
Written by: JBR
கட்டுப்பாடற்ற சுதந்திரம் அழுத்தமான உறவுகளுக்கு இடையே(உதாரணமாக தந்தை-மகன், தாய்-மகள், கணவன்-மனைவி, காதலன்-காதலி) உருவாக்கும் நிலையில்லாதன்மையையும் அதன் விளைவாக உறவுகளுக்கு நடுவில் எழும் மோதல்களையும் பிரெஞ்சு திரைப்படங்கள் அழுத்தமாக பதிவு செய்கின்றன.
20-12-2005 அன்று திரையிடப்பட்ட இயக்குனர் MAURICE PIALAT-ன் LOU LOU மற்றும் OLIVE DAHAN-ன் LA VIE PROMISE(The promosed life) படங்கள் இந்த வகையை சேர்ந்தவை.
இத்தாலி இயக்குனர் PIERO SANNA இயக்கிய 'LA DESTINAZIONE' திரைப்படம் விழாவின் குறிப்பிடத்தகுந்த படம்.
ரோமில் Carabinieri ஆர்மியில் பயிற்சி பெறும் இளைஞன் Sardinia-வில் உள்ள Coloras என்ற சிறு நகருக்கு அனுப்பப்படுகிறான். அங்கு ஆடு மேய்க்கும் மனிதனை கொலை செய்யும் நபர்களை கண்டுபிடிக்கும் பணி அவனுக்கு கொடுக்கப்படுகிறது. இளைஞனும் அவனது சகவீரர்களும், கொலையாளிகளை கண்டுபிடிக்கிறார்கள். கொலையை நேரில் பார்த்த கொலையுண்டவரின் மகன் கொடுக்கும் வாக்குமூலம் வலுவற்றது என கொலையாளிகள் தண்டனையின்றி விடுதலை செய்யப்படுகிறார்கள். தொடர்ந்து சிறுவனை அவர்கள் மிரட்டிவரும் நிலையில் தற்கொலை செய்து கொள்கிறான் சிறுவன். இடையில் ராணுவ இளைஞன் அவ்வூர் பெண்ணிடம் காதல் கொண்டதற்காக கடுமையாக தாக்கப்படுகிறான்.
வேலையின்மையும், இரண்டு இனங்களுக்கிடையேயான துவேஷமும் இயல்பு வாழ்க்கையை எவ்வளவு தூரம் இறுக்கமானதாக இருளடைந்ததாக மாற்றுகிறது என்பதற்கு இந்த இத்தாலிய படம் சிறந்த உதாரணம்.
படத்தின் சிறப்பு அம்சம், ஒளிப்பதிவு. விடியற்காலை முதல் நள்ளிரவுவரை மாறுபடும் ஒரு நாளின் வெவ்வெறு ஒளிகளை அப்படியே கண்முன் கொண்டுவருகிறது கேமரா. ராஜஸ்தான் நகரை நினைவுபடுத்தும் coloras நகரின் கட்டிடங்களும், பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளும் இந்திய பார்வையாளர்களுக்கு, படத்துடன் நெருக்கத்தை அதிகப்படுத்தும்.
சர்வதேச திரைப்படங்களின் ஒளிப்பதிவை பற்றிப் பேசும் போது விழாவில் கலந்து கொண்ட D.F.T. மாணவருக்கு நேர்ந்த அனுபவத்தை இங்கு குறிப்பிடுவது முக்கியமானது.
போலந்த் திரைப்படமான 'MY NIKKIFOR' திரையிட்டு சற்று நேரத்திற்குப் பிறகு அரங்கத்துக்குள் நுழைந்திருக்கிறார் இந்த மாணவர். பொதுவாக இரண்டொரு கணங்களில் திரையிலிருந்து வரும் ஒளிக்கு கண்கள் பழகிவிடும். ஆனால் மாணவருக்கோ அரைமணி நேரமாகியும் இருக்கையை கண்டுபிடிக்க முடியவில்லை. திரையில் பனிப்பொழிவை காட்டிய நேரம் மட்டுமே சிறிது வெளிச்சத்தை தியேட்டருக்குள் பார்க்க முடிந்திருக்கிறது. தமிழ் படங்களில் சாதாரண காட்சிகளையும் அசாதாரண ஒளியில் படம் பிடிப்பதும், உலக திரைப்படங்களில் இந்த அபத்தம் தவிர்க்கப்படுவதும்தான் மாணவரின் திண்டாட்டத்திற்கு காரணம்.
தமிழ்நாட்டின் திரைகளும் புரொஜெக்டர்களும் தரம் குறைந்தவை. ஆகவே அதற்கேற்ப தமிழ் ஒளிப்பதிவாளர்கள் ஒவ்வொரு காட்சியிலும் அதிக ஒளியை பயன்படுத்த வேண்டியதாகிறது என்ற ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் கூற்று இங்கு நினைவுகூரத்தக்கது.
பார்வையாளர்களை கவர்ந்த இன்னொரு திரைப்படம் 'A SILENT LOVE.' கனடாவில் தயாரானது. மான்ட்ரிலில் பேராசிரியராக இருக்கும் நடுத்தரவயது மனிதர் இன்டெர்நெட் மூலம் மெக்ஸிகன் ஆசிரியையை திருமணம் செய்து மான்ட்ரில் அழைத்து வருகிறார். கூடவே மனைவியின் தாயாரும். பாஷை புரியாமல் இவர்கள் மூவரும் சைகையால் செய்தி பரிமாறிக்கொள்வது நகைச்சுவை. திருமணமான சில நாள்களிலேயே பேராசிரியருக்கு மனைவியின் தாய்மீது காதல் ஏற்படுகிறது. மகளின் வாழ்க்கையை நினைத்து தாய் சொந்த ஊருக்கே திரும்புகிறார். அங்கேயும் பேராசிரியர் அவரை தொடர்ந்து வருகிறார்.
விருப்பம், வயது இவற்றைத் தாண்டி மனிதர்களின் உள்ளார்ந்த ரசனையே அவர்களை வழிநடத்துகிறது என்பதை நகைச்சுவையுடன் காட்சிப்படுத்துகிறது FREDERICO HIDALGO-வின் இந்தப் படம்!
|
Feedback!
|
|