
Written by: JBR
தமிழனத்தின் கலாசார அடையாளங்களில் ஒன்றாக இளையராஜாவின் இசை விளங்குகிறது. 'அன்னக்கிளி' திரைப்படத்தின் மூலம் இவரது இசை தமிழர்களுக்கு அறிமுகமானது. என்றாலும், இவரது மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனின் கம்யூனிஸ்ட் கொள்கை விளக்க கூட்டங்களுக்கு உடன் சென்றதிலிருந்து இளையராஜாவின் இசைப் பயணம் தொடங்கியது எனலாம். பாவலர் வரதராஜனை குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தன், "காலத்தை கடந்த கவிஞன்" என்கிறார். இவர் ஒரு இசைமேதை. இவரது பாதிப்பு இளையராஜாவிலும் உண்டு.
பண்ணைபுரத்திலிருந்து வந்து இசைக்கோட்டையை தனதாக்கிக் கொண்ட இளையராஜாவை வெறும் இசைக்கலைஞராக சுருக்குவது கடினம். சிம்பொனி, சிம்பொனியில் திருவாசகம் என உலக அளவில் தனது இசையை எடுத்துச் சென்றவர் என்ற வகையில் இவர் ஒரு இசைஞானி. பாடல்கள், கவிதைகள் புனைவதில் இவரொரு கவிஞர். அவனின்றி அணுவும் அசையாது என இதுவரை சம்பாதித்த அனைத்து புகழையும் ஆண்டவனிடம் சமர்ப்பிக்கும் ஆன்மீகவாதி!
பன்முக ஆளுமை கொண்ட இந்த பாவலர் சினிமாவில் நுழைந்த பிறகே, இந்தி பாடல்களை உச்சரித்த தமிழ் உதடுகளில் தமிழ் ஸ்வரங்கள் மலரத்தொடங்கின. தமிழர்களின் வாழ்வை நுட்பமான முறையில் இசையோடு கோர்த்ததில் இவரது பங்களிப்பு மகத்தானது. 850-க்கும் மேல் திரைப்படங்கள், 5,000-க்கும் மேல் மெட்டுக்கள் என சினிமாவில் இவரது இசை சாம்ராஜ்யம் மிகப்பெரியது.
சினிமா பின்னணி இசை சேர்ப்பில் இளையராஜாவே இன்றும் முன்னணியில் உள்ளார். பொதுவாக காட்சியின் நீளத்தை ஸ்டாப் கிளாக்கில் கணக்கிட்டு இசைக்கோவை அளிப்பது இசையமைப்பாளர்களின் வழக்கம். ஆனால், காட்சிக்கேற்ற இசைக்கோவையை துல்லியமாக எந்த உபகரணங்களும் இன்றி அமைப்பவர் இவர் மட்டுமே. வெளிநாட்டு இசை வல்லுநர்களை ஆச்சரியப்படவைத்த இசைஞானியின் திறமை இது.
"இளையராஜாவின் இசை என்னுடைய அனைத்துப் படங்களுக்கும் இன்னொரு முகத்தை அளித்திருக்கிறது" - இது பாலுமகேந்திராவின் பாராட்டு. இந்திய இசை வல்லுநர்களில் முதல் முதலில் சிம்பொனி அமைத்து மேஸ்ட்ரோ என்ற பட்டத்தை தனதாக்கி கொண்டவர் இளையராஜா. இந்த முன்னேற்றத்திற்கு அவரை தயார்படுத்தியது எது? இளையராஜாவே இதுபற்றி குறிப்பிடுகிறார்.
சினிமாவில் நுழைய வேண்டுமென்ற ஆர்வத்தில் சகோதரர்களுடன் சென்னை வருகிறார் இளையராஜா. சென்னை பட்டணத்தில் அவருக்கு தெரிந்தவர், உதவி செய்கிறவர் யாருமில்லை. தெரிந்த ஒரேயொருவர் என்றால், அது எழுத்தாளர் ஜெயகாந்தன்.
அவரை காணச்செல்கிறார் இளையராஜா. உங்களை நம்பிதான் வந்திருக்கிறேன் என்று அவரிடம் கூறுகிறார். அடுத்தகணம் இடியென வருகிறது ஜெயகாந்தனின் பதில், "எவன் என்னை நம்பி வரச்சொன்னான்?"
முதலில் நீ உன்னை நம்பு என்று ஜெயகாந்தன் அன்று சொன்ன அறிவுரையே இசையின் எல்லா சிகரங்களையும் இளையராஜா எனும் சாமானியன் எட்டிப்பிடிக்க காரணம்.
வரும் 23-ம் தேதி இசையுலகின் இன்னொரு சிகரத்தையும் தன்வசமாக்குகிறார் இளையராஜா. இசைக்கலைஞர்களை வைத்து இசைநிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திவரும் லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவுக்காக இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். இதன் சிறப்பம்சங்களை பட்டியலிட்டால், விழி பிதுங்குகிறது நமக்கு.
இராயப்பேட்டை வெஸ்லி பள்ளி மைதானத்தில் 23-ந் தேதி மாலை ஆறுமணிக்கு இவ்விழா நடைபெறுகிறது. இளையராஜா இசையமைத்த பாடல்கள் மட்டும் இவ்விழாவில் பாடப்படுகின்றன. முக்கியமாக அனைத்துப் பாடல்களையும் இளையராஜாவே பாடுகிறார்.
ஆம்! உலகிலேயே ஒரு இசையமைப்பாளர் தான் இசையமைத்த பாடல்களை தன் குரலாலே விழா முழுவதும் பாடப்போவது இதுவே முதல் முறை. இச்சாதனை விழாவில் இளையராஜாவுடன் சித்ரா, ஸ்வர்ணலதா, சசிரேகா, மாலதி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி போன்ற பாடகர்கள் இணைந்து பாட உள்ளனர்.
இந்நிகழ்ச்சியை சிரிப்பும் சிந்தனையுமாக தொகுத்து வழங்குகிறார் விவேக். பாடல்களுக்கு நடுவில் திரையுலக நட்சத்திரங்கள் இளையராஜாவுடனான தங்கள் உறவை பகிர்ந்துகொள்ளும் பரவச நிகழ்ச்சியும் உண்டு.
இசை நிகழ்ச்சி என்றாலே எட்டி நிற்கும் இளையராஜா, இதற்கு எப்படி இசைந்தார்?
நட்பும் இலக்கியமுமே காரணம் என்கிறார் லஷ்மன். இளையராஜாவின் இனிய நண்பரும் நாற்பது வருடங்களாக 'முல்லைச்சரம்' இலக்கிய இதழை நடத்தி வருபவருமான பொன்னடியாரின் 'முல்லைச்சரம்' பத்திரிகை நலநிதிக்கு இந்த விழாவின் வருமானம் அளிக்கப்படுகிறது.
ஒரு இசைக்கலைஞன் இலக்கியத்துக்கு செய்யும் மாபெரும் உதவி இவ்விழா. லஷ்மன் ஸ்ருதி இந்த பிரமாண்ட விழாவுக்கு வைத்திருக்கும் பெயர்,
ONE MAN SHOW!
|
Feedback!
|
|