பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
- 01.07.2009
By Amalan
பாடல் எழுதி முடித்த கையோடு அரிதாரம் பூசுகிறார்; அரிதாரம் கலைத்த கையோடு பாடல் எழுதுகிறார் பா.விஜய். “சார் கவிதை ரெடியா?” என்கிற தொலைபேசி அழைப்புகளுக்கிடையே ‘சார் கால்ஷீட் ரெடியா?’ என்கிற கேள்விகளும் இனி சேர்ந்து கொள்ளும்.
‘ஞாபகங்கள்’ மூலம் கதாசிரியராக, நடிகராக, தயாரிப்பாளராக மாறியிருக்கும் பா.விஜய்யை சந்தித்தபோது...........
என்ன திடீர்னு நடிகர் அவதாரம்?
அய்யோ அவதாரம்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதிங்க! இது நடுவிலே பிறந்த ஒரு தாகம்தான்! எனக்குத் தெரியும் தமிழர்கள் அனைவருக்குள்ளேயும் அதீதமான கலையுணர்வு மரபு ரீதியாகவே உதிரத்தில் கலந்திருக்கிறது. ஆகவே அவர்களால் எந்த கலைத்துறையில் வேண்டுமானாலும் பயணிக்க முடியும். கலைத்துறையையே சுவாசித்துக்கொண்டிருக்கிற எனக்கு நடிப்பு என்பது மிகப்பெரிய சவாலாக இல்லை. ஆதலால் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் என்னுடைய திரையுலக பயணத்தின் நடுவே ஏற்பட்டது. நியாயமானதாகவே கருதுகிறேன்.
கவிஞனுக்கு நடிப்பு தேவைதானா என்று விமர்சிப்பவர்களுக்கு உங்கள் பதில்?
என்னுடைய ஞாபகங்கள் திரைப்படத்திலே ஒரு வசனம் எழுதியிருக்கிறேன். “எல்லாத்துக்கும் எதுக்கும் இவங்க ஒரு விமர்சனத்தை வச்சிக்கிட்டேதான் இருப்பாங்க. ஜெயிக்கனும்னு போராட வந்தவனை பார்த்து “தம்பி! இதெல்லாம் பத்தாது புதுசா ஒரு பயர் வேணும்பாங்க...” புதுசா ஒரு நெருப்போடு போராடுனா, “போராடுன எல்லாரும் ஜெயிசிடுவாங்களா” என்று அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவாங்க. அதுமாதிரி நான் நடிப்பதெல்லாம் தேவைதானா என்று மனசுக்குள் சொல்லிக் கொள்பவர்களுக்கு பதிலை ‘ஞாபகங்கள்’ படம் சொல்லும்.
தாய்காவியம் என்னாச்சு?
தாய்காவியம் என்பது ஒரு மிகப்பெரிய வலிமையான பட்டத்து யானை! அந்த பட்டத்து யானையை இழுத்து வருகின்ற சக்தி பா.விஜய்க்கு இல்லை! ஆனால் கலைஞர் அரைநூற்றாண்டுகால திரையுலக வரலாற்றையே அசைத்து பார்த்த மகாசக்தி! நிச்சயம் விரைவில் கலைஞர் அவர்களின் கைவண்ணத்தில் தாய்காவியம் திரைப்படமாக திரைக்கு வரும்! அதில் பா.விஜய்க்கும் முக்கியப்பங்கு இருக்கும்!
சினிமா நட்சத்திரங்களுக்கு அரசியல் சாயம் தேவைதானா?
கலைத்துறை என்பதும் அரசியல் துறை என்பதும் தணடவாளம் மாதிரிதான். இரண்டும் ஒன்றையொன்று பின்னிக்கொள்ள முடியாவிட்டாலும் சரிசமமான பயணம் தமிழக வரலாற்றில் இருந்திருக்கிறது. அந்த வகையில் ஏதோவொரு நிர்பந்தத்தின் காரணமாகவோ.. ஒரு நிழல் தேவைப்படுவதன் காரணமாகவோ சில கலைஞர்கள் அரசியல் சாயத்தைப் பூசிக்கொள்கிறார்கள். அரசியல்சாயம் இல்லாமலும் மிகப்பெரிய திரையுலக சாதனைகள் செய்யலாம் என்பதற்கு கமலஹாசன் போன்றோர் பெரிய உதாரணம்! நான் அரசியல் சாயத்தால் முக்கிய இடம் பிடித்ததாக பேசுபவர்களைப் பார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது. அரசியல் சாயமென்பது எனக்குக் கிடையாது. கலைஞருடைய தீவிரமான அபிமானி! கலைஞரின் தமிழுக்கு ரசிகன்! கவிதைக்கு அடிமை! இதைத்தவிர தி.மு.க.விற்கும் எனக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.
உங்களுடைய எல்லா விழாக்களிலும் கலந்துகொள்ளும் முதவர் ‘ஞாபகங்கள்’ விழாவில் கலந்துகொள்ளாதது ஏன்?
