
By: Amalan
படத்திற்கு படம் வித்தியாசம் காட்ட நினைக்கும் துடிப்பு. கட்டும் வேஷத்திற்குள் தன்னை பொருத்திக் கொள்ளும் சிறப்பான நடிப்பு என கிட்டத்தட்ட கலைஞானியின் இடத்தை தொட்டுக்கொண்டிருக்கிறார் விக்ரம்.
எல்லா வெற்றியாளர்களை போலவேதான் விக்ரமின் கடந்த காலமும் கரடுமுரடானவை. ஹீரோவாக அறிமுகமான கொஞ்சநாளிலேயெ வாய்ப்புகள் வற்றிப்போக பிண்ணனி குரல் கொடுக்கும் அளவிற்கு சறுக்கி இப்போது மீண்டும் முன்னணிக்கு வந்திருக்கிறார். ஆக, இந்த சீயானின் சினிமா வாழ்க்கையும் ஒரு பரமபதமே.
கரையேற தத்தளிப்பவனுக்கு சின்ன தக்கை கிடைத்தாலும் தப்பித்துவிடுவான்தானே? விக்ரமுக்கோ கட்டுமரமாக கிடைத்ததுதான் 'சேது'வாய்ப்பு. இதோ அந்நியன் அரிதாரம் கலைத்துவிட்டு 'மஜா'வில் ஜாலி பட்டாசை கொளுத்த ரெடியாகிவிட்டார்.
காரைக்குடி ஷூட்டிங் முடித்துவிட்டு சின்ன கேப்பில் சென்னை திரும்பியவரை சினி செளத் பிரத்யேக பேட்டிக்காக சந்தித்தோம்.
முகம், கைகள் எல்லாம் கருத்துப்போய் சற்று டல்லடித்தவரிடம், என்ன விக்ரம் கொஞ்சம் கலரை கம்மி பண்ணியிருக்கீங்களே ஆடித்தள்ளுபடியா? என்றோம்.
'ஹா ஹா ஹா...' பலமாக சிரித்தவர் நம் தோளைத்தட்டி எல்லாம் 'மஜா' லொகேஷன் செய்த மாயம்தான்.
மாயத்தை மறைக்காமல் சொல்லலாமே?
ம்...சொல்லிட்டா போச்சு. பொள்ளாச்சி, காரைக்குடி, ரெண்டு ஏரியாவிலுமே 'மஜா' ஷூட்டிங் மாறி மாறி நடக்குது. பொள்ளாச்சி பக்கம் போனா ஒரே மழை அடிக்குது. காரைக்குடிக்கு வந்தா வெயில் கொளுத்துது. இப்படி அடிக்கடி லொகேஷன் மாறியதால் ஆட்டமேட்டிக்கா ஸ்கின் கொஞ்சம் டிரை ஆயிடுச்சு அதான்.
'மஜா' எப்படி வந்துகிட்டு இருக்கு?
ரொம்ப சூப்பரா போகுது. ஷூட்டிங் ஸ்பாட்லகூட சிரித்து சிரித்து வயிறு புண்ணாயிடுதுன்னா ஸ்கிரிப்ட் எப்படி இருக்கும்னு பார்த்துக்குங்க. அந்நியனில் சீரியஸ் கேரக்டர் பண்ணிட்டு கிட்டதட்ட ஒரு ரோபோ மாதிரி இருந்த நான் 'மஜா'வில் சூப்பரா ரிலாக்ஸ் ஆகிவிட்டேன். டைரக்டர் ஷாபி ஒவ்வொரு சீனையும் அழகாக படமெடுக்கும் விதமே தனிதான். பிரேம் பை பிரேம் 'மஜா' ஜாலி பட்டாசுதான்.
அசின் எப்படி?
வெரி நைஸ் கேர்ள். சொல்ற சீனை டக்குனு புரிஞ்சுகிட்டு அடுத்த நொடியே டேக்கில் அசத்துற கில்லாடி.
அந்நியன் தெலுங்கில் நல்லா போகுது, தமிழ்நாட்டில் அவ்வளவு நல்ல ரிசல்ட் கிடைக்கவில்லை?
எல்லா படத்தையும் வெற்றிப்படமா கொடுக்கவேண்டும் என்ற எண்ணம்தான் எல்லா டைரக்டர்களிடமும் நடிகர்களிடமும் இருக்கு. அந்த வகையில் அந்நியனிலும் ஷங்கர் சார் கடுமையாகவே உழைத்திருக்கிறார். ஆனா கால்குலேஷன் தப்பிடுச்சு. தமிழ்நாட்டில் அந்நியனுக்கு ரொம்பவே எதிர்பார்ப்பு இருந்தாலும் கூட இங்கு அது தோல்வி அடைஞ்சிருக்கலாம். ஆனால் தெலுங்கில் அந்த எதிர்பார்ப்பு இல்லாமலேயே படம் ரிலீஸ் ஆனதால்கூட அங்கு அது வெற்றி அடைஞ்சிருக்கலாம்.
படத்தோட ரிசல்ட் உங்களை பாதித்துள்ளதா?
வெற்றி தோல்வி ரெண்டையுமே தாங்கிக்கொள்ள வேண்டிய பக்குவம் என்னிடம் இருக்கு.
இந்த பக்குவம் கடந்த காலம் கற்றுக்கொடுத்த பாடமா?
