- ஜான்
"நான் எதிர்மறையானவற்றை விரும்புகிறேன். அவற்றில் மிகுந்த உயிர்த்துடிப்பு உள்ளதை நான் உணர்வதால். ஒரு தயாரிப்பாளரோ அல்லது ஒரு தயாரிப்பு நிறுவனமோ என் திரைப்படத்தைத் தீர்மானித்துவிடமுடியாது. ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் கூற வேண்டும் என்ற என்னுள் எழும் வேட்கையின் வெளிப்பாடுதான் என் திரைப்படங்கள்" - அகிரா குரோசாவா.

'இகுரு' (Ikiru) என்றால் வாழ்தல் என்று பொருள். 1952-ம் ஆண்டு வெளியான இந்த ஜப்பானிய திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் உருவாக்கிய
அதிர்வலைகள் இன்றும் வலிமை குன்றாமல் இருப்பதற்கு அகிரா குரோசாவாவின் திரைக்கதை முக்கிய காரணம். நிதானமும், ஆழமும், புதிரும் நிறைந்த அகிராவின் திரைக்கதை ஒவ்வொரு காட்சிகளாக மடல் அவிழும் விதம் எப்பொழுதும் பார்வையாளர்களை பரவசப்படுத்தும். "என் சினிமாவின் வேர் எனது உள்மன உந்துதல்" என்று கூறும் அகிரா, "அந்த வேர் விருட்சமாவது திரைக்கதையால்" என திரைக்கதையின் பங்கை கோடிட்டு காட்டுகிறார்.
143 நிமிடங்கள் ஓடக்கூடிய கறுப்பு வெள்ளை படமான 'இகுரு' அகிராவின் புகழ்பெற்ற 'ரெட் பியர்டு', 'செவன் சாமுராய்', 'டெர்சு உசாலா' வரிசையில் இடம்பிடிக்கக்கூடிய திரைப்படம்.
இதன் நாயகன் கன்ஜி வதனபே குடிமக்கள் பிரிவு அலுவலகத்தின் தலைவர். முப்பது வருடங்களாக தொடர்ந்து விடுமுறை எடுத்துக்கொள்ளாமல் அலுவலகம் வரும் அரசு ஊழியர். உல்லாசம் என்பதை அறியாதவர். கையில் சிறிய சேமிப்பும் உண்டு. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்ட அல்லது இறந்து விட்டதற்கு சமமான வாழ்வு இவருடையது.
இந்நிலையில் தனக்கு புற்றுநோய் இருக்கும் விவரம் வதனபேக்கு தெரியவருகிறது. இனி அதிகபட்ச வாழ்நாள் ஆறுமாதங்கள் மட்டுமே! மரணம் உறுதிபட்ட மனிதர்களுக்கு தோன்றும் அத்தனை எண்ணங்களும் இந்த அரசு ஊழியரை வந்தடைகின்றன. தனது நெடுநாளைய கையிருப்பை செலவிட துணிகிறார் வதனபே. கூடவே, வாழ்தல் குறித்த கேள்வியும் எழுகிறது அவர் மனதில். இந்த மண்ணில் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்ததற்கு அடையாளமாக ஏதேனும் செய்ய விரும்புகிறது அவர் மனம். பொதுமக்களுக்கு இடைஞ்சலாக, சுகாதாரகேட்டுடன் இருக்கும் இடத்தில் பூங்கா ஒன்றை நிர்மாணிக்க தீர்மானிக்கிறார். ஆனால், குடிமக்கள் பிரிவு தலைவரின் எல்லைக்குட்பட்டதல்ல இந்த வேலை. பலபேரை இதற்காக சந்திக்க வேண்டியிருக்கிறது. பலருடன் வாதாட வேண்டியிருக்கிறது. இறுதியில், மரணம் நிச்சயிக்கப்பட்ட அந்த மனிதன் தான் எடுத்துக்கொண்ட வேலையில் வெற்றி பெறுகிறான்; அவனுடன் மரணமும்!
தன் ஆயுளின் விளிம்பில் மரணத்தின் நிழலில், வாழ்வின் அர்த்தங்களை தேடும் இந்த திரைப்படத்தை இருத்தலியல் குறித்த 'நவீன எக்சிஸ்டென்ஷியல் சித்தாந்தம் சார்ந்த திரைக்கலை' என்கிறார்கள் விமர்சகர்கள்.
அகிரா குரோசாவாவின் திரைக்கதை, மொண்ணையான ஒரு பொருளை சுட்டும் யதார்த்த வகை கதையாடலுக்கு எதிரானது. காட்சிகளும், வசனங்களும், நடிகர்களின் உடல் மொழியும் காட்சியை தாண்டி பல்வேறு தத்துவ மற்றும் கவித்துவ விசாரங்களை பார்வையாளனின் மனதில் எழுப்பவல்லவை. அந்த வகையில் அகிராவின் திரைக்கதை சினிமா துறையினருக்கு தவிர்க்கவியலாத அகராதி!
'இகுரு' திரைக்கதையை ரவி இளங்கோவனின் மொழிப்பெயர்ப்பில் சிறப்பாக வெளியிட்டிருக்கிறது சந்தியா பதிப்பகம். திரைக்கதை எழுதுகிறவர்களுக்கு சிறந்த கையேடு இந்த புத்தகம்!
|