
Written by: Amalan
தமிழ்த்திரையுலகில் தான்தான் தன்னிகரற்ற படைப்பாளி என்ற அகந்தை சமீபகாலமாக சேரனின் மூளைக்குள் பெவிகால் போட்டு ஒட்டிக்கொண்டுள்ளது.
என்ன பேசுகிறோம் என்பது புரியாமலேயே பத்திரிகையாளர்கள் மீது ஈட்டி எறிவதிலேயே குறியாக இருக்கிறார். இது அத்தனையும் நடந்து வருவது 'ஆட்டோகிராஃப்' வெற்றிக்கு பிறகுதான்.
சேரனின் முரண்பாடுகளை பட்டியல்போட ஆரம்பித்தால் ஒரு மூட்டை தேறும்.
'வெற்றிக்கொடி கட்டு' படத்தில் தேவையற்ற செலவுகளை இழுத்துவிட்டு தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை சேரன் புலம்ப வைத்துவிட்டார் என்று அரசல் புரசலாக பேச்சு நிலவிவந்த நேரத்தில் அவரை நம்பி பணம் போட பயந்தவர்கள் ஏராளம்.
இந்த நேரத்தில் நடிப்பு பக்கம் தலைவைத்த சேரன், சொந்தமாக படம் தயாரிக்க நினைத்து ஆரம்பிக்கப்பட்டதுதான் 'ஆட்டோகிராஃப்'. படம் வளர்ந்துக் கொண்டிருந்தபோது பைனான்ஸ் பிரச்சனையால் அவதிப்பட்ட நேரத்தில் பவ்யமாக நடந்துகொண்டார். ஆனால், படம் வெளியாகி கோடிக்கணக்கில் லாபம் பார்த்தபிறகு சேரனின் தலையை சுற்றி ஒளிவட்டம் வீச ஆரம்பித்தது.
அதுவரை பத்திரிகைகள் இல்லையென்றால் நான் இல்லை என்று கையை கட்டியவர், 'தவமாய் தவமிருந்து' படத்தை ஆரம்பித்தபிறகு பேட்டி கேட்கும் நிருபர்களை மருந்துக்குகூட மதிப்பதில்லை.
'அமைதிப்படை' படத்தில் தேர்தலில் வெற்றிபெற்றதும் சத்யராஜ் கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்து கால்மேல் கால் போடுவாரே அப்படி மாறிப்போனார் சேரன்.
சில பத்திரிகைகள் சத்யஜித்ரேவின் வாரிசு சேரன் என்கிற அளவில் பாராட்டு பத்திரம் வழங்க, அவ்வளவுதான் சேரன் தலையில் கனம்.
'தவமாய்...' படத்தில் இருந்த குறைகளை சுட்டிக்காட்டிய சில பத்திரிகைகள் மீது கொப்பறையில் ஊற்றிய எண்ணெய்யாய் கொதிக்க ஆரம்பித்தார். அவர் அப்படி கொதிக்கும் அளவிற்கு சம்பந்தப்பட்ட பத்திரிகையின் விமர்சனம் நியாயமற்றதாகவும் இல்லை. பி.இ. பட்டதாரியான சேரன் இந்தக் காலத்தில் கை வண்டி இழுக்கும் காட்சியையும், இந்த கதையை சொல்ல இத்தனை காலவிரயம் தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.
இதுவெல்லாம் சேரனுக்கு பிடிக்கவில்லை. நான் நல்ல படைப்பாளி, எதார்த்த சினிமா எடுத்திருக்கிறேன் என்று சுட்டிக்காட்டிய குறைகளை எதிர்த்து குரல் கொடுத்தார்.
விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள பக்குவம் இல்லாத ஒருவர் எப்படி நல்ல படைப்பாளியாக இருக்கமுடியும்? நீங்கள் எதார்த்த சினிமா எடுங்கள் அதற்காக நாலுமணி நேரத்திற்கெல்லாம் கதை சொல்கிறேன் பேர்வழி என்று ஜவ்விழுத்தால் ஆடியன்ஸ்களின் தலைவலிக்கு யார் பொறுப்பு? விமர்சனம் என்பதற்கு சேரனின் அகராதியில் என்ன அளவுகோல் என்பது புரியவில்லை?
