மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
- 25.06.2008
By JBR
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
54-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட விருதுகள் எதுவுமில்லை என்றாலும், தேசிய விருதுகள் அளவுக்கு விமர்சனத்துக்குள்ளான விருதுகள் இருக்குமா என்பது சந்தேகமே. கலைஞனின் திறமையைவிட தங்கள் மொழிக்கும், மாநிலத்துக்கும் விசுவாசமாக இருக்கும் ஜூரிகளே இங்கு அதிகம். இந்த முறையும் தேசிய விருதுகள் பல்வேறு விமர்சனத்துக்குள்ளாயின. அவற்றைவிட விருது பட்டியலில் பிரகாசமாக துலங்கும் இரு திறைசாலிகளே நமக்கு முக்கியம்.
தேசிய அளவில் சிறந்தப் படமாக மலையாள திரைப்படம் 'புலிஜென்மம்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. முரளி, சிந்துமேனன் நடித்திருந்த இந்தப் படத்தை இயக்கியவர் ப்ரியநந்தனன்.
தீவிர சினிமா ஆர்வலர்களுக்கு ப்ரியநந்தன் பெயர் நெருக்கமானது. மலையாள சினிமாவின் உன்தை படைப்பாளிகள் அடூர் கோபால கிருஷ்ணன், பத்மநாபன், அரவிந்தன் வரிசையில் வைத்து கொண்டாடப்படுகிறவர் ப்ரியநந்தனன்.
2002-ம் ஆண்டு தனது முதல்படம் நெய்த்துக்காரனை இயக்கினார் ப்ரியநந்தனன். முரளி நாயகனாக நடித்த இப்படம் கேரள அரசின் சிறந்தப் படத்துக்கான விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பற்றியது.
ஆச்சாரமிக்க நம்பூதிரி குடும்பத்தில் பிறந்து, கம்யூனிஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, குடும்பம், சொத்து அனைத்தையும் இழந்து தொழிலாளிகளுக்காகவும், விளிம்புநிலை மக்களுக்காகவும் போராடியவர் ஈஎம்எஸ் நம்பூதிரிபாடு. உலகிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ அரசின் முதலமைச்சர் என்ற பெருமையும் ஈஎம்எஸ்-க்கு உண்டு.
இவரது அந்திமகாலத்தில் கம்யூனிஸ கொள்கைகள் நீர்த்துப் போவதையும், தோழர்கள் அதிகாரத்திற்காக சோரம் போகும் அவலத்தையும் விவரிக்கிறது 'நெய்த்துக்காரன்'. இதில் வயதான ஈஎம்எஸ் வேடத்தில் நடித்தவர் புலிஜென்மத்தில் நடித்த அதே முரளி. (இவரும் ஒரு கம்யூனிஸ்ட். கம்யூனஸ்ட் சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்).
'நெய்த்துக்காரன்' 2002-ல் வெளியானபோது கேரளாவில் ஒரு அலையை எழுப்பியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2006-ல் ப்ரியநந்தனன் இயக்கிய படமே 'புலிஜென்மம்'.
சமூகத்தின் அர்த்தமற்ற நடைமுறைகளுடன் ஒட்டமுடியாத தனித்துவமான வேடம் ஒன்றில் இதில் நடித்திருந்தார் முரளி. படத்தில் அவர் 'புலிஜென்மம்' என்ற நாடகம் ஒன்றை நடத்த முயல்கிறார். இதனூடாக கேரளாவின் ஆதாரப்பிரச்சனைகளான நீர், நிலம், இனம் மற்றும் போக்குவரத்து நெருக்கடி ஆகியவற்றை சொல்லிச் செல்கிறார் ப்ரியநந்தனன். பிரபாகரனின் புலிஜென்மம் நாடகத்தை தழுவி எடு்க்கப்பட்ட படம் இது.
