
Written by: Amalan
'முயற்சி திருவினையாக்கும்' இந்த மந்திர சொல்லுக்கு சொந்தக்காரர் ஏ.வி.எம். எனப்படும் ஏவி. மெய்யப்ப செட்டியார்.
தமிழ் சினிமா சரித்திரத்தில் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்ட ஏ.வி.எம். ஸ்டுடியோவின் ஸ்தாபகரான ஏ.வி.எம்.மின் நூற்றாண்டு விழா வரும் 28-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
இத்தருணத்தில் ஏ.வி.எம்.மின் சிறப்புகளை ஒவ்வொருவரும் தெரிந்துக்கொள்வது பொருத்தமானதாகவும் சாலச்சிறந்ததாகவும்
இருக்கும்.
இதோ ஏ.வி.எம்.மின் வாழ்க்கையும் வரலாறும்....
காரைக்குடியில் ஆவிச்சி செட்டியாருக்கும், லட்சுமி ஆச்சிக்கும் 28.07.1907-ல் மகனாக பிறந்தார். நகரத்தார்களுக்கு வட்டி தொழில் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் ஆவிச்சி செட்டியார் அந்த காலத்திலேயே ஏவி & சன்ஸ் என்ற பெயரில் பலபொருள் அங்காடி கடை வைத்துள்ளார். தன் தந்தையாருக்கு உடல் நிலை பாதித்ததால் கடை வேலைகளை ஏ.வி.எம். கவனிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. அதற்காக படிக்காமலிருக்கவில்லை. இந்து பத்திரிகையின் தலையங்கத்தை படித்து, தனக்கு அர்த்தம் தெரியாத வார்த்தைகளை குறித்து வைத்துக்கொண்டு, அகராதியைப் பார்த்து அர்த்தத்தை புரிந்துகொண்டு ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார். தன் 22-வது வயதிலேயே Ford Car கம்பெனியிலே ஏஜென்சி எடுத்தார்.
இசைத்தட்டுகளை வாங்குவதற்காக சென்னை வந்தபோது நாம் ஏன் விலைக்கு வாங்கி வியாபாரம் செய்யவேண்டும்? என்ற கேள்வி எழ, அதன் விளைவாக இசைத்தட்டுகளை தயாரிக்கும் சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்தை 09.09.1932-ல் உருவாக்கினார்.
அதன் வளர்ச்சியாக படங்களை தயாரிக்க கல்கத்தாவுக்கு சென்றார். அல்லி அர்ஜூனா (1935), ரத்னாவளி (07.11.1936), நந்தகுமார் (06.070.1938) ஆகிய படங்கள் எடுத்தார். மூன்று படங்களும் தோல்வி அடைந்தன.
தோல்வியை கண்டு பயந்துவிடவில்லை தோல்விக்கு என்ன காரணம் என்று புரிந்துகொண்டு சென்னையில் 1940-ல் பிரகதி ஸ்டுடியோவை பங்குதாரர்களுடன் துவக்கினார். பூ கைலாஷ் (31.05.1941), சபாபதி (09.01.1942), என் மனைவி (07.06.1942), ஹரிச்சந்திரா (04.06.1943) , ஸ்ரீ வள்ளி (14.04.1945) போன்ற படங்களை தயாரித்தார். அதில் ஹரிச்சந்திரா கன்னடத்தில் எடுத்த படம். அதனை தமிழில் மொழி மாற்றம் செய்தார். இதுதான் இந்தியாவிலேயே முதலில் டப்பிங் செய்த படம்.
நந்தகுமார் படத்தில் தேவகியின் பாத்திரத்தில் நடித்த T.P. ராஜலட்சுமிக்கு சரியாக பாட வராததால் லலிதா வெங்கட்ராமனை பின்னணியில் பாடவைத்து அந்த பாடலுக்கு ஏற்றவாறு T.P. ராஜலட்சுமியை வாயசைக்க வைத்தார். இப்படி Paly back முறையை அறிமுகப்படுத்தியவர் ஏ.வி.எம்.தான். ஸ்ரீ வள்ளி படத்தில் ருக்மணி பாடிய பாடலுக்கு P.A. பெரிய நாயகியை பாட வைத்து Post Synchronisation செய்தார்.
1945 சென்னை சாந்தோமில், 60 தெற்குத் தெருவில் ஒரு வீட்டில் சொந்தமாக ஏ.வி.எம். புரொடக்ஷ்ன்ஸ் ஆரம்பித்தார். சென்னையில் மின்சார வசதி கிடைக்காததால் காரைக்குடிக்கு அருகில் தேவகோட்டை ரஸ்தா என்ற இடத்தில் ஒரு நாடக கொட்டகையில் குடிசைகளை போட்டு 1946ல் ஏ.வி.எம். ஸ்டூடியோவை ஆரம்பித்தார்.
