
Written by: JBR
இந்திய சினிமா என்றால் அது இந்தி சினிமாதான் என மார்தட்டுகிறார்கள் பாலிவுட்டை சேர்ந்தவர்கள். வெளிநாட்டவர்களுக்கும் இந்தி சினிமாக்களும் அமிதாப்பச்சனும், ஷாருக்கானுமே தெரிந்திருக்கிறார்கள். பாலிவுட் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் கலந்து கொள்கிறார். நிக்கோல் கிட்மேன் அவர்களுடன் விருந்து உண்ணுகிறார். ஜார்ஜ் க்ளூனி இந்திப் படங்களை பார்க்க ஆர்வம் காட்டுகிறார்.
மராத்தி, வங்காளி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழிப் படங்களில் பல சர்வதேச தரம் வாய்ந்தவை. இம்மொழியின் கிரிஷ் காசரவள்ளி, அடூர் கோபாலகிருஷ்ணன். அரவிந்தன், மணிரத்னம் போன்றோர் உலக அளவில் புகழ் பெற்றவர்கள். இருந்தாலும் இந்திய சினிமா என்றால் அது இந்தி சினிமாதான் என்ற தோற்றம் இறுக்கமாக எங்கும் பரவியிருக்கிறது. இந்தி சினிமாக்களின் ஆடம்பரமும், அதன் கவர்ச்சியும், ஸ்டார் வேல்யூவும், இந்திய அரசின் இந்தி சார்பு மனப்பான்மையும் இந்த தோற்றத்தை வலுப்படுத்துகின்றன.
இந்த ஊதி பிரம்மாண்டப்படுத்தப்பட்ட பிம்பத்தை கலைப்பது கடினம். ஆனால், சிங்கத்தின் குகைக்குள் சென்று அதன் முன்பு அதைவிட ஆக்ரோஷமாக கர்ஜிக்க முடியும். உன்னைவிட நான் பலசாலி என நிரூபிக்க முடியும். இதனை தமிழ் சினிமா கலைஞர்கள் செய்து வந்திருக்கிறார்களா என்றால், "ஆம்! மற்ற எந்த மொழி கலைஞர்களைவிட தீவிரமாக இந்தி சினிமாவில் கோலோச்சியிருக்கிறார்கள்" என தைரியமாக கூறமுடியும்!
ஜனவரி 12-ந் தேதியை இந்தியாவே எதிர்நோக்குகிறது. முக்கியமாக இந்தியாவின் முதன்மை பணக்காரர்களான அம்பானி குடும்பத்தார் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அன்று மணிரத்னத்தின் 'குரு' ரிலீஸாகிறது. இந்தி சினிமாவின் எந்த நடிகரும், எந்த இயக்குனரும் உருவாக்காத எதிர்பார்ப்பை 'குரு' ஏற்படுத்தியுள்ளது. அம்பானியின் கதையை பின்னணியாக கொண்ட படம் என்பதை விட 'குரு'வின் இயக்குனர் மணிரத்னம் என்பதே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.
இறுக்கமாக இருந்த பாலிவுட்டை பிற மொழியினருக்கும் இணக்கமானதாக மாற்றிய பெருமை மணிரத்னத்துக்கு உண்டு. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வெளியான இவரது 'ரோஜா' இந்தி படவுலகில் அழுத்தமான பாதிப்பை உண்டாக்கியது. போனஸாக ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் இந்தி பேசுகிறவர்களின் மனதுக்கு இனியதாக மாறியது.
அடுத்து வந்த 'பம்பாய்' திரைப்படம் நேரடி இந்திப் படங்களின் வசூலை ஊதித் தள்ளியது. இதனைத் தொடர்ந்து மணிரத்னத்தின் 'நாயகன்' இந்தியில் 'டப்' செய்யப்பட்டது. அத்துடன், இந்திய அளவில் சிறந்த இயக்குனர் மணிரத்னம்தான் என கொண்டாடத் தொடங்கியது பாலிவுட்.
ஒளிப்பதிவாளர்களை பொறுத்தவரை மணிகண்டன், ரவி.கே. சந்திரன், ஜீவா, கே.வி. ஆனந்த், திரு, ரவிவர்மன், ராஜீவ் மேனன், சந்தோஷ் சிவன் என்று தமிழிலிருந்து சென்றவர்களே இந்தி சினிமாவை ஆக்ரமித்துள்ளனர். தமிழ் ஒளிப்பதிவாளர்களுக்கு அங்கு தனிச்சிறப்பும் மரியாதையும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.
