
Written by: JBR
பெரிய பட்ஜெட்டில் படம் பண்ண இயலாதவர்களுக்கும், நேரடி தமிழ் படங்களை தயாரிப்பதற்கு ஒரு பயிற்சியாகவும் இருப்பவை டப்பிங் திரைப்படங்கள். தமிழ் படங்கள் வரவு தொய்வடையும் காலங்களில் தியேட்டரில் ரசிகர்களை இழுத்துப் பிடித்து வைப்பதில் டப்பிங் படங்களுக்கு பெரும் பங்கு உண்டு. மாநிலம் தாண்டிய திறமைகளை இப்படங்களின் மூலமே ரசிகர்கள் அடையாளம் காணுகிறார்கள். தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்த விஜயசாந்திக்கு தமிழில் கௌரவமான வரவேற்பை தெலுங்கிலிருந்து டப் செய்யப்பட்ட 'பூ ஒன்று புயலானது' திரைப்படமே பெற்றுத் தந்தது. இதே போன்று டாக்டர் ராஜசேகரின் 'இது தாண்டா போலீஸ்' படம் தமிழில் டப் செய்யப்பட்டு புதிய ட்ரெண்டை உருவாக்கியதை மறுப்பதற்கில்லை. இந்த வரிசையில் குறிப்பிட வேண்டிய மற்றுமொரு திரைப்படம் ராம்கோபால் வர்மா தெலுங்கில் இயக்கிய 'சிவா'. நாகார்ஜூன், அமலா, ரகுவரன் நடித்திருந்த இப்படம் 'உதயம்' என்ற பெயரில் தமிழில் வெளியாகி இளைஞர்களை பெரிதும் ஆகர்ஷித்தது. கேங்ஸ்டர் திரைப்படங்களுக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை இப்படம் உருவாக்கி தந்தது.
தமிழ் மொழியுடன் அதிகளவு தொடர்புடையது என்பதாலும் தமிழ் தயாரிப்பாளர்களுக்குப் பிடித்த அடிதடி மற்றும் அதிரடி நடனங்கள் இல்லை என்பதாலும் மலையாள திரைப்படங்கள் தெலுங்கு அளவுக்கு தமிழில் டப் செய்யப்படவில்லை. இன்றும் இந்நிலையே தொடர்கிறது என்றாலும் நேரடி மலையாளப் படங்கள் தமிழகம் முழுவதும் பரவலான வரவேற்பை இன்னமும் தக்க வைத்துள்ளது.
ஆனால் இவையெல்லாம் உதிரிகள். டப்பிங் தயாரிப்பாளர்களின் முதல் குறி இன்றும் ஆங்கில திரைப்படங்களே! ஜாக்கிசான், ஜெட்லீ போன்ற மார்ஷியல் ஆர்ட் வீரர்களின் படங்கள், டாம் க்ரூஸ், வேன் டாம், வில் ஸ்மித் போன்ற நடிகர்களின் ஆக்ஷ்ன் திரைப்படங்கள், பீட்டர் ஜாக்சன், டோனி ஸ்காட், ரிட்லி ஸ்காட், ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன்ஸ்பீல் பர்க், ஜான் வூ போன்ற இயக்குனர்களின் பிரமாண்ட திரை உருவாக்கங்கள், சயின்ஸ் பிக்ஷ்ன்ஸ் என டப்பிங் பட தயாரிப்பாளர்களை குஷிப்படுத்தும் ஹாலிவுட் திரைப்படங்கள் நிறைய. (ஹாங்காங் தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜாக்கிசான், ஜெட்லீ ஆகியோர் தற்போது முழுநேர ஹாலிவுட் நடிகர்களாகிவிட்டனர்.)
தெலுங்கு, ஆங்கிலப் படங்களை டப் செய்து வெளியிட்டவர்களின் கவனம் இப்போது இந்தி சினிமாவின் பக்கம் திரும்பியுள்ளது. இந்தியில் வெளியாகும், கவர்ச்சியை முதலீடாகக் கொண்டு தயாரிக்கப்படும் படங்கள் புற்றீசலாக தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கின்றன. இவற்றை அதிகம் வெளியிடும் சென்னை ஆனந்த் தியேட்டரின் நிர்வாகியான கருணாகரன் இது பற்றி கூறும்போது, "இந்தி மற்றும் ஆங்கில டப்பிங் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. வித்தியாசமான கதை, காட்சிகளை விரும்பும் ரசிகர்கள் பெருமளவு டப்பிங் படங்களை தேடி வருகிறார்கள். தொடர்ந்து டப்பிங் திரைப்படங்களை திரையிடுங்கள் என்று எங்களிடம் நேரடியாக கேட்டுக்கொள்ளும் ரசிகர்களும் உண்டு" என்கிறார்.
