- ஜான்
ஒரு பஸ் கண்டக்டராக தம் வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த், நடிகரானதோ, சூப்பஸ் ஸ்டார் என்கிற அந்தஸ்தைப் பெற்றதோகூட வியப்பல்ல. தமிழகத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளுள் ஒருவராக அவரை லட்சக்கணக்கானோர் கருதத்தொடங்கியது மிக முக்கியமான திருப்பம். இத்தனைக்கும் ஒருமுறைகூட வெளிப்படையாகத் தமக்கு அரசியலில் ஆர்வம் இருப்பதாக அவர் காட்டிக்கொண்டதில்லை! சில சந்தர்ப்பங்களில் அரசியல் ரீதியாக ரஜினி வெளியிட்ட சில கருத்துக்கள் மட்டுமே அவர்மீது இப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கின்றன என்பது வேறெந்த நடிகர் விஷயத்திலும் இதற்குமுன் நடவாதது.
ரஜினி சப்தமா? சகாப்தமா? என்ற கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல், ரஜினி என்கிற நடிகரின் இமாலய வளர்ச்சியை அதன் ஒவ்வொரு காலகட்டத்தையும் முன் வைத்து விளக்குகிறது. ரஜினியின் பாதையை வெற்றியின் திசைக்கு இட்டுச்சென்ற முக்கிய திரைப்படங்கள், ரஜினி என்ற எளிய மனிதனின் இடைவிடாத போராட்டங்கள், அவரது ஆரம்பக்கால வாழ்க்கை ஆகியன இந்நூலில் சிறப்புற சொல்லப்பட்டுள்ளது.
ரஜினியை குறித்து நடிகர்கள், இயக்குனர்கள், விமர்சகர்கள், அரசியல்வாதிகள் கூறிய கருத்துக்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ரஜினியின் படங்களின் பட்டியல் அவர் ரசிகர்களுக்கு இலவச இணைப்பு.
தன் ஆயுளின் விளிம்பில் மரணத்தின் நிழலில், ரஜினியின் வாழ்க்கையை, அவரது அரசியல் - ஆன்மிக ஈடுபாடுகளை, அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை, தமிழக அரசியல் சூழலை முன்வைத்து அலசிப்பார்க்கும் இந்நூல், ரஜினி என்கிற மிகப்பெரிய ஆளுமையின் முழுப்பரிமாணத்தைத் துல்லியமாக வெளிக்கொண்டு வருகிறது.
நூலாசிரியர் ஜெ. ராம்கி, மயிலாடுதுறையை சேர்ந்தவர். தமிழ் பத்திரிகை வாசகர்களுக்கும், தமிழ் இணைய வாசகர்களுக்கும் நன்கு அறிமுகமான கட்டுரையாளர். எம்.சி.ஏ. பட்டதாரியான இவர், மத்திய கலால்துறை அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றுகிறார்.
ரஜினியை குறித்து அறிந்துக்கொள்ள விரும்புகிறவர்களை எல்லா வகையிலும் திருப்திப்படுத்தும் நூல் இது.
|