
Written by: JBR
என்னை விமர்சிப்பவர்கள் அனைவரும் எனக்கு எதிரிகள் என்ற தொனியில் பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கிறார் சேரன். அதே பேட்டியில், விக்ரமை விட ராஜ்கிரண் சிறந்த நடிகர் என்று கூறியுள்ளார். "விக்ரம் ஒரு மாயை. அந்நியனில் மூன்று கெட்டப்புகளில் அவர் நடித்திருப்பது ஒரு சாதனையே இல்லை" - பேட்டியில் நேரடியாகவே தாக்கப்பட்டிருக்கிறார் விக்ரம்.
தனது படங்களை விமர்சிக்கக்கூடாது. மீறினால் கடுமையான மொழியில் கண்டனம் தெரிவிப்பேன். அப்படி விமர்சிப்பவர்கள் நல்லவர்களே அல்ல என்று தொடர்ந்து முழங்கிவருகிறார் சேரன். அவர் மட்டும் விக்ரமை விமர்சிக்க யார் அதிகாரம் கொடுத்தது? அதுவும் 'சேது', 'காசி', 'பிதாமகன்' என அரைடஜன் நல்லபடங்களை மறந்து அந்நியனை மட்டும் முன்வைத்து?
சேரனை அறிந்தவர்களுக்கு இது வியப்பில்லை! 'தேசிய கீதம்' வெளியாகி படுதோல்வியை தழுவிய நேரம். மக்கள் பிரச்சனை பற்றி பேசும் படங்களை மக்கள் மரியாதை செய்வதில்லை. செய்திருந்தால் 'தேசிய கீதம்' நூறுநாள் ஓடியிருக்கும் என பேசி திரிந்தவர் சேரன். 'ஆட்டோகிராஃப்', 'தவமாய் தவமிருந்து' வெற்றி பெறவும், சேரனின் பேச்சில் மாற்றம். "நல்ல படங்களை வெற்றிபெற வைக்க மக்கள் தயங்குவதில்லை!"
இதேபோல் 'ஆட்டோகிராஃப்', 'தவமாய் தவமிருந்து' பட போஸ்டர்களில் 'உழைப்புக்கு கிடைத்த வெற்றி', 'நல்லவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்', 'மக்கள் சினிமாவின் மகத்தான வெற்றி' போன்ற வாசகங்களை காணமுடியும். இது உழைப்புக்கு கிடைத்த வெற்றியென்றால், சேரனின் படுதோல்வியடைந்த படங்களுக்கு அவர் உழைக்கவில்லையா? அந்த படங்களை இயக்கும்போது சேரன் நல்லவர் இல்லையா? மக்கள் சக்தி அப்போது எங்கே போனது?
நேர்மையான படம் பண்ணுவதாக தம்பட்டம் அடித்துவரும் சேரனின் நேர்மை எப்படிப்பட்டது? அவரது அனைத்து படங்களும் அவர் சிந்தனையில் உதித்த சொந்த சரக்கா?
இல்லை! இதனை சேரனின் முன்னாள் உதவியாளர்கள் அறிவர். சேரன் 'தேசிய கீதம்' படத்தை இயக்க முக்கிய காரணம் ஒரு தொடர்கதை என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால், உண்மை எப்போதும் உவப்பானதாக இருப்பதில்லை.
1997-ம் ஆண்டு ஆனந்த விகடன் வார இதழ், தீபாவளி சிறப்பிதழில் தொடர்கதை ஒன்றை ஆரம்பித்தது. கதையின் பெயர் 'ஆக்ஷ்ன் - நெ.16'. பத்துவார தொடர்கதையான 'ஆக்ஷ்ன் - நெ.16' கதையை எழுதியவர் எழுத்தாளர் மலரோன்.
நான்கு இளைஞர்கள். நான்கு பேருமே நல்லவர்கள். சமுதாய கோபம் கொண்டவர்கள். தங்கள் 16-வது செயல்திட்டமாக மந்திரியை கடத்துவது இவர்கள் பிளான். திட்டமிட்டபடி மந்திரி கடத்தப்படுகிறார். ஆள் அடையாளம் தெரியாமல் இருக்க மந்திரியின் தலை மழிக்கப்படுகிறது.
எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதா இந்த கதை? முன்னும் பின்னும் கொஞ்சம் பூச்சுடன் வந்த சேரனின் 'தேசிய கீதத்'தின் நதிமூலம் இந்த ஆக்ஷ்ன் - நெ.16தான்!