2004-ம் ஆண்டு வெளியான நேரடி தமிழ் படங்களின் எண்ணிக்கை 88. டப்பிங் திரைப்படங்கள் 41. இத்துடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு (2005) வெளியான டப்பிங் படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதே சமயம் நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை நூறாக உயர்ந்திருந்தது. டப்பிங் படங்கள் 41-லிருந்து 26-ஆக குறைந்தது.
இந்த சரிவிற்கு டப்பிங் படங்களுக்கு வசூலிக்கப்படும் அதிகப்படியான வரி ஒரு காரணம் என்கிறார் டப்பிங் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜே.வி. ருக்மங்காதன். ஆனால், இந்த வருடம் இப்போதே டப்பிங் திரைப்படங்களின் எண்ணிக்கை அரை செஞ்சுரியை தொட்டுவிட்டதாக இச்சங்கம் தெரிவிக்கிறது. தற்போது நேரடி தமிழ்ப் படங்களுக்கு பதினைந்து சதவீதமும் டப்பிங் படங்களுக்கு ஐம்பது சதவீதமும் வரி வசூலிக்கப்படுகிறது. ஐம்பதை பதினைந்தாகக் குறைக்க அரசிடம் வேண்டுகோள் விடுக்கப் போவதாக ருக்மங்காதன் கூறியுள்ளார்.
அதிகம் கவனிக்கப்படாமல் இருந்த டப்பிங் தயாரிப்பில் தற்போது என்றுமில்லாத வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது! இதற்கு காரணம், ரஜினியின் 'சந்திரமுகி'. இந்தியாவில் இந்தி திரைப்படங்களுக்கே அதிகளவு மார்க்கெட் என்ற வியாபாரக் கணக்கை முறித்துபோட்டது 'சந்திரமுகி'. அமீர்கான், ஷாருக்கான், அமிதாப்பச்சன் போன்ற மெகா ஸ்டார்களின் படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகி வசூலிக்கும் கலெக்ஷ்னை விட 'சந்திரமுகி'யின் தென்னாட்டு கலெக்ஷ்ன் அதிகம். இதில் ஈர்க்கப்பட்ட ராகேஷ் ரோஷன், தனது மகன் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் உருவான 'க்ரிஷ்' திரைப்படத்தை தமிழில் 'டப்' செய்து வெளியிட முடிவெடுத்து அதற்கான அறிவிப்பு விழாவை மிகப் பிரமாண்டமான முறையில் சென்னையில் நடத்தினார். இங்குள்ள தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே தேவையாக இருந்த தமிழ் டப்பிங் பட சந்தை இன்று இந்தி மற்றும் ஆங்கிலப் பட தயாரிப்பாளர்களுக்கும் மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. வார்னர் பிரதர்ஸ், டுவன்டியெத் செஞ்சுரி பாக்ஸ், ட்ரை ஸ்டார், கொலம்பியா பிக்சர்ஸ் போன்ற முன்னணி ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களின் சார்பில் தமிழ்நாட்டில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு டப்பிங் திரைப்பட வியாபாரம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவற்றை ரசிகர்களிடம் கொண்டு செல்ல நேரடி தமிழ் படங்களின் அளவுக்கு விளம்பரமும் செய்யப்படுகிறது.
ஆங்கில திரைப்படங்களை இப்படி தமிழில் டப் செய்து வெளியிடுவதால் அது கிராமப்புற ரசிகர்கள் வரை சென்றடைகிறது. அதேநேரம் இப்படி டப் செய்யப்படுவது ஆங்கிலப் படங்களின் மீது ரசிகர்களுக்கு இருந்த கவர்ச்சியை பெருமளவு குறைத்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆங்கில திரைப்படங்களுக்கான ரசிகர்களில் தொண்ணூறு சதவீதத்தினர் அம்மொழி புரியாதவர்கள் அல்லது அரைகுறையாக புரிந்தவர்கள். இந்த புரியாதன்மையால் உருவாகும் கவர்ச்சி அப்படங்களின் கிராபிக்ஸ் மற்றும் ஆக்ஷ்ன் காட்சிகளை பிரமிப்போடு பார்க்க வைக்கிறது. ஹாலிவுட்டின் கதைப்படங்களான 'அமெரிக்கன் பியூட்டி', 'மில்லியன் டாலர் பேபி', 'ஏ பியூட்டி புல் மைண்ட்' போன்றவையோ மார்டின் ஸ்கார்ஸி, ஸ்டீவன் சோடர் பெர்க் போன்ற இயக்குனர்களின் படைப்புகளோ தமிழ்நாட்டில் கவனிக்கப்படாமல் போவதற்கு அவை பெரிதும் கதை, வசனங்களை சார்ந்திருப்பதும், பிரமாண்டம் ஆக்ஷ்ன் இல்லாமலிருப்பதும் இவற்றை புரிந்து கொள்ளும் ஆங்கிலப் புலமை பெரும்பாலான ரசிகர்களிடம் குறைவாக இருப்பதுமே காரணம். இதனாலேயே ஆங்கிலப் புலமை தேவைப்படாத கிராபிக்ஸ் மற்றும் ஆக்ஷ்ன் காட்சிகள் நிறைந்த திரைப்படங்கள் தொடர்ந்து இங்கு வெளியாகி பரவலான வரவேற்பை பெறுகின்றன.
