வணக்கம் தலைவா - ஷூட்டிங் விசிட்
Written by: Palani swamy
பாண்டிபஜாரில் உள்ள காசி ஆர்காட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் நாம் நுழைந்தபோது ஆறடிக்கு மேல் வாட்டசாட்டமான ஒரு சீக்கியர் பரபரப்பாக நம்மை கடந்து சென்றார். இவரை எங்கேயோ நாம் பார்த்திருக்கிறோமே என்று நினைத்தபடியே நாம் தொடர்ந்து செல்ல 'சார் பீல்ட்' என்று சத்தமிட்டபடி மூன்றுபேர் கபக்கென்று காரிடேரிலிருந்து நம்மை ஒரு கடைக்குள் இழுத்துக்கொணட்னர். பிறகுதான் அவர்கள் 'வணக்கம் தலைவா' படத்தின் உதவி இயக்குனர்கள் என்பதும் நம்மை கடந்து பதட்டமாக சென்றவர் சத்யராஜ் என்பதும் நமக்கு உறைத்தது.
'ஷாட் ஓ.கே.' என்று இயக்குனர் ஷக்தி பரமேஷ் சொன்னதும் ஒளிப்பதிவாளர் சுரேஷ் தேவன் அடுத்த ஷாட்டுக்கான லைட்டிங் அரேஞ்மெண்ட்ஸில் மூழ்கினார்.
"உங்க உயரத்துக்கும் நிறத்துக்கும் இந்த கெட்-அப் கலக்கலா இருக்கு சார்" என்றபடி ரிலாக்ஸாக சேரில் அமர்ந்த சத்யராஜை நாம் நெருங்க நம்மை பார்த்து சிரித்தபடி பக்கத்திலிருந்த சேரை கைகாட்டினார். நாம் அமர்ந்ததும், "இதென்ன தலைவா கெட்-அப்? படத்துல இதுபோக ஆறு கெட்-அப்ல வர்றேன். ஒவ்வொரு கெட்-அப்லயும் டோட்டலா ஒண்ணிலிருந்து ஒண்ணு மாறியிருக்கும். என் கேரீயர்லேயே மொதல் மொதலா ஏழு கெட்-அப்ல 'வணக்கம் தலைவா'படத்துல பண்றேன்" என்றார்.
அந்தக் காட்சியின் கான்ஸெப்ட் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் என்று இயக்குனர் ஷக்தி பரமேஷிடம் நாம் செல்ல, அவர் துணிக்கடை பெண் பொம்மை ஒன்றின் தோள் மீது அப்படியும் இப்படியுமாக கைபோட்டுக்கொண்டு அடுத்த ஷாட்டில் சத்யராஜுக்காக பொஸிசனை பரிசீலித்துக்கொண்டிருந்தார். ஒளிப்பதிவாளர் சுரேஷ்தேவன் தன் உதவியாளரிடம் டேப்பை கொடுத்து கேமராவிற்கும் பொம்மைக்கும் இடையேயான தூரத்தை அளந்து அதற்கேற்றாற்போல் கேமரா லென்ஸ் லைட்டிங் மற்றும் அபெர்ஷர் செட் பண்ணிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் உதவி இயக்குனர் சத்யராஜை அழைத்துவர, ஷக்தி பரமேஷ் சத்யராஜிடம் துணிக்கடை பொம்மை அருகே அசையாமல் நிற்கச் சொல்ல, சத்யராஜ் பொம்மையோடு பொம்மையாக அசையாமல் நிற்க அந்த 'ஷாட்' படமாக்கப்பட்டது.
அடுத்த ஷாட்டிற்கான இடைவெளியில் அந்த காட்சியின் கான்செப்ட் பற்றி ஷக்தி பரமேஷிடம் நாம் கேட்க, "சத்யராஜ் சீக்கியர் வேஷத்துல அப்பாஸோட காதலியை கடத்திடறார். அவரை தேடி அலையற அப்பாஸ் இந்த காம்ப்ளஸ்ல இருக்குற சீக்கியர் சங்கத்துல சத்யராஜ் பத்தி விசாரிக்க வர்றார். இது தெரியாம சத்யராஜ் அந்த நேரம் பார்த்து இந்த காம்ப்ளக்ஸுக்கு ஷாப்பிங் வர்றார். சத்யராஜை அப்பாஸ் பார்த்துவிட அவர் சத்யராஜை துரத்துவதும் சத்யராஜ் அங்கங்கே மறைஞ்சு அப்பாஸுக்கு கல்தா கொடுப்பதும் கலகலப்பாக படமாக்கிட்டிருக்கிறோம். இப்ப சத்யராஜ் சம்மந்தப்பட்ட ஷாட்டை எடுத்துட்டு இருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்துல அப்பாஸ் வந்திடுவார்" என்று விளக்கினார் ஷக்தி பரமேஷ்.
ஏற்கனவே 'சூர்யப்பார்வை', 'லூட்டி', '3 ரோஸஸ்' படங்கள் இயக்கிய ஷக்தி பரமேஷ் 'வணக்கம் தலைவா' தனக்கு நிச்சயம் ப்ரேக் தரும் என்கிறார். தயாரிப்பாளர்கள் ஆனந்தன் மற்றும் பழனிவேல் தனக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகச் சொன்ன ஷக்தி பரமேஷ், "ஆக்ஷ்ன், சென்டிமெண்ட், காமெடி கலந்த மசாலா கலவை வணக்கம் தலைவா" என்றவர், "விவேக் இந்தப்படத்தில் முதல்முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். சத்யராஜ் - விவேக் காம்பினேஷனில் அடாவடி காமெடி, நாயகி சூஸனின் கவர்ச்சி, இன்னொரு நாயகி பிரணதியின் அழகான நடிப்பு ஆகியவை படத்துக்கு நிச்சயம் கூடுதல் போனஸ்.
அப்பாஸுக்கு இந்தப்படம் நிச்சயம் இரண்டாவது இன்னிங்ஸாக இருக்கும்" என்ற ஷக்தி பரமேஷிடம் விடைபெற்றுக்கொண்டு நாம் கிளம்பினோம்.
|
Feedback!
|
|