கதையில் வருவதுபோல் தேசிய கீதத்திலும் நான்கு இளைஞர்கள். நால்வருமே நல்லவர்கள். சமுதாய அக்கறை கொண்டவர்கள். கதையில் மந்திரி கடத்தப்பட்டால், தேசிய கீதத்தில் முதல் மந்திரி. அங்கு மொட்டையடிக்கப்படுகிறார் மந்திரி. சினிமாவில் முதல்மந்திரியின் நடுமண்டை மட்டும் மழிக்கப்படுகிறது.
"எனது தொடர்கதையில் வருவது போல் சேரன் படத்தில் வரும் நால்வரும் ஒவ்வொரு குணம் கொண்டவர்கள். ஒருவன் ஆளுமை நிரம்பியவன். இன்னொருவன் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்பவன். கதையில் வரும் கேரக்டர் அமைப்பை அப்படியே தனது படத்தில் பிரதிபலித்திருக்கிறார் சேரன்" என்கிறார் தொடர்கதை எழுதிய எழுத்தாளர் மலரோன்! இதனை சேரனின் அன்றைய உதவியாளர்களும் ஒத்துக்கொள்கிறார்கள்.
இத்துடன் நிற்கவில்லை இந்த விஷயம். இதே எழுத்தாளர் 1997-ல் 'ஆக்ஷ்ன் - நெ.16' கதையை எழுதும் முன், அதே வருட பொங்கல் சிறப்பிதழில் இவரது 'ஒற்றையடி காதல் பாதை' கதை வெளியானது. ஓர் இளைஞன் ஒரே நேரத்தில் பல பெண்களின் மீது (நேர்மையான) காதல் கொள்வதே ஒற்றையடி காதல் பாதையின் கதை. "இந்த கதையின் தலைப்பை 'அன்பை சுமந்தவன்' என்று வைத்திருந்தேன். விகடன் ஆசிரியர் அதை 'ஒற்றையடி காதல் பாதை' என மாற்றினார்" என பழசை நினைவு கூர்கிறார் மலரோன்.
இந்த கதையின் நாயகன், ஆட்டோகிராஃப் நாயகனை போலவே நேர்மையாக காதலிக்கிறான். ஆனால் எந்த காதலும் நிறைவேறுவதில்லை. இதில் இன்னொரு விசேஷம், எப்படி ஆட்டோகிராஃப்பில் ஒவ்வொரு காதலும் வேறுவேறு லேண்ட் ஸ்கேப்பில் நடைபெறுகிறதோ, அதை போல் ஒ.கா.பா. நாயகனும் தனது காதலியை அவர் சுற்றுலா செல்லும் வெவ்வேறு ஊர்களில் சந்தித்து காதலை வளர்க்கிறான்.
ஆட்டோகிராஃப்பின் ஆணிவேர் ஒற்றையடி காதல் பாதையில் வேரூன்றியிருக்கிறது என்பதற்கு இன்னும் பல காரணங்களை நம்மால் அடுக்கமுடியும். ஆனால் நமது நோக்கம் அதுவல்ல. சேரன் எழுத்தாளர்களின் கதையை திருடி சினிமா எடுக்கிறார் என்று அவர் முகத்தில் கரி பூசுவதும் நம் எண்ணம் அல்ல.
நமது நோக்கம் தெளிவானது. சேரன் சொல்வதை போல அவர் மட்டும் அசல் கலைஞன் இல்லை. இங்கு ஓராயிரம் பேர் சேரனைவிட அர்ப்பணிப்பும் அறிவும் கொண்டவர்கள் இருக்கிறார்கள். சேரனுக்கு உதித்த சிந்தனைகளையொத்த கதைகளை, அவர் சிந்திக்கும் முன்பே எழுத்தில் வடித்தவர்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள். தான் மட்டுமே கலைஞன், தான் எடுப்பது மட்டுமே சினிமா என ஆணவத்தை தலையில் சுமந்து கூக்குரலிடுவதை சேரன் முதலில் நிறுத்தவேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை அவர் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டும் சாத்தியப்பட்டால் மட்டுமே உலக அரங்கில் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு படத்தை அவரால் எடுக்கமுடியும். அதற்கு பிறகே சத்யஜித்ரேயின் வாரிசு பட்டமும் வேறு லேபிள்களும் சூட்டிக்கொள்ளும் தகுதி அவரை வந்தடையும். அதற்குரிய தகுதியும் அர்ப்பணிப்பும் சேரனிடம் உள்ளது!
|
Feedback!
|
|