- ஜான்
"தமிழின் சிறந்த பத்துப்படங்களை பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் 'உதிரிப்பூக்கள்' இடம் பெறும். ஐந்து சிறந்தப் படங்களை பட்டியலிட்டால் அப்போதும் 'உதிரிப்பூக்கள்' இடம் பெறும். என்னிடம் தமிழின் ஒரே சிறந்தப் படத்தைக் கேட்டால் அப்போதும் தயங்காமல் 'உதிரிப்பூக்களை' சொல்வேன்" - இயக்குனர் வஸந்த்.
"எனக்கு ஆங்கிலம் தெரியாது. 'டைட்டானிக்' என்ற பெயரையே மனசுக்குள் பலமுறை சொல்லிப்பார்த்தப் பிறகே வெளியே என்னால் பேசமுடியும். நான் பார்த்து வளர்ந்தது எல்லாம் டெண்ட் கொட்டாயில் போட்ட பழைய தமிழ்படங்கள்தான். என்னுடைய குலதெய்வம் 'உதிரிப்பூக்கள்' தான்" - இயக்குனர் சேரன்.
ஒரு படம் ரசிகர்களை கவர்வதே அபூர்வம். அதே படம் பல கலைஞர்களை கவர்வது இன்னும் ஆச்சரியம். 25 ஆண்டுகளாக தமிழ்திரையில் அப்படியொரு அபூர்வ ஆச்சரியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் படம் இயக்குனர் மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்'.
பலரை பலவிதங்களில் பாதித்த படம் இது. இன்றைய 'ஆட்டோகிராஃப்', 'காதல்' படங்களின் பிதாமகன் 'உதிரிப்பூக்கள்'. இது சிறு வயதில் எழுத்தாளர் புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' குறுநாவல் ஏற்படுத்திய பாதிப்பால் உருவானது என்கிறார் இயக்குனர் மகேந்திரன்.
இவரது முதல் படம் 'முள்ளும் மலரும்'. சினிமா என்பது விஷூவல் மீடியா என்பதை தமிழ்சினிமாவுக்கு எடுத்துச் சொன்ன படம். இதன் வெற்றியால் ஏற்பட்ட தன்னம்பிக்கையே 'உதிரிப்பூக்களை' எடுக்க உதவியது என்று சொல்லும் மகேந்திரன் 25 வருடங்களுக்குப் பிறகு இப்போது 'உதிரிப்பூக்களின்' திரைக்கதைக்கு நூல்வடிவம் கொடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு காட்சிகளுக்கும் அதற்குரிய நிழற்படங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெறும் வசனங்களை மட்டும் பதிவு செய்யாமல், கதாபாத்திரங்களின் மனநிலையையும், பின்னணி காட்சிகளையும், ஒலிகளையும் குறிப்பிட்டிருப்பது நூலின் சிறப்பு.
திரைக்கதையை பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கும், இயக்குனரின் கதை மீதான பார்வை எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்நூல் அரிய பொக்கிஷம். நூலிற்கு மகேந்திரனின் முன்னுரை தவிர்க்கமுடியாத சிறப்பு. நூலின் மதிப்பை உணர்ந்து சிறப்பாக வெளியிட்டிருக்கிறது கற்பகம் புத்தகாலயம்.
|