
Written by: JBR
உலக திரைப்படங்கள் குறித்து அறியவும், அவைகளின் போக்குகளை புரிந்து கொள்ளவும் நமக்கு துணையாக இருப்பவை சர்வதேச திரைப்பட விழாக்கள். பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், அவற்றின் கலைகள் சங்கமிக்கும் பெருவெளி இந்த விழாக்கள். தீவிர சினிமா பார்வையாளர்கள் எதிர்நோக்கும் மகிழ்ச்சியான திருவிழா இவை என்றால் மிகையில்லை.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம் போன்ற பெரு நகரங்களில் அரசே சர்வதேச திரைப்பட விழாக்களை வருடந்தோறும் நடத்தி வருகிறது. அல்லது சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்த உதவி செய்கிறது.
இந்தி, தெலுங்கு திரைப்படங்களுக்கு அடுத்தப்படியாக அதிக திரைப்படங்களை உருவாக்கும் சென்னையில் 1991-ம் ஆண்டிலிருந்து 2003-ம் ஆண்டு வரை சர்வதேச திரைப்பட விழா ஒன்றுகூட நடைபெறவில்லை. ஐந்து முதலமைச்சர்களை நாட்டுக்கு தந்தது தமிழ் சினிமா என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சினிமா குறித்த சினிமாக்காரர்களின், வெகு ஜனங்களின் தட்டையான புரிதலே இவ்வகை திரைப்பட விழாக்கள் நடைபெறாமல் போனதற்கு காரணம். தங்கள் எல்லைக்கு வெளியே நடக்கும் எதையும் தெரிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ, அவற்றை முயன்று பார்க்கவோ தேவையான விசால மனம் நமமிடம் இல்லாமல் போனது துரதிர்ஷ்டம். இந்த மனநிலையை பிரதிபலிக்கும் அரசுகள் நமக்கு அமைந்தது அதைவிட துரதிரஷ்டம்.
தீவிர சினிமா ஆர்வலர்களின் நெடுநாளைய கனவான சர்வதேச திரைப்பட விழா 2003-ம் ஆண்டு சென்னையில் சாத்தியமானது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம். இதனை சாத்தியப்படுத்தியது தமிழ் சினிமாவை சார்ந்தவர்களோ, அரசோ, சினிமாவை குறித்து எழுதியே சர்குலேஷனை உயர்த்தும் தமிழின் நெ. 1 பத்திரிகைகளோ, வெகுஜன அமைப்புகளோ அல்ல. நல்ல சினிமா மீதுள்ள ஆர்வத்தில் உருவான இன்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) என்ற அமைப்பே இதனை சாத்தியப்படுத்தியது.
ICAF என சுருக்கமாக அழைக்கப்படும் இவ்வமைப்பு 1975-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. 1975-ம் ஆண்டு சென்னை தேவி தியேட்டர் காம்ப்ளக்ஸில் இவ்வமைப்பு சார்பில் கனடியன் பிலிம் பெஸ்டிவல் நடத்தப்பட்டது. இதுவே இதன் முதல் திரையிடல். 1977-ம் ஆண்டு ஜனவரி 11-ந் தேதி இவ்வமைப்பு முறைப்படி பதிவு செய்யப்பட்டது.
சினிமா ஆர்வலர்களை உறுப்பினர்களாக இணைத்து தொடர்ந்து சர்வதேச திரைப்படங்களை ICAF திரையிடத் தொடங்கியது. மிகக் குறுகிய காலத்திலேயே தென் இந்தியாவின் இரண்டாவது பெரிய அமைப்பாக இது வளர்ந்தது.
2003-ம் ஆண்டு ICAF பெரு முயற்சியால் சினிமா ஆர்வலர்களின் நெடுநாளைய கனவான சர்வதேச திரைப்பட விழா சென்னையில் சாத்தியமானது. 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து பதினேழாம் தேதிவரை 'சென்னை சர்வதேச திரைப்பட விழா' என்ற பெயரில் மிகப் பெரிய சர்வதேச திரைப்பட விழாவை ICAF ஒருங்கிணைத்தது. பதினேழு நாள்கள் நடந்த இவ்விழாவில் 17 நாடுகளை சேர்ந்த அறுபத்து மூன்று திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவ்விழாவில் இசையமப்பாளர் ஏ.ஆர். ரஹமான், நடிகை குஷ்பு, இயக்குனர் கிரிஷ் காசரவள்ளி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டனர். இந்த விழாவை நேஷனல் பிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனுடன் (NFDC) இணைந்து நடத்தியது ICAF.
முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவின் பலத்தில் அடுத்த ஆண்டும் ICAF திரைப்பட விழாவை நடத்தியது. 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினேழாம் தேதியிலிருந்து இருபத்தி நான்காம் தேதிவரை நடந்த இரண்டாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இருபத்தியேழு உலக நாடுகளை சேர்ந்த எண்பத்தி ஒன்பது திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பிரபல இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். தமிழிலிருந்து கலந்து கொண்டவர்கள் பாரதிராஜா மற்றும் பாலா.
மூன்றாவது சர்வதேச திரைப்பட விழாவை மேலும் சிறப்பானதாக, பயனுள்ளதாக நடத்த ICAF திட்டமிட்டது. அதன்படி, பல்வேறு நாடுகளை சேர்ந்த இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுடன் பார்வையாளர்கள் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. மேலும் அவர்கள் தங்கள் துறைசார்ந்த கருத்துக்களை பரவலாக பார்வையாளர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ICAF - ன் சீரிய செயல்பாட்டால் மூன்றாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஆதரவுகள் பெருகின. இந்திய அரசும், தமிழக அரசும் திரைப்பட விழாவுக்கான உதவிகளை செய்தன. அத்துடன் Max Muller Bhavan, Allaince Francaise, British Council போன்ற கலாசார அமைப்புகளும் ICAF-ன் பணியில் தங்களையும் இணைத்துக் கொண்டன. மொத்தம் 34 நாடுகளை சேர்ந்த 102 திரைப்படங்கள் தென்னிந்திய வர்த்தகசபை அரங்கிலும், ஆனந்த், லிட்டில் ஆனந்த் திரையரங்குகளிலும் திரையிடப்பட்டன. 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இவ்விழா தமிழ் சினிமாவிலும், தமிழகத்திலும் குறிப்பிடத்தகுந்த அதிர்வை ஏற்படுத்தியது. மற்ற திரைப்பட விழாக்களைவிட அதிக அளவில் தமிழ் திரைக்கலைஞர்களை திரையரங்குகளில் காண முடிந்தது.
மூன்று சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்திய ICAF, அதே உற்சாகத்துடன் நான்காவது விழாவுக்கான ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து வருகிறது. ஏறக்குறைய நூறு திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பிரெசில், சீனா, செக் குடியரசு, கனடா, சிலி, டென்மார்க், எகிப்து, பின்லாந்த், ஜெர்மனி, ஈரான், இஸ்ரேல், இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, கசகஸ்தான், லெபனான், நார்வே, பிலிப்பைன்ஸ், போலந்த், ஸ்பெயின், சுவிட்சர்லாந்த், தாய்லாந்த், தைவான், துருக்கி ஆகிய நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.
டெல்லியிலுள்ள பிரெஞ்ச் தூதரகம் எட்டு பிரெஞ்ச் நகைச்சுவை படங்களை திரையிடுவதற்காக அளித்துள்ளது. 'Haha Film Festival' என்ற பெயரில் திரையிடப்படும் இத்திரைப்படங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இயக்குனர் கே. பாலசந்தரின் திரைப்படங்கள் சிறப்பு திரையிடல்களாக திரையிடப்படுகின்றன.
இம்மாதம் பதினைந்தாம் தேதி நான்காவது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. இவ்விழாவினை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கும் அழைப்பு விடுத்திருக்கிறது ICAF.
பதினைந்தாம் தேதி முதல் இருபத்தியிரண்டாம் தேதிவரை சென்னை பிலிம்சேம்பரிலும், உட்லண்ட்ஸ் மற்றும் உட்லண்ட்ஸ் சிம்பனி திரையரங்குகளிலும் படங்கள் திரையிடப்படுகின்றன. சென்ற ஆண்டைப் போலவே உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைக்கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுடன் உரையாடவும், கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும் ICAF ஏற்பாடுகள் செய்துள்ளது.
ரசனையில் புத்தொளியை ஏற்படுத்தும் சென்னை சர்வதேச திரைப்பட விழா தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு. அதனை பயன்படுத்திக் கொள்வது அனைவரின் கடமை!
|
Feedback!
|
|