கரெக்ட். "செதுக்க செதுக்கதானே சிலை; கழிவுகள் தானே ஒரு கட்டத்தில் உரமாகுது. தோல்வி வந்தால் சோர்ந்து போவதும், வெற்றி பெற்றால் தலைகால் புரியாமல் ஆடுவதும் எப்போதுமே இருக்ககூடாது. அன்றைக்கு மற்ற ஹீரோக்களுக்கெல்லாம் நான் குரல் கொடுத்தபோது என் மனதில் வெறி இருந்ததே தவிர பொறாமை இல்லை. அந்த வெறிதான் இன்றைக்கு என்னை உயர்த்தியிருக்கு. அன்று நான் டப்பிங் கொடுத்த நடிகர்களில் பலர் இன்று பீல்டிலேயே இல்லை. இதுதான் சார் வாழ்க்கை" பேச்சில் தத்துவங்களையும் பக்குவங்களையும் அள்ளி வீசுகிறார்.
உங்களை அடுத்த கமல் என்று பலர் சொல்கிறார்கள்?
"கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா அந்த அளவிற்கு தகுதியானவன்தானா என்று என்னை நானே சுயபரிசோதனை செய்து கொள்கிறேன்." அட, பதிலில்கூட கமலின் வாடை அடிக்கிறதே.
விஜய் உங்களுக்கு நெருக்கமான நண்பாராகிவிட்டார் போல...
யெஸ். என்னோட விழாவுக்கு அவரும் அவரோட விழாவுக்கு நானும் போவதை வழக்கமாக வைத்துள்ளோம். எங்களுக்குள் எவ்வித பொறாமையும் தலைதூக்கியதில்லை. சினிமாவை சினிமாவாகவும் வாழ்க்கையை வாழ்க்கையாகவும் பார்ப்பதுதான் இதற்கு காரணம். இப்படி எல்லா நடிகர்களிடமும் ஆரோக்கியமான நட்பு வளர வேண்டும். விஜய்யிடன் எனக்கு பிடித்த அம்சங்கள். அவருடைய அமைதி, டான்ஸ், ஆக்ஷ்ன், நடிப்பு.
பாடியை எப்படி மெயின்டென் பண்றீங்க?
'சேது' படத்துக்கு முன்னாடி அசைவம், சைவம் எது இருந்தாலும் ஒரு கட்டு கட்டுவேன். காலையில் டிபன் என்றால் ஒன்றிரண்டு இட்லி, தோசையெல்லாம் பத்தாது. அட்லீஸ்ட் இரண்டு டஜனாவது உள்ளே தள்ளுவேன். மதிய சாப்பாட்டில் அசைவம் இருந்தால் ஒரு முழுக்கோழியைகூட ஸ்வாகா செய்திடுவேன். அப்படி ஒரு சாப்பாட்டு ராமன்தான் நான். ஆனா இப்போ ஒவ்வொரு படத்துக்கும் வெவ்வேறு மாதிரி தோற்றத்தை காட்டவேண்டியிருப்பதால். அதுக்கு தகுந்தது போலவேதான் உணவு எடுத்துக்கொள்கிறேன்.
அப்புறம் தம்புள்ஸ், தண்டாள்னு உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். அவுட்டோர் சூட்டிங் என்றால்கூட கூடவே ஜிம் இன்ஸ்ட்ரூமென்டை கொண்டு போய்விடுவேன். இதுதான் என் இளமையின் ரகசியம்.
கதைகளை எப்படி தேர்வு செய்றீங்க?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற மாதிரி ஒரு கதையோட ஒன்லைன் கேட்டாலே போதும் அதில் சரக்கு இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிடும். அப்படி அந்த ஒன்லைன் எனக்கு பிடித்துவிட்டால் அடுத்து டைட்டில் கார்டில் ஆரம்பித்து சுபம் போடும் வரை காட்சிகளை கேட்பேன். பிறகு இயக்குனரின் திறமையை எடைபோடுவேன் எல்லாம் ஒத்து வரும் பட்சத்தில் தான் ஓ.கே. சொல்கிறேன்.
அந்த வகையில் உங்களைக் கவர்ந்த இயக்குனர் யார்?
பாலா, தரணின்னு ஒரு பட்டியலே போடலாம். ஏன், இப்போ 'மஜா'வை இயக்கும் ஷாபிகூட என்னை கவர்ந்திருக்கிறார்.
அடுத்து எந்தெந்த படங்களில் நடிக்கறீங்க?
'மஜா'வை முடிச்சிட்டு ஒரு தெலுங்கு படம் பண்றேன். தமிழில் ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறேன். ஆனால் இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை.
பாலா படம் எப்போது?
பாலா படம் என் சொந்த படம் மாதிரி. எப்பவேணும்னாலும் பண்ணலாம்.
இப்போது களமிறங்கியிருக்கும் இளம் நடிகர்கள் பற்றி..
'ஹேய்.. நானும் இளம் நடிகர்தான் பிரதர்...'என்று சிரித்தவர். பரத், சூர்யா,ஜெயம் ரவி, தனுஷ் எல்லாருமே கலக்கிட்டுதான் இருக்காங்க. ஆனால் அவசியம் இல்லாத விரோதம் இல்லாமல் ஆரோக்கியமான போட்டி இருந்தால் அவர்களுடைய வளர்ச்சிக்கும் இன்டஸ்டிரீயோட வளர்ச்சிக்கும் நல்லா இருக்கும்.
குடும்பம் பற்றி?
"சிறு குடும்பம் சீரான வாழ்வுன்னு Family life ரொம்ப ஸ்மூத்தா போகுது. ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தா மனைவி பிள்ளைகளோட நேரம் போகும்போது தியானம் பண்றமாதிரி திருப்தியா இருக்கும்" அப்படியே கண்ணை மூடி ரசிக்கிறார் சீயான்.
nt>
|
Feedback!
|
| |
|
|
Online Support 9 AM to 6 PM IST
|
|
|
24 Hours Phone Support
|
| 91 - 44 - 56111702
|
Send this page to your friend!
|
|
|
|