ஒரு படத்தின் நிறைகுறைகளை சுட்டிக்காட்டுவதுதான் விமர்சனம். நிறைகளை மட்டும் எழுதுவதற்கு பெயர் முன்னோட்டம். நிஜம் இப்படியிருக்க ஒரு இணைய தளத்தில் எழுதியிருந்த நிருபரை தாக்கி ஒரு தாய் தந்தைக்கு பிறந்திருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டார்கள் என்று மூளையின் கதவுகளை சாத்திவிட்டு முட்டாள்த்தனமாக விமர்சித்த சேரனிடம் மட்டும் என்ன நியாயம் வாழ்கிறது? இப்படி பேசுவது மட்டும் அழகா?
இதெல்லாம் ஒருபுறம் இருக்க சமீபத்தில் புதிதாக இயக்கும் 'மாயக்கண்ணாடி' படத்தின் பிரஸ்மீட்டிங்கிற்கு சில நிருபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தார் சேரன். 'தவமாய் தவமிருந்து' படத்தின் விமர்சனத்தில் ப்ளஸ்களை மட்டுமே எழுதியிருந்த முப்பத்தி சொச்ச பேர்கள்தான் சேரன் லிஸ்டில் இருந்தவர்கள்.
தன் பட பிரஸ்மீட்டிற்கு யார் யாரை கூப்பிடவேண்டும் கூப்பிடக்கூடாது என்பது சேரனின் தனிப்பட்ட விருப்பம். அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. ஆனால் அந்த பிரஸ்மீட்டில் சேரன் பிரயோகித்த வார்த்தைகள்தான் நாகரீகமற்றதாக இருந்துள்ளது.
"என் நல விரும்பிகளை மட்டுமே நான் அழைத்துள்ளேன். இவர்கள் மட்டுமே எனக்குபோதும். எல்லா நிருபர்களையும் அழைத்து பேட்டிக்கொடுத்தால் நான் ஈயம் பித்தளைக்குகூட தகுதியில்லாதவனாக போய்விடுவேன்" என்றிருக்கிறார்.
அப்படியானால் எல்லா நிருபர்களையும் அழைத்து பேட்டிக்கொடுக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றோர்களையெல்லாம் அந்த லிஸ்டில் சேர்க்கிறீர்களா? ஏற்றிவிட்ட ஏணிகள் எல்லாம் வேண்டும் என்ற குணம் இருக்கும் அவர்களெல்லாம் தங்கங்கள். இப்படி இனம் பிரிக்கும் நீங்கள்தான் தகரம் என்பதை உணருங்கள் சேரன்.
சரி அந்த பிரஸ்மீட்டில் உங்கள் நலம் விரும்பும் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்காகவது ஒழுங்காக பதில் சொன்னீர்களா என்றால் அங்கும் தலை கனத்தைதான் பதிலாக இறக்கி வைத்துள்ளீர்கள்.
ஆஸ்கார் விருது பற்றிய கேள்விக்கு, விருதுகளை விரும்புவதில்லை என்னும் பொருளில் பதில்கூறிய சேரன், 'சத்யஜித்ரே வாரிசு' என்று பட போஸ்டரில் தனக்குதானே தம்பட்டம் அடித்திருப்பது முரண்பாடுகளின் ஒட்டுமொத்த உருவம்.
வேண்டாம் சேரன், பத்திரிகைகளிடம் நீங்கள் நட்பாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை தப்பாக இருக்காதீர்கள்!?
உங்கள் கொதிப்பில் நீங்களே வெந்துப்போகாமல் சேரன் மட்டுமே சினிமா அல்ல என்பதை புரிந்துக்கொண்டு செயல்படுங்கள்! |
Feedback!
|
|