'மெக்கனஸ் கோல்டு', 'டென் கமாண்ட்மென்ட்ஸ்' தொடங்கி ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் நடித்த 'டெர்மினேட்டர் 2 ஜட்ஜ்மென்ட் டே' வரை பல படங்கள் சென்னையில் நூறு நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடின. ஜாக்கிசானின் 'ஆர்மர் ஆஃப்தி காட்' உள்பட பல படங்கள் தமிழ் படங்களுக்கு இணையான வசூலை பெற்றன. சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த 'க்ளிப் ஹேங்கர்' கினு ரீவ்ஸ் நடித்த 'ஸ்பீடு' படங்கள் நூற்றைம்பது நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தன. இவையனைத்தும் டப் செய்யப்படாமல் ஆங்கிலத்திலேயே வெளியானவை என்பது குறிப்படத்தக்கது.
ஹாலிவுட் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டபின் ஐம்பது நாள்களை தாண்டுவதே பெரும்பாடாக உள்ளது. படங்கள் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே அன்றி ஓடும் நாள்களின் எண்ணிக்கை அடியோடு சரிந்தது. ஒரே விதிவிலக்கு ஜேம்ஸ் கேமரூனின் 'டைட்டானிக்'. காதலும் பிரமாண்டமும் சரிவிகித்தில் கலந்த இப்படம் சென்னையில் ஒரு வருடம் ஓடி புதிய சாதனை படைத்தது. இப்படத்தை தவிர்த்து டப்பிங் கலாசாரம் தீவிரமடைந்த பின் வெளியான எந்த ஹாலிவுட் படமும் அதிக நாள்கள் ஓடவில்லை என்பதே உண்மை.
வேற்றுக் கிரகவாசிகள் பூமியை ஆக்ரமிக்க முயல்வது, தீவிரவாதிகளை அழிக்கும் சூப்பர் ஹிரோக்கள் என்று கதையில் வீக்காக இருக்கும் இப்படங்களை தமிழ் மொழியில் 'புரிந்து' பார்க்கும்போது பிரம்மாணடங்களை மீறி ரசிகர்களுக்கு இவை புளித்துவிடுகின்றன. ஹாலிவுட் இராம. நாராயணன் படங்கள் என சாதாரண ரசிகர்கள் விமர்சிக்கும் அளவுக்கு தமிழ் டப்பிங் ஹாலிவுட் படங்கள் மீதிருந்த கவர்ச்சியை துடைத்தெறிந்துள்ளது. முந்தைய ஆண்டுகள் போல் ஆங்கிலப் படங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக தொடர்ந்து ஓடாததற்கு இதுவே காரணம் என்கிறார் சினிமா விமர்சகர் ஒருவர்.
சமீபத்தில் 'கிங்காங்' தவிர்த்து எந்த ஹாலிவுட் டப்பிங் படமும் சரியாக ஓடாதது இவரது கருத்தை மெய்ப்பிக்கிறது. அதேநேரம், டப்பிங் படங்கள் தமிழக கிராமப்புறங்கள் வரை செல்வதால் இதற்கான ரசிகர்கள் அதிகரித்துள்ளதோடு கலெக்ஷ்னும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. தொடர்ந்து படங்கள் டப் செய்யப்படுவதற்கு இதுவே காரணம்.
வருகிற ஒன்பதாம் தேதி வெளியாகயிருக்கும் டாம் க்ரூஸ் நடித்த 'மிஷன் இம்பாசிபிள் III' படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு 45 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளது. டப்பிங் பட வரலாற்றில் இதுவொரு சாதனை. மீடியம் பட்ஜெட்டில் சுமாரான ஹீரோவை வைத்து தயாராகும் நேரடி தமிழ் படத்துக்கு போடப்படும் பிரிண்டுகளைவிட இது அதிகம் என்பதிலிருந்து டப்பிங் பட வியாபார சந்தையின் விஸ்தரிப்பை உணர முடியும்.
இந்த டப்பிங் கலாசாரம் கவர்ச்சி, பிரமாண்டம், கிராபிக்ஸ், ஆக்ஷ்ன் என்று தேங்கிப்போகாமல் கலைப்படங்களையும் உள்ளிழுத்துக்கொண்டால் மட்டுமே அதன் முழுமையை எட்டும்!
|
Feedback!
|
|