
Written by: JBR
சினிமா நட்சத்திரங்கள் அரசியல் வானில் ஜொலிப்பது தமிழகத்தில் அதிகம். ஐந்து முதல்வர்களை தமிழகத்துக்கு உருவாக்கி தந்திருக்கிறது நமது சினிமா. இந்த உறவு முற்றுப்பெறாத ஒரு தொடர்கதை!
எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் நடிகர்களின் ஆதிக்கம் அதிகம். இந்த நட்சத்திர போட்டியில் திராவிடக் கட்சிகளே முன்னணியில் இருக்கின்றன. அ.தி.மு.க. வை பொறுத்தவரை ஏற்கனவே எஸ்.எஸ். சந்திரன் எம்.பி.யாகவும், ராதாரவி எம். எல். ஏ.வாகவும் உள்ளனர். இக்கட்சியின் நெடுநாளைய உறுப்பினர்கள் குண்டுகல்யாணம், தாமு மற்றும் நடிகைகள் அம்பிகா, ராதா, சி. ஆர். சரஸ்வதி, வாசுகி ஆகியோர். எஸ்.வி.சேகர் தனது பா.ஜ.க. அனுதாபி இமேஜை துறந்து ஏற்கனவே அ.தி.மு.க. வில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டுள்ளார்.
தி.மு.க. வின் நெடுநாள் உறுப்பினராக இருந்த நடிகர் பாண்டியன் இன்று தீவிர அம்மா விசுவாசி. ஆரம்பகால அ.தி.மு.க. உறுப்பினர் விஜயகுமார் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார். செந்தில், ஆனந்தராஜ் ஆகியோர் கட்சியில் இணைந்த கையோடு பிரச்சாரத்திலும் தீவிரமாகியுள்ளனர். அம்மா கட்சியில் சமீபத்தில் தன்னை இணைத்துக் கொண்ட மற்றுமொரு பிரபலம் நடிகர் முரளி.
இவர்களைத் தவிர அ.தி.மு.க. வுக்கு இலவசமாக கிடைத்திருக்கிறது ஒரு பிரச்சார பீரங்கி! அடுக்குமொழியில் வெளுத்துக்கட்டும் விஜய டி.ஆர். லட்சிய தி.மு.க. நிறுவனராக இருந்து கொண்டே அ.தி.மு.க. வுக்கான பிரச்சாரத்தில் குதித்துள்ளார். தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்ற இவரது வெறி, அ.தி.மு.க. வுக்கு சாதகமான அம்சம்.
தி.மு.க.வில் நடிகர் நெப்போலியன் எம்.எல்.ஏ. வாகவும், சரத்குமார் எம்.பி.யாகவும் உள்ளனர். இது தவிர ராதிகா, 'பசி'சத்யா, சந்திரசேகர், தியாகு, குமரிமுத்து, இயக்குனர் ராமநாராயணன், தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் என பெரிய பட்டாளமே உள்ளது. ஆனாலும் தேர்தல் நேரத்தில் தி.மு.க.வுக்கு வந்துசேரும் பிரபலங்கள் கிட்டத்தட்ட யாருமில்லை என்பது பலத்த அடி.
நடிகர்களின் பிரபலம் தங்களுக்கு கூட்டம் சேர்த்து தரும் என்பதே அரசியல் கட்சிகள் இவர்களை தேர்தல் நேரத்தில் களம் இறக்க காரணம். அதே நேரம் இந்தமுறை பிரச்சாரத்துடன் தேர்தலில் சீட் கேட்டு பலரும் கட்சி தலைமையை அணுகியிருக்கிறார்கள்.
ஏற்கனவே மயிலாப்பூரில் போட்டியிட்ட எஸ்.வி.சேகர் அதே தொகுதியை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. நடிகர் செந்தில் கடலாடி அல்லது முதுகுளத்தூரில் போட்டியிட வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. வின் பிரச்சார பீரங்கியாக நெடுநாளாக இருந்துவரும் குண்டுகல்யாணம், தாமு போன்றவர்களும் இந்தமுறை எம்.எல்.ஏ பிரமோஷனை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள்.
தி.மு.க. தரப்பில், மீண்டும் வில்லிவாக்கம் தொகுதியை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிறார் நெப்போலியன். சந்திரசேகருக்கு திண்டுக்கல் அல்லது உசிலம்பட்டி இதில் ஏதேனும் ஒன்று கிடைக்கக்கூடும்.
நட்சத்திரங்கள் பல இருந்தாலும் நிலவு ஒன்றே ஒன்றுதான். இந்தமுறை அந்த நிலவு (மூன்றாம் பிறையாக இருந்தாலும்.....!) தேசிய முற்போக்கு திராவிடகழகத்தின் தலைவர் விஜயகாந்த்! சமீபத்திய கருத்துக் கணிப்பு இவரது கட்சியை தமிழக அரசியலின் மூன்றாவது பெரிய சக்தியாக அறிவித்திருக்கிறது. அந்த தெம்பில் சூறாவளி சுற்றுப்பயணத்தில் இவர் கலக்கிக் கொண்டிருந்தாலும் இரண்டாம்கட்ட தலைவர்கள் இல்லாததும், இரண்டு திராவிட கட்சிகளும் இவரை கண்டு கொள்ளாமல் இருப்பதும் மிகப்பெரிய பலவீனம்!
