழியாக கதாநாயகன் குடும்பத்துக்கும், அவர்கள் எதிரி குடும்பத்திற்கும் சாதி அழுத்தம் தருகிறார் இயக்குனர் ஹரி. இந்த, சகல அதிகாரமும் பொருந்திய குடும்பங்களுக்கு இடையில் அப்பாவி ஜனங்கள் சிக்கி சின்னா பின்னமாகிறார்கள். ஹரியின் படங்களில் தொடர்ந்து இடம்பெறும் இந்த ஃபவர்புல் குடும்ப ஆலாபனை ஆபத்தானது.
பெண் என்பவள் பிபிசி நிருபராகும் கனவுடன் இருந்தாலும், கல்யாணமானால் அவளது உலகம் குடும்பம் மட்டுமே என்பதிலும், அரைடவுசர் போட்ட பெண்களை சாடுவதிலும், பெண்கள் என்றால் குடும்பத்துக்காக தியாகம் செய்பவர்கள் என கட்டமைப்பதிலும் ஹரியின் பழம் பஞ்சாங்கம் பளீரிடுகிறது.
ஆயிரம் அரிவாளால் சாதிக்க முடியாததை ஆறறிவால் சாதிக்கலாம் என்று படத்தில் ஒரு வசனம் வருகிறது. ஹரியும் திரைக்கதையில் அரிவாளின் ஆதிக்கத்தை குறைத்து அறிவை இன்னும் சற்று பயன்படுத்தியிருக்கலாம்.
ஆக்ஷன், காமெடியுடன் குடும்ப சென்டிமெண்டை குழைத்து பி,சி சென்டர்களை கவரும் வித்தை ஹரிக்கு தெரிந்திருப்பதால், வேல் - வெற்றி வேல்தான்!