முதல்படம் முடித்தபிறகு இரண்டாவது படம் இயக்க பிரியநந்தனுக்கு நான்கு வருடங்கள் ஆனது. வியாபார நிர்பந்தங்களுக்கு பணிய மறுத்ததால் ஏற்பட்ட இடைவெளி இது. காலம் கரைவது குறித்து கவலை கொள்ளாமல் நான்கு வருடம் காத்திருந்து புலிஜென்மத்தை தந்திருக்கிறார். ப்ரியநந்தனன். தேசிய விருது இவரின் நேர்மைக்கு கிடைத்த சிறிய பரிசு.
2006-ம் ஆண்டின் சிறந்த இயக்குனராக தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மதூர் பண்டார்கர் 'ட்ராபிக் சிக்னல்' படத்துக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.
மதூர் பண்டார்கரின் நான்காவது படம், 'ட்ராபிக் சி்க்னல்'. இவரின் முதல் படம் பலவேறு சர்வதேச விருதுகளை வென்றது. 'சாந்தினி பார்' என்ற அந்தப் படத்தில் மும்பையின் மலிவான பார் ஒன்றில் ஆடிப்பிழைக்கும் பெண்ணின் கதையை கூறியிருந்தார் மதூர். பார் டான்சராக தபு. அவரை திருமணம் செய்யும் ரவுடியாக அதுல்குல்கர்னி. பெரும் தாதாக்களின் அரசியல் செல்வாக்கு, அவர்களின் நலனுக்காக போலீசால் போட்டுத் தள்ளப்படும் கடைநிலை அடியாட்கள், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் பாலியல் வன்முறை என விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி சித்தரிப்புகள் நிறைந்தது 'சாந்தினி பார்'.
மாதூரின் இரண்டாவது படம் 'பேஜ் த்ரீ'. மேல் தட்டு வர்க்கத்தின் பார்ட்டி கலாச்சரத்தை, போலி மரியாதையை, ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னுள்ள சூன்யத்தை தோலூரித்து காட்டியது.
மூன்றாவது படம் 'கார்ப்பரேட்'. கார்ப்பரேட் நிறுவனங்களா, அதன் நடைமுறை கலாச்சரத்தை கேள்விக்குடபடுத்தியதால், பல கார்ப்பரேட் நிறுவனங்களின் தாக்குதலுக்குள்ளானது.
நான்காவது படமான 'ட்ராபிக் சிக்னல்'. மும்பை பெருநகரின் ட்ராபிக் சிக்னலை நம்பி வாழும் சிறுவியாபாரிகள், பிச்சைக்காரர்கள், ஏமாற்றுக்காரர்களை பற்றியது. சிவப்பு விழும் சில நொடிகளே இவர்கள் வருமானத்தின் ஆதாரம்.
எளிய மனிதர்களைப் பற்றிய இக்கதையில், மும்பை நகரில் பிச்சைத் தொழிலில் புழங்கும் பலகோடி பணத்தையும், அதன் பின்னாலுள்ள தாதாக்களின், அதிகாரவர்க்கத்தின் கைகளையும், பகிரங்கப்படுத்துகிறார் மதூர்.
போக்குவரத்து வசதிக்காக சிக்னல்கள் ஒழிக்கப்பட்டு மேம்பாலங்கள் நகரை ஆக்ரமித்து வருகின்றன. மும்பையில் ஒரு சிக்னலின் இழப்பு பல்வேறுபட்ட விளிம்பு நிலை மனிதர்களின் வருமான இழப்புடன் தொடர்புடையது.
மதூரின் படங்களை கடைகோடி மனிதர்களின் சபிக்கப்பட்ட வாழ்வை, எவ்வித நாடகத்தனங்களும் இல்லாமல் அணுகி ஆராய்பவை, பாலிவுட்டின் கமர்ஷியல் பளபளப்புகளில் மதூர் ஒருபோதும் சிக்கியதில்லை.
மதூரைப் போலவே வியாபார சக்திகளின் மலிவான ரசனைக்கு அடிபணியாதவர் ப்ரியாநந்தன். இவர்களுக்கு கிடைத்திருக்கும் விருதால் அந்த விருதுகளுக்கே பெருமை!
|