25 ஆண்டுகள் சினிமாவில் நடித்து, நடிகர் சங்க தலைவராகவும் இருக்கும் விஜயகாந்துக்கு கோடம்பாக்க ஆதரவு அமோகமாக கிடைத்திருக்க வேண்டும். ஆச்சரியம்.... அவரது படங்களில் தவறாமல் இடம்பெறும் நெருங்கிய நண்பர் ஆனந்தராஜே அ.தி.மு.க.வில் சேர்ந்து இவருக்கு எதிராக மைக் பிடிக்கிறார். இவரால் முன்னுக்கு வந்த மன்சூர் அலிகானும் இப்போது எதிரணியில்! தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் கோடம்பாக்கம் இவருக்கு பாராமுகமாகவே இருப்பது சோகம்!
சினிமாவைப் போலவே கார்த்திக்கின் அரசியல் பிரவேசத்திலும் குளறுபடிகள். பொதுச்செயலாளர் பதவி தந்தால்தான் பார்வர்டு பிளாக் கட்சியில் இணைவேன். இல்லையென்றால் தனிக்கட்சிதான் என்று வீரம் பேசியவர் இப்போது கட்சி தலைவர் பதவிக்கு தலையசைத்து திராவிட கட்சிகளுடன் பேரம் பேசி வருகிறார். இவர் தேர்தலில் நிற்பது நூறு சதவிகிதம் உறுதி!
ம.தி.மு.க.வின் பிரச்சாரக்கூட்டங்களில் சேரன் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற பெட்டிங் கோடம்பாக்கத்தை கலக்குகிறது. வை.கோ.வின் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவாக சேரன் பலமுறை வாய்ஸ் கொடுத்ததால் இந்த எதிர்பார்ப்பு. வை.கோ.வுக்கு கலையுலகிலிருந்து கிடைத்துவரும் மிகப்பெரிய ஆதரவுக்கரம் தயாரிப்பாளர் எஸ்.தாணு. எம். எல்.ஏ. சீட் எதுவும் இவர் எதிர்பார்ப்பதாக தெரியவில்லை.
இவர்களைத் தவிர அனைவர் பார்வையும் குவிந்துள்ள மற்றுமொரு பவர்பாயிண்ட் ரஜினிகாந்த்! இவரது 'வாய்ஸ்'க்கு இருக்கும் சக்தி அரசியல்கட்சிகளுக்கு தெரியுமென்பதால் இவரை வளைத்து போட்டால் வெற்றி நிச்சயம் என்று வேலை செய்கிறார்கள். ஆதரவு வாய்ஸ் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, எதிர்வாய்ஸோ எதிர்முகாமுக்கு இவர் ஆதரவோ தராமல் இருந்தால் அதுவே போதும் என்று நினைக்கிறார்கள் ஒவ்வொரு கட்சியினரும். லேடி சூப்பர்ஸ்டார் விஜயசாந்தி இவருக்கு நேர் எதிர். வெளிப்படையான அம்மா ஆதரவாளரான இவர், அ.தி.மு.க. வுக்கு பிரச்சாரம் செய்யலாம். பி.ஜே.பி.யில் இருந்து பிரிந்து தனிக்கட்சி துவங்கியிருக்கிறார் விஜயசாந்தி. கட்டுப்படுத்த பா.ஜ.க.வும் இல்லை என்பதால், இவரை தாராளமாக அ.தி.மு.க. மேடையில் தரிசிக்கலாம்.
வழக்கம் போல இந்த முறையும் தேர்தல்களத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கு பஞ்சமில்லை. அதேபோல் இவர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களில் மக்கள் வெள்ளத்திற்கும் குறைவிருக்காது. சினிமாவில் அனைவருக்கும் தெரிந்தவராக இருப்பதும் திரையில் வில்லன்களை அழிப்பதுமே ஒருவர் அரசியல்வாதியாக மாற போதுமானதா? பிரபலம் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களுக்கோ இவர்கள் கைகாட்டும் நபர்களுக்கோ ஓட்டளிப்பது சரியா? ஒருவர் சிறந்த வக்கீலாக இருக்கிறார் என்பதற்காக யாரும் ஓபன்ஹார்ட் சர்ஜரி செய்ய அவரை அனுமதிப்பதில்லை. அதே நேரம் ஒரு நடிகரை அவரை நடிகராக நமக்குத் தெரியும் என்பதற்காக மட்டும் ஓட்டளித்து எம்.எல்.ஏ ஆக்குவது ஏன்?
விடை தெரியாத கேள்விகளுக்கு உடனே விளக்கம் பெறமுடியாவிட்டாலும் இப்படியான கேள்விகளும் இருக்கின்றன என்பதை இந்த தேர்தலாவது உணர்த்தினால், நமது நட்சத்திர மோகத்துக்கு ஒரு விமோசனம் கிடைக்கும். நாடும் உருப்படும்! |
Feedback!
|
|