கொஞ்சம் கதை, கொஞ்சம் கலகலப்பு, நிறைய சப்தங்களுடன் சந்தைக்கு வந்திருக்கிறார் இந்த 'வியாபாரி.'
பில்கேட்ஸைவிட ஒரு ரூபாயாவது அதிகமாக சம்பாதித்து உலக கோடிஸ்வரராக வேண்டும் என்ற வேட்கையில் பரபரப்பாக இருப்பவர் S.J. சூர்யா. ஒரு நாளைக்கு இருபத்தி நான்கு மணிநேரம் கூட போதாமல் இருப்பவருக்கு குடும்பத்துடன்ஒட்டுவதற்கெல்லாம் நேரமேது?!
இந்த லட்சணத்தில் S.J. சூர்யாக்கு தமன்னாவுடன் கல்யாணம் வேறு. கனவுகள் பொங்க, கற்பனை சிறகடிக்க, பால் பழங்களுடன் தமன்னா முதலிரவு அறைக்குள் நுழைந்தால்... அதிர்ச்சி! படுக்கையறை முழுவதும் பைல்களை பரப்பி அப்போதும் ஆபீஸ் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார் சூர்யா.
கணவனை ஆசை ஆசையாக நெருங்கும் போதெல்லாம், பிஸினஸ் சிந்தனையில் மனைவியிடம் நெருப்பாக வெடிக்கிறார் நாயகன். வியாபாரத்தையும் பார்க்கவேண்டும். வீட்டில் உள்ளவர்களையும் திருப்திபடுத்தவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் S.J. சூர்யா, குளோனிங் முறையில் மனிதனை உருவாக்கும் டாக்டர் நாசரை பற்றி தெரிந்துகொள்கிறார்.
S.J. சூர்யாவின் வேண்டுகோளை ஏற்று குளோனிங்கில் இன்னொரு சூர்யாவை உருவாக்குகிறார் நாசர். இப்போது டூப்ளிகேட் சூர்யா வீட்டிலும், ஒரிஜினல் சூர்யா பிஸினஸ் வேலைகளையும் பார்க்க, வில்லங்கம் ஆரம்பிக்கிறது கதையில். சுவாரஸ்யமான முடிச்சுகளுடன் சுபம் போடபடுகிறது க்ளைமாக்ஸில்.
வழக்கமான காட்டுக்கத்தல்களுடன் முக்கலும் முனகலுமாக பேசும் பிஸினஸ்மேன் S.J. சூர்யாவின் கதாபாத்திரத்தில் எரிச்சல் எல்லை தாண்டுவதை தவிர்க்க முடியாமல் தவிக்கும்போது குளோனிங் கேரக்டரில் மனசை குளிரூட்டி விமோசனம் தேடிக்கொள்கிறார்.
அம்மா சீதாவிடமும் மற்ற உறவுகளிடமும் பாசத்தை பொழிந்து மழலையின் ரியாக்ஷனை முகத்தில் கொண்டுவரும் குளோனிங் சூர்யா பாராட்டுகளை அள்ளிக்கொள்கிறார்.
கணவனின் அன்பு கிடைக்காமல் தனியே அழும்போது போனில் பேசும் தோழியிடம் "வீட்டுகாரருடன் ஜாலியா சினிமா பார்த்துக்கிட்டு இருக்கேன்" என்று பொய்யாக பெருமையடித்துக்கொள்ளும் காட்சியில் தமன்னா பிரமாதம்.
விளம்பர நடிகையாக மாளவிகா, மாடலிங்காக வரும் நமிதா இருவரிடமும் கிளாமர் உபயம் செய்திருப்பதை தவிர வேறெதுவும் அறியோம். சூர்யாவின் பிஸினஸ் ரோல் மாடலாக பிரகாஷ்ராஜ் இரண்டொரு காட்சிகளில் கெளரவத்தோற்றம் காட்டி காணாமல் போகிறார்.
பெத்த மகனின் பாசம் கிடைக்காத ஏக்கத்தில் தூக்க மாத்திரை மூலம் எமனுக்கு தூதுவிடும் சீதா, சென்டிமெண்டில் மனசை கனக்க செய்கிறார். திகில் பாண்டியாக வடிவேலு வரும் டிராக்குகள் சிறுவர் பூங்கா ரயில்போல இன்ட்ரஸ்டிங்.
'ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா.....' பாடலில் தேவாவின் இசையும் பரிணாமனின் வரிகளும் உருகவைக்கிறது.
நாயகனின் சப்த வசனங்களை குறைத்து பிஸினஸ்மேனுக்கே உரித்தான பாடி லாங்வேஜை கையாண்டிருந்தால் முதல்பாதியின் உறுத்தலை குறைத்திருக்கலாம். நல்லவேளையாக இடைவேளைக்கு பிறகாவது அந்த குறையை சரி செய்து சபாஷ் போடவைத்துள்ளார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.
வியாபாரி லாபம் ஈட்டுவார்.