ஞாபகங்கள் திரைப்படத்தைத் பொறுத்தமட்டில் அதன் துவக்கவிழா பாடல் வெளியீட்டு விழா அனைத்து தகவல்களையும் அழைப்பிதழ்களையுமே முதலாவதாக கலைஞருக்குத்தான் தந்திருக்கிறேன். அவர் இல்லாமல் இந்த விழாக்களை நடத்தியது எனக்கு மிகப்பெரிய வேதனைதான்! இருந்தாலும் தூரத்தில் தெரியும் சூரியனைப் பார்த்து கடல் அலைகள்சதாசர்வகாலமும் கைதட்டிக் கொண்டே இருப்பது மாதிரி இந்த விழாக்களுக்கு வர இயலாமல் அரசியல் பணிகளுக்கிடையே மூழ்கி இருந்த கலைஞரின் ஞாபகங்களோடுதான் என் ஞாபகங்கள் திரைப்படத்தின் அத்தனை வேலைகளையும் செய்து முடித்தேன்!
நடிகராக, தயாரிப்பாளராக உங்கள் அனுபவம்?
சினிமாவிற்கு வெளியே நின்று பார்க்கும்பொழுது நடிப்பு , தயாரிப்பு இரண்டிலுமே பெரியவலி இருப்பதாக நான் உணரவில்லை. நடிப்பைப் பொறுத்தவரைக்கும் அதுவொரு பாதுகாப்பான வளையம்! அதற்குள் ஒருவனது திறமை, புகழ் அளவுக்கதிகமாகவே வெளிப்படுகிறது. ஆனால் தயாரிப்பு என்பது ஒரு பாதுகாப்பற்ற அந்தரத்தில் சவாரி செய்கின்ற அதிசயம். இந்த இரண்டையும் ஒருசேர சுமந்து செல்லும்போது மிகப்பெரிய சோதனைகளும் சோகங்களும் என்னை சூழ்ந்தன. அத்தருணங்களில் எல்லாம் என்னுடைய தூய்மையான கடவுள் நம்பிக்கை எனக்குக் கைகொடுத்து ஒவ்வொரு கட்டத்திலும் என்னை வழிநடத்தியது. இன்று ஞாபகங்கள் திரைப்படம் திரைக்கு வருமளவிற்கு தயார்படுத்தியும் உள்ளது.
நடிகனான பிறகு பாடல் எழுதுவதில் பாதிப்பு இருக்குமா?
பா.விஜய் என்ற பாடலாசிரியனுக்குள்தான் பா.விஜய் என்ற நடிகன் ஒரு ஓரத்தில் ஒளிந்துகிடக்கிறான். அதனால் பா.விஜய் என்ற கவிஞனை ஒருகாலும் பா.விஜய் என்ற நடிகனால் விழுங்க முடியாது. ஆகவே கவிஞனே என்றும் இந்த நடிகனை வழிநடத்திச் செல்வான். வார்த்தைகளைத் தேடித்தேடி ஒரு யாகம் நடத்தி, சந்தங்களுக்குள் சொற்களை நிரப்பி இசையால் தமிழக காற்றுக்குள் நடமாடிய என் பேனா இன்னொரு அவதாரம் எடுத்து அதன் எழுத்துப் பிரசவத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனத்தையும் எழுதியிருக்கிறது. அந்த கதை-திரைக்கதை-வசனத்திற்குள் என் முகம் பொருந்திப் போகின்ற காரணத்தால் கேமராவின் முன்பு அரிதாரம் பூசிக்கொண்டு நடிப்பது மிகப்பெரிய சுமையாக இல்லை. ஆதலால் எழுதியதை நானே நடிக்கின்ற போது கூடுதல் திருப்தி ஏற்படுகிறது என்பது உண்மைதான்!
பாடலாசிரியனாக, கவிஞனாக திருப்தி அடைந்துவிட்டீர்களா?
ஒரு பாடலாசிரியனாக என்னுடைய அதிகபட்ச இலக்கு தேசியவிருது! அதை நான்காண்டுகளுக்கு முன்னால் தொட்டாயிற்று மேலும் ஒரு பாடலாசிரியனது இலக்கு திரும்பத் திரும்ப தேசிய விருதாகவே இருக்கும். அல்லது டாப்டென் பாடல்களில் முதலிடத்தை பிடிப்பதாக இருக்கும்.அப்படிப்பட்ட பாடல்கள் நிறைய எழுதியாயிற்று. கவிஞனாக என்னுடைய தாகங்கள் அடங்கவில்லை. அது உலக எல்லைக் கோடுகளைத் தொடுகின்ற தாகமென்பதால் அதற்கின்னும் நிறைய உயரங்களை அடைய வேண்டும். மத்தபடி நடிகனாக இந்த முயற்சி என்பதும் கவிஞனாக என்னுடைய தாகத்தைத் தீர்ப்பதற்கான பாலம்தான்! அதாவது கவிஞனாக என்னுடைய மகாபடைப்பொன்று எனக்குள்ளே எழுத்தாக்குகின்ற முயற்சி ஒருபக்கமிருந்தாலும். இன்றைய அறிவியல் காலகட்டத்திலே இந்த சினிமாவைத் தவிர வேறு எந்த சக்தியாலும் முடியாது. ஆதலால் அப்படிப்பட்ட ஒரு படைப்பினை சினிமாவாக மாற்ற வேண்டுமென்றால் அதற்கு மிகப்பெரிய சக்தி வேண்டும். அதற்குத்தான் நடிகனாக இந்த முயற்சி!
கடந்து வந்த பாதை பற்றி?
எனக்கான பாதை எது என்பதை நான் தீர்மானித்துக் கொண்டேன். அந்த தீர்மானத்தில் தீவிர நம்பிக்கையின் பேரில்தான் கோவையில் படிப்பை உதறிவிட்டு சென்னையை நோக்கி என் பயணத்தைத துவங்கினேன். கவிஞனாக, பாடலாசிரியனாக அந்த பயணம் மிக உறுதிபட சென்று கொண்டிருக்கையில் அந்த பாதையில் மற்றொரு பரிணாமமாக நடிப்புலகம் கதவு திறந்து அழைத்தது. ஒருகட்டத்திலே அந்தக் கதவைத் தட்டத் துவங்கினேன். தானாக என்னை நோக்கித் திறந்துகொண்ட கதவு இப்போது நான் தட்டும் போது திறக்கத் தயாராக இல்லை. அப்போது எனக்குள் இருந்த போராட்ட குணமும் தன்னம்பிக்கையும் அந்த கதவை உடைப்பதற்கான தைரியத்தை கொடுத்தது. பூட்டப்பட்ட கதவினை உடைத்து புதிய பாதையினை எனக்குநானே உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.
என்ன மாதிரி படங்கள் செய்ய திட்டம்?
அடுத்தடுத்து இதே மாதிரி படங்கள்தான்! இதே மாதிரி என்றால் கதைக்களம் மாறும்! சமூக படங்கள், வரலாற்றுப் படங்கள், நகைச்சுவை படங்கள் என்று பல்வேறு விதமான கதைக்களங்களில் நடிப்பதற்கு ஆசை! ஆனால் கமர்ஷியல் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற சம்பவங்கள், மசாலா என்கிற பேரில் அரைக்கப்படுகின்ற மட்டமான இரட்டை அர்த்த காட்சிகள் கொண்டதாக நிச்சயம் என்னுடைய திரைப்படங்கள் இருக்காது. மிக மென்மையான அல்லது மிக வன்மையான திரைப்படங்களைத் தயாரித்து நடிக்க தீவிரமான திட்டங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
ஞாபகங்கள் படத்தின் இயக்குனர் ஜீவன் பற்றி?
இந்த ஞாபகங்களின் ஜீவனே ஜீவன்தான்! தயாரிப்பு பணி ஆரம்பிக்கின்ற போது ஏதோ ஆயிரம் டன் சுமையைத் தூக்கி என் தோளில் வைத்துக்கொண்டு நடப்பது போன்ற உணர்வு இருந்தது. ஆனால் முதல்நாள் படப்பிடிப்பு முடிவடைந்ததுமே மொத்த எடையையுமே தன்னுடைய தலையில் வைத்து நடக்க ஆரம்பித்துவிட்டார் ஜீவன். எனக்கு ஏதோ இரண்டு இறக்கைகள் முளைத்துவிட்டதைப் போல ஓர் ஆனந்தம்!
கதாநாயகி ஸ்ரீதேவிகா...?
படத்தின் மிகப்பெரிய சக்தி! இந்த திரைப்படமானது ஹீரோயிசம் கொண்ட திரைப்படம் அல்ல...! கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற கதைத்துவம் கொண்ட படம்! அந்த பாத்திரத்தை முழுமையாக நிரம்பத் தக்க வகையில் நடிப்பாற்றலோடு வந்தார் ஸ்ரீதேவிகா! புகைப்படத்தை மட்டுமே பார்த்து ஹீரோயினை நாங்கள் தேர்வு செய்தோம். எங்கள் தேர்வு ஒருதுளிகூட தவறாகவில்லை. மொத்தப் படக்குழுவினரையும் தன்னுடைய நடிப்பாற்றலால் அசத்தினார். இறுதிநாள் படப்பிடிப்புவரை அவருடைய நடிப்பில் எந்தவித குறையுமே இல்லை.
ஞாபகங்கள் படத்தில் மறக்கமுடியாத ஞாபகம்?
தன்னம்பிக்கையை மட்டுமே முதலீடாகக்கொண்டு துவங்கப்படுகின்ற ஒரு நிறுவனத்தின் முயற்சி, கடவுளின் அருள் காரணமாக உறுதியாக லட்சியத்தின் உயரத்தைத் தொட்டே தீரும் என்பதற்கு ஞாபகங்கள் திரைப்படம் அனைவருடைய இதயத்திலும் ஒரு ஞாபகமாக பதிவாகும். அப்படிப்பட்ட பதிவை இந்த படத்தின் வெற்றி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
|