ஒளிப்பதிவில் பல யுக்திகளை கையாண்ட பி.சி. ஸ்ரீராம் தற்போது இந்தி படவுலகுக்கு சென்றுள்ளார். அமிதாப்பச்சன், தபு நடிக்கும் 'சீனி கம்' படத்துக்கு பி.சி.தான் கேமரா. இந்தப் படம் வெளிவந்தால் பாதி பாலிவுட் பி.சி. யின் ரசிகர்களாகி விடுவார்கள் என இப்போதே பேசிக் கொள்கிறார்கள்.
மணிரத்னம் அளவுக்கு இந்தியில் பாதிப்பை செலுத்திய மற்றொரு தமிழ் கலைஞர் ஏ.ஆர். ரஹமான். நல்ல படம் எடுப்பவர்கள், அவர்கள் தீபா மேத்தாவாக இருந்தாலும் சரி, அமீர்கானாக இருந்தாலும் சரி, சுபாஷ் கையாக இருந்தாலும் சரி, அனைவரின் விருப்பமும் நம்மூர் ஏ.ஆர். ரஹ்மான்தான். பிரபல ஆங்கில சினிமா மாத இதழ் பாலிவுட்டின் பத்து பவர் பாயிண்டுகளில் இருவராக மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானை தேர்வு செய்திருக்கிறது.
இந்தி சினிமாவில் தமிழ்களின் ஆதிக்கம் முன்பே தொடங்கி விட்டது. அந்தக் காலத்தின் புகழ் பெற்ற இயக்குனர்களான பீம்சிங், ஸ்ரீதர் உள்ளிட்டோர் பல இந்திப் படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனாலும், பாலிவுட்டில் தமிழர்களின் சகாப்தம் உண்மையில் தொடங்கியது கே. பாலசந்தர் காலத்தில். இவர் கமலை வைத்து இயக்கிய 'ஏக் துஜே கேலியே' ஒரு வருடம் ஓடி பல பாலிவுட் ரெக்கார்டுகளை தகர்த்தது. இதனைத் தொடர்ந்து இவர் இந்தியில் இயக்கிய 'ஏக் நபி பஹேலி' மற்றும் 'சனம் தேரி கசம்' ஆகிய படங்களும் பெரும் வெற்றியை ஈட்டின.
அதே காலகட்டத்தில் பாரதிராஜா இரண்டு இந்திப் படங்களை இயக்கினார். இரண்டுமே தமிழ் ரீ-மேக் படங்கள். ஒன்று 'ரெட்ரோஸ்'(சிவப்பு ரோஜாக்கள்). இரண்டாவது 'லவ்வர்ஸ்'(அலைகள் ஓய்வதில்லை).
பாலிவுட்டின் அன்றைய முன்னணி நடிகர் ராஜ்பாப்பர் மற்றும் நடிகை ஸ்மிதா பாட்டீலை வைத்து இயக்குனர் துரை தனது புகழ் பெற்ற 'பசி' படத்தை இந்தியில் ரீ-மேக் செய்தார். தமிழைப் போலவே இந்தியிலும் இப்படம் அதிர்வை ஏற்படுத்தியது.
திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் பாக்யராஜும் இந்திப் படங்களை இயக்கி தனது பெயரை அங்கும் தக்க வைத்துக் கொண்டார்.
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 'இந்தியன்' 'இந்துஸ்தானி' என்ற பெயரில் இந்தியில் டப் செய்யப்பட்டது. இந்தியை கலக்கிய தமிழ் படங்களில் இதுவும் ஒன்று. இதன் கதையை, தொழில்நுட்பத்தை கண்டு பாலிவுட் கலங்கிப் போனது. ஷங்கரின் 'அந்நியன்' படமும் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக விக்ரமின் நடிப்பு பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இவை தவிர அகத்தியன் இந்தியில் ரீ-மேக் செய்த 'காதல் கோட்டை'யும், கே.எஸ். அதியமான் இயக்கிய 'தொட்டா சிணுங்கி' இந்தி ரீ-மேக்கும் குறிப்பிடத் தகுந்த முயற்சிகள்.
