சிவலிங்கம் ஐபிஎஸ்ஸில் வில்லனாக கார்த்திக் - ஷூட்டிங் விசிட்
Written by: Palani swamy
வளசரவாக்கத்தில் உள்ள சேட் ஹவுஸில் நாம் நுழைந்தபோது இயக்குனர் ராஜ்கபூர், கார்த்திக், ஆனந்த்ராஜ், டி.பி. கஜேந்திரன், ஜி.எம். குமார், புதுமுகம் ஸ்டெல்லா ஆகியோர் காம்பினேஷனில் மாஸ்டர் ஷாட் எடுத்துக்கொண்டிருந்தார்.
அட, கார்த்திக்கா இது என நாம் அசரும்விதமாக மாறியிருந்தார் கார்த்திக். 'உள்ளத்தை அள்ளித்தா' காலக்கட்ட கார்த்திக் போல இளமையாகவும் உற்சாகமாவும் தோன்றினார்.
ஆனந்த்ராஜ் எம்.எல்.ஏ.வாகவும், ஜி.எம். குமார் போலீஸ் ஆபிஸராகவும், டி.பி. கஜேந்திரன் மந்திரியாகவும் நடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த ஷாட் எடுத்துமுடித்ததும் அடுத்த ஷாட் பற்றி ராஜ்கபூர் கார்த்திக்கிடம் விளக்க ஆரம்பித்தார். அப்போது மணி பகல் ஒன்றை தாண்டியதை கவனித்த ராஜ்கபூர் 'ப்ரேக்' சொல்ல நடிக, நடிகைகளும் டெக்னிஷியன்களும் பகல் சாப்பாடும் ஒரு மணிநேர ஓய்வும் பெறும் மூடில் ரிலாக்ஸ் ஆனார்கள்.
'ப்ரேக்' விட்டதால் ப்ரீயான ராஜ்கபூர் நம்முடன் இணைந்துக்கொண்டார். " 'சிவலிங்கம் ஐ.பி.எஸ்.' எனக்கு சரியான சேலஞ்சிங் பிக்ஸர். நான் ஏற்கனவே கார்த்திக்சாரை வச்சு 'சின்ன ஜமீன்' ஹிட் படம் கொடுத்திருக்கேன். அதேபோல சத்யராஜ்சாரும் நானும் சக்சஸ் காம்பினேஷன்தான். ஏற்கனவே நாங்க இணைஞ்ச 'வள்ளல்' ஹிட். இவுங்க ரெண்டு பேரையும் இப்பசேர்த்து 'சிவலிங்கம் ஐ.பி.எஸ்.' பண்றதால 'சின்ன ஜமீன்', 'வள்ளல்' படங்களைவிட மிகப்பெரிய வெற்றிப்படமா ஆக்கியே தீரணும்ங்கிற வெறில இருக்கேன்" என்று கொட்டித்தீர்த்தார் ராஜ்கபூர். அவரது வேகத்தை பார்த்தால் மனுஷன் நிச்சயம் சொன்னபடி செய்துவிடுவார் என்றே நமக்குதோன்றியது.
நாம் வந்த வேலை ராஜ்கபூரிடம் முடிந்ததும் கார்த்திக்கை அவரது கேரவனுக்குள் மெதுவாக நுழைந்து பிடித்துக்கொண்டோம். " 'சிவலிங்கம் ஐ.பி.எஸ்.'ல நான் ஆடியன்ஸ் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு கேரக்டர் பண்றேன். இநத் படம் என் கேரீயர்ல நிச்சயம் ஒரு டர்னிங் பாயிண்டா இருக்கும். இந்த கேரக்டரை நான் ரொம்ப என்ஜாய் பண்ணிப்பண்றேன். மலையாள மூலப் படத்தை பார்த்து பிடிச்சுப்போனதாலும் ராஜ்கபூரோட எனக்கு இருக்கிற நல்ல அண்டர்ஸ்டேண்டிங்களாலும் இந்த கேரக்டர் பண்றேன்" என்று நம்பிக்கையுடன் சொன்ன கார்த்திக்கிடம், "எப்படி ஸார் திடீர்னு இப்படி ஒரு சேன்ஞ். ஏதாவது கேரள மூலிகை வைத்தியம் எடுத்திட்டீங்களா?" என்று கேட்டோம். இப்போதுதான் நம்ம ஹீரோக்கள் இளமை தோற்றம் பெற கேரளா செல்வது பேஷன் ஆகிவிட்டதே. கார்த்திக்கோ, "அதெல்லாம் ரகசியம்; ரிசல்ட் ஓ.கே.தானே?" என்று சிரித்தார்.
மணி 2 ஆனதும் யூனிட் மறுபடியும் பரபரப்பானது. தாதா கார்த்திக்கை அவரது வீட்டிற்கு வந்து மந்திரி டி.பி. கஜேந்திரன், எம்.எல்.ஏ. ஆனந்த்ராஜ், போலீஸ் அதிகாரி ஜி.எம். குமார் மற்றும் புதுமுக வில்லி ஸ்டெல்லா ஆகியோர் சந்தித்து விவாதம் செய்யும் காட்சியை ராஜ்கபூர் இயக்க, ஒளிப்பதிவாளர் பாலமுருகன் பதிவு செய்துகொண்டிருக்க, நாம் அங்கிருந்து கிளம்பினோம்.
சத்யராஜ் - கார்த்திக், இணைந்து நடிக்க சுந்தரி பிலிம்ஸ் தயாரிக்கும் 'சிவலிங்கம் ஐ.பி.எஸ்.' மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற 'பரத்சந்திரன் ஐ.பி.எஸ்.' படத்தின் ரீமேக். கேரளாவில் பெரிய கதாசிரியரான ரஞ்சி பணிக்கர் இயக்கிய 'பரத்சந்திரன் ஐ.பி.எஸ்.' மார்க்கெட் மிகவும் சரிந்திருந்த சுரேஷ்கோபியின் மார்க்கெட்டை மறுபடியும் நிமிர்த்திய படம். தேவையில்லாத பாடல்களும் தனி காமெடி ட்ராக்கும் திரைக்கதையின் ஓட்டத்தை மட்டுப்படுத்துவது தமிழ் சினிமாவில் சகஜம். இந்த தவறை சிவலிங்கம் ஐ.பி.எஸ்.ஸில் தவிர்த்திருக்கிறார்களாம். மலையாள 'பரத்சந்திரன் ஐ.பி.எஸ்.'ஸின் சாதனையை தமிழ் 'சிவலிங்கம் ஐ.பி.எஸ்.' முந்துவாரா?
|
Feedback!
|
|