அங்கு முதலில் எடுக்கப்பட்ட 'நாம் இருவர்' படம் (14.01.1947) தேசிய உணர்வை ஏற்படுத்திய படம். இதில் பாரதியார் பாடல்களை சேர்த்து பட்டி தொட்டியெங்கும் ஒலிக்க செய்து பாமர மக்களிடம் பாரதியார் பாடல்களை கொண்டு சேர்த்தார். பாரதியார் பாடல் உரிமைகளை ஏ.வி.எம். 10,000 ரூபாய் கொடுத்து வாங்கி வைத்திருந்தார். அப்போதைய முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் கேட்டுக்கொண்டதற்காக பணம் எதுவும் வாங்கிக் கொள்ளாமல் பாரதியார் பாடல்கள் நாட்டுடமை ஆக்கினார்.
அடுத்து எடுக்கப்பட்ட 'வேதாள உலகம்' (08.08.1948) தந்திர காட்சிகள் நிறைந்த படம். எந்த வசதிகளும் இல்லாத அந்த காலத்தில் கேமராவிலேயே தந்திர காட்சிகளை மிக சிறப்பாக எடுத்து புதுமையை புகுத்தினார்.
1948ம் வருடம் ஏ.வி.எம். ஸ்டுடியோவை சென்னைக்கு மாற்றினார். அங்கு எடுத்த முதல் படம் வாழ்க்கை (22.12.1949). இதில்தான் வைஜெயந்திமாலா அறிமுகம் ஆனார். ஸ்டுடியோவை காலத்திற்கு தகுந்தார் போல் நவீன சாதனங்களையும், வசதிகளையும் கொண்டு ஆசியாவிலேயே சிறந்த ஸ்டுடியோவாக மாற்றினார். அங்கு இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், சிங்களம், வங்காளம் ஆகிய மொழிகளில் படங்கள் எடுக்கப்பட்டன.
ஏ.வி.எம். எடுத்த படங்கள் வியாபார ரீதியாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கு பல விழிப்புணர்வுகளை உண்டாக்கிய கருத்துள்ள படங்களாக அமைந்தன.
ஹம் பஞ்சி ஏக் டால்கே (08.08.1957) என்ற இந்தி படம் மனித ஒற்றுமையையும், மத ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் குழந்தைகளுக்கான சிறந்தபடம். இது இந்திய அரசின் தங்க பதக்கத்தை பெற்ற படம். இந்த படத்தை எடுத்ததற்காக பிரதமர் ஜவஹர்லால் நேரு ஏ.வி.எம்.மை தன் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தார்.
ஏ.வி.எம்.மில் பணியாற்றிய ஐந்து பெருமக்கள் முதலமைச்சர் ஆனது ஏ.வி.எம்.மிற்கு கிடைத்த தனி பெருமை.
அறிஞர் அண்ணா - (ஓர் இரவு - 11.04.1951)
கலைஞர் மு. கருணாநிதி - (பராசக்தி - 17.10.1952)
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். - (அன்பே வா - 14.01.1966)
செல்வி ஜெயலலிதா - (மேஜர் சந்திரகாந்த் - 11.11.1966) போன்ற பல படங்கள்
N.T. ராமாராவ் - (சங்கம் - 10.07.1954), (பூ கைலாஷ் - 20.03.1958), (ராமு - 04.05.1968), (சிட்டி செல்லலு - 29.07.1970).
வைஜெயந்திமாலா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமலஹாசன், V.K. ராமசாமி, T.R. மகாலிங்கம், சிவகுமார் போன்ற பல நடிகர்களும் ஏ.வி.எம்.மால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.இதைப்போல பல இயக்குனர்களும், தொழில் நுட்பகலைஞர்களும் இங்கே உருவானவர்கள். ஏ.வி.எம். ஸ்டுடியோ திரை உலகத்திற்கு ஒரு பல்கலைக்கழகம்.
அரசியல் தலைவர்களிடம் நெருங்கிய நட்புடன் இருந்தத ஏ.வி.எம். தன்னை எந்த கட்சியிலும் ஐக்கியப்படுத்திக் கொள்ளவில்லை. தன்னை போன்ற வியாபாரிகளுக்கு அரசியல் கூடாது என்ற கொள்கையில் தீவிரமாக இருந்தவர்.
இசையிலும் - இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த ஏ.வி.எம்., கம்பன் கழகத்தில் துணைத்தலைவராக இருந்தார். ஆண்டுதோறும் கம்பன்விழா நடப்பதற்கு ஏ.வி.எம். இராஜஸ்வரி மண்டபத்தை கொடுத்தார். அவர் எண்ணம் போல் இப்போதும்கம்பன் விழா தொடர்ந்து நடைபெறுகிறது.
ஏ.வி.எம். நிறுவனத்தில் மூன்று தலைமுறையாக வேலை செய்யும் நிர்வாகிகள், பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வீடுகட்ட நிலம், வீடுகட்டிக் கொள்ள கடன் ஏற்பாடு, இன்சூரன்ஸ், அவர்கள் பிள்ளைகள் படிப்பதர்கு ஆவிச்சி மேல்நிலைப்பள்ளி, மருத்துவமனை, ஏ.வி.எம். கல்யாண மண்டபம் போன்ற எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார்.
'செய்வன திருந்த செய்' என்பது ஏ.வி.எம்.மின் கொள்கை. டைம் மேனேஜ்மென்ட் என்று சொல்வார்களே அதை அவர் பிராக்டிகலாக கடைப்பிடித்தார்.
Tomorrow is not Good நாளை என்று ஒத்திப்போடுவது நல்லதல்ல என்பது அவரது கொள்கை. எந்த வேலை ஆனாலும் இத்தனை நாளில் இத்தனை மணி நேரத்தில் முடிக்கவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுபவர். அதனாலேயே வெற்றிகள் அவரைத் தேடி வந்தன.
படத்தில் காட்சிகள் தனக்கு பிடிக்கவில்லை என்றால் திரும்பி எடுக்க சொல்வார். செலவைப் பற்றி கவலை படமாட்டார். அவருக்கு தரம்தான் முக்கியம்.அவருக்கு Quantity முக்கியமில்லை Qualityதான் முக்கியம்.
சினிமாவில் எல்லா துறைகளையும் நன்கு தெரிந்துக்கொண்டு படங்களை தரமாக எடுத்தவர். படத்தயாரிப்பு, டைரக்ஷ்ன் மட்டுமில்லமல் விநியோகம், படங்களின் வசூல், தியேட்டர்களில் வெளியிடுவது, விளம்பரம் அத்தனையும் அவர் கைவிரல் நுனியில் இருக்கும். நினைவாற்றல் மிக மிக அதிகம்.
உதட்டில் சிரிப்பும், உள்ளத்தில் வேறுவிதமாகவும் இருக்க தெரியாதவர். பிடிக்காத விஷயங்களை பிடிக்கவில்லை என்றும், பிடிக்காதவர்களை பிடிக்கவில்லை என்றும் சொல்ல தயங்காதவர். நல்லவற்றை மனம் திறந்து பாராட்டுவார். சமூகத்தில் தலைநிமிர்ந்து கௌரவமாக வாழ்ந்துக்காட்டியவர். நல்ல கருத்தை யார் கூறினாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்.
எவ்வளவு வேண்டுமானாலும் செலவு பண்ணலாம் ஆனால் வீணாக்கக்கூடாது. உடல் நலமின்றி மருததுவமனையில் படுத்திருந்தபோது கழிவறையில் வீணாக எரியும் விளக்கை அணைக்கும்படி தன் மகன் சரவணனிடம் சொன்னார். 12.08.1979 அன்று இவர் சொன்ன கடைசி வார்த்தை அதுதான். அவரின் இறுத்திக்கட்டத்தில் கூட யாருடைய பணமாக இருந்தாலும் அதை வீணாக்கக்கூடாது என்ற மனப்பான்மை அவருக்கு இருந்தது.
ஒரு நாள் ஏ.வி.எம். தன் மகன்களிடம் உணர்ச்சிவசப்பட்டு, "ஏ.வி.எம்.புரொடக்ஷ்ன்ஸ் எம்பிளம் நம் கம்பெனியுடைய சின்னம் மட்டுமல்ல அது சினிமாவில் என் ஐம்பது ஆண்டுகளின் உழைப்பு" என்றார். ஏ.வி.எம்.மின் ஆசைப்படியே அவரது மகன்கள் அவருக்கு பின் தயாரித்த திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் அவர் புகைப்படத்தை முதலில் தோன்ற செய்து ஏ.வி.எம். புரொடக்ஷ்ன்ஸ் எம்பிளத்தை ஒளிபரப்புகிறார்கள்.
60 ஆண்டுகளை தாண்டி தொடர்ந்து கலை உலகத்தில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் ஒரே ஸ்டுடியோ இந்தியாவிலேயே ஏ.வி.எம். மட்டும்தான். உலகத்திலேயே 60 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஐந்து ஸ்டுடியோக்களில் ஏ.வி.எம்.ஸ்டுடியோவும் ஒன்று. நீண்டகால தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். சமீபத்தில் 167 வது படமாக அஜித் நடித்த 'திருப்பதி' படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. அடுத்து 168வது படமாக டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'சிவாஜி' படத்தை தயாரித்து வருகிறது.
சமீபத்தில் (21.01.2006) இந்திய அரசு ஏ.வி.எம்.மை கௌரவிக்கின்ற வகையில் அவருக்கு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. வருகிற 28.07.2006லிருந்து ஏ.வி.எம்.மின் நூற்றாண்டு விழா ஆரம்பமாகின்றது.
அவரது சாதனைகள் தமிழ் சினிமா உலகில் சாதிக்க துடிப்பவர்களுக்கு டானிக் என்றால் அது மிகையாது.
|
Feedback!
|
|