- ஜான்
சினிமா நடிகைகளின் அந்தரங்கம், கிசுகிசுக்கள் ஆகியவையே சினிமா செய்திகளாக பெரும் பத்திரிகைகளில் பதிவு செய்யப்படுகின்றன. சினிமா ரசனையை மேம்படுத்தும் விமர்சனங்கள் இப்பத்திரிகைகளில் மேம்போக்காகவே எழுதப்படுகின்றன. அற்புதமான எடிட்டிங், காதை நிறைக்கும் பின்னணி இசை, கவிதை பேசும் காமிரா என்று ஒருவரியில் சினிமாவின் பிரதான பகுதிளை கடந்து போகின்றவையாகவே இவ்விமர்சனங்கள் உள்ளன.
இதற்கு நேர்மாறான இதழ் ப. திருநாவுக்கரசின் 'நிழல்'. முப்பது ரூபாய் விலையில் இவர் அளிக்கும் விஷயங்கள் அளப்பரியது. சர்வதேச மற்றும் உள்ளூர் திரைப்பட விழாக்கள், அதில் இடம்பெறும் சிறந்த திரைப்படங்களின் விமர்சனங்கள் நிழலில் பதிவு செய்யப்படுகின்றன. அரசும், சினிமாத்துறையும் கைவிட்ட குறும்பட மற்றும் ஆவணப்படங்கள் குறித்த சிறப்பான பதிவுகள் நிழலின் முக்கியமான பகுதி. இவை தவிர எடிட்டிங், கேமரா, திரைக்கதை போன்ற சினிமாவின் ஆதார விஷயங்கள் குறித்த தீவிர தேடலுடனான கட்டுரைகள் நிழலில் மட்டுமே இடம்பெறுகின்றன.
உலக சினிமா குறித்த ரசனைக்கு நிழல் சாளரம் அமைத்துக்கொடுக்கிறது. ஹிட்சாக்கின் நேர்காணல், பால்கன் சினிமா குறித்த கட்டுரை மற்றும் ஈரான், லத்தீன் அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளின் திரைப்படங்கள் குறித்த குறுக்கு வெட்டு பார்வையைஅறிய வகை செய்கிறது, 'நிழல்'. தமிழ் திரைப்படத் துறையின் ஜாம்பவான்கள், திரைப்பட துறைசார் மொழிபெயர்ப்புகள் என தமிழ்சினிமாவின் ஆவணமாகவும் விளங்குகிறது இப்புத்தகம்.
ஈரானின் 'தி ஆப்பிள்' போன்ற உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களின் திரைக்கதைகளும் 'நிழல்' இதழ்களில் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.
சினிமா அறிவை, ரசனையை விருத்தி செய்ய விரும்புகிறவர்களுக்கு 'நிழல்' ஒரு வரப்பிரசாதம்!
|