தமிழ் படங்களை தமிழ் இயக்குனர்கள் மட்டுமின்றி இந்தி இயக்குனர்களும் ரீ-மேக் செய்வதுண்டு. விக்ரம் நடித்த 'தில்,' மாதவன் நடித்த 'ரன்' (இதனை இந்தியில் ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கியிருந்தார்) 'சேது' (தேரே நாம்) 'அலைபாயுதே' (சாத்தியா) முதலியவை சில உதாரணங்கள். ஷக்தி சிதம்பரத்தின் 'சார்லி சாப்ளின்' படத்தை சல்மான்கான், ஷாயிப் அலிகான் நடிக்க 'நோ என்டரி' என்ற பெயரில் போனிகபூர் இந்தியில் தயாரித்தார். படம் வெற்றி பெறவே அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க போனி கபூர் ஷக்தி சிதம்பரத்திடம் கதை கேட்டிருக்கிறார். இவர்களுடன் ரேவதியின் பங்களிப்பையும் முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும். இவர் இயக்கிய 'பிர்மிலேங்கே' இந்திப் படம் விமர்சகர்களின் பாராட்டுடன் பல விருதுகளையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியில் 'சினிமா' என்ற படத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா இயக்கி வருகிறார். முன்பு இவர் இயக்கியது போல் 'சினிமா' தமிழ் ரீ-மேக் அல்ல. நேரடி இந்திப் படம். படத்தின் கதையை கேட்டு ஆர்வமாக படத்தில் நடித்து வருகிறார் நானா படேகர்.
இவர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் இளம் தலைமுறையும் இந்தி சினிமாவை ஒருகை பார்க்க களம் இறங்குகிறது. 'காக்க... காக்க', 'வேட்டையாடு விளையாடு' படங்களை ஹாலிவுட் ரேஞ்சில் எடுத்த கௌதம் 'வாரணம் ஆயிரம்' படத்திற்குப் பிறகு அனேகமாக இந்திப் படத்தை இயக்குவேன் என்று கூறியிருக்கிறார். ஏ.ஆர். முருகதாஸ் அமீர்கானை வைத்து 'கஜினி' இந்தி ரீ-மேக்கை இயக்குவதன் மூலம் பாலிவுட்டுக்குள் நுழைகிறார். செல்வராகவன் பல ஆண்டுகளாக நல்ல இந்திப்பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அவரை இந்திக்கு கடத்திச் செல்ல போனிகபூர் போன்ற தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.
இவர்களுடன் 'சித்திரம் பேசுதடி' மிஷ்கினும் பாலிவுட்டை பதம்பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்.
இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், கேமராமேன்கள், ஹேமமாலினி, ஸ்ரீதேவி போன்ற நடிகைகள் என சினிமாவின் அனைத்து தரப்பினரும் இந்தி சினிமாவில் அழுத்தமான தடம் பதித்திருக்கிறார்கள். ஆனால் நடிகர்கள்?
ஒரேயொருவர் மட்டுமே இந்தி சினிமாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். அவர் கமல்ஹாசன்! 'ஏக் துஜே கேலியே'மற்றும் 'மூன்றாம் பிறை' 'நாயகன்' 'இந்தியன்' படங்களின் இந்தி டப்பிங் ஆகியவை கமலை இன்றும் சிறந்த நடிகராக அடையாளம் காட்டி வருகிறது. 'அவ்வை சண்முகி' படத்தை 'சாக்சி 420' என்ற பெயரில் கமல் இந்தியில் இயக்கி நடித்து அதில் வெற்றியும் பெற்றார். 'ஹே ராம்','அபய்' போன்ற நேரடி இந்திப் படங்கள் தோல்வியை தழுவினாலும், "நான் தொட்டுப் பார்க்க விரும்பிய நடிகர்" என ஷாருக்கானும், "கமல்ஜிக்காக எதுவும் செய்யலாம்" என மல்லிகா ஷெராவத்தும் ஆச்சரியத்துடன் குறிப்பிடும் நடிகராகவே இந்தியில் அறியப்படுகிறார் கமல். இவரை தொடர்ந்து மாதவனும் இந்தியில் குறிப்பிடத் தகுந்த நடிகராக முன்னேறி வருகிறார்.
இந்திய சினிமா என்றால் அது இந்தி சினிமா மட்டுமே என்ற தவறான பிம்பத்தை உடைக்க முடியாமல் போகலாம். ஆனால், இந்தி சினிமா என்றால் அதில் தமிழர்கள் தவிர்க்க முடியாதவர்கள் என்ற நிலை வருங்காலத்தில் மேலும் வலுப்படுவதை யாராலும் தடுக்க முடியாது!
|